கோடையில் இருக்குது கொடை!

வெயிலிலிருந்து உடலை தற்காத்துக் கொள்ள, வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி, அந்த நீரை அடிக்கடி பருகலாம்.

வெயிலின் தாக்கத்தால், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். எண்ணெய் பசையான உடம்பு என்றால், முகத்தில் பருக்கள் அடிக்கடி முகவரி கொடுக்கும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய, பப்பாளி பழச்சாறை முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்தால், விரைவில் நீங்கி விடும். பருக்களை, எக்காரணம் கொண்டும் கிள்ளி விடக்கூடாது.
இதனால் பருக்கள் அதிகமாகும். முருங்கைக் கீரையை, உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.
எண்ணெய்யில் கவனம்: தோல் வறட்சியை தடுக்க, பழச்சாறு, காய்கறிச் சாறு, சூப், சுத்தமான நீர் ஆகியவற்றை அடிக்கடி பருக வேண்டும். உடம்புக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு, தோலும் பளபளப்பாக மாறும். வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுவோர் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள், அடிக்கடி மோர் மற்றும் இளநீரை பருக வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். எண்ணெய் பதார்த்தங்கள், காரங்களை தவிர்க்க வேண்டும்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம், முகத்தை கழுவி சுத்தப்படுத்தி, பளிச் என்று வைக்க வேண்டும். இதனால், முகத்தில் வியர்வை துவாரங்கள் திறக்கபடுவதோடு, தோலில் படும் அழுக்குகளும் அகற்றப்படும்.
பாத வெடிப்பு பிரச்னை இருந்தால், வெங்காயத்தை வதக்கி, விழுதுவாக அரைத்து, பாதங்களில் தடவி வந்தால் நிவாரணம் கிடைக்கும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட, நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத்தண்டு, கீரை போன்றவற்றை உட்கொள்வது, உடல் நலனுக்கு சிறந்தது. எக்காரணம் கொண்டும், சிறுநீரை அடக்க வேண்டாம்.
இக்காலத்தில், பெண்கள் அதிகளவு பாதிக்கப்படுவர். வேர்க்குரு தோன்றும். இதற்கு சாதம் வடித்த நீரை, வேர்க்குரு உள்ள இடங்களில் தடவி குளித்தால், வேர்க்குரு மறையும்.
வியர்க்கும் போது கவனிக்க! அதிகமாக வியர்க்கும் போது குளித்தால், உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. வியர்வை நின்ற பின்பே குளிக்க வேண்டும். அதிக அளவு சோப்புகளையும் கோடை காலத்தில் பயன்படுத்த வேண்டாம். அதிகமாக வியர்க்கும் போது பவுடர் பூச வேண்டாம். நன்றாக கழுவி துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும். வியர்க்கும் போது பவுடர் பூசினால், வியர்வை துவாரங்கள் அடைபட வாய்ப்புள்ளது.
வியர்க்கும் போது, உடலில் அசுத்தமான துகள்கள் ஒட்டினால், தோல் அலர்ஜி ஏற்படும்; வியர்வை துர்நாற்றம் ஏற்படுவது, கோடைகாலத்தில் அனைவருக்குமான ஒன்று. இது நீங்க, நிறைய தண்ணீர் குடிக்கலாம். கீரைகள், ஆரஞ்சு பழம், அன்னாசி பழம் ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றிலுள்ள நார்ச்சத்து, திரவ உற்பத்தியை குறைக்கும். மாடித் தோட்டம் இருந்தால், வீட்டுக்குள் அனல் அடிக்கும் என்ற பிரச்னையே இருக்காது.
மாடியில், வெண்மை நிற டைல்ஸ்கள் பதிக்காமல் இருந்தால், வெள்ளை பெயின்ட் அடிக்கும் போது, வெயிலின் தாக்கம் வீட்டுக்குள் வராது. இக்காலத்தில், குழந்தைகள் கவனிப்பில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பல குழந்தைகள், தாகம் எடுத்தாலும், நீரை கேட்க மாட்டார்கள். எனவே, சிறிதளவு இடைவெளியில், நீர், பழரசம் கொடுக்க வேண்டும்.

%d bloggers like this: