விதையில்லா பழங்கள் விபரீதமானவையா?

ந்திரத்தனமாகிவிட்ட மனித வாழ்க்கையில் இன்று ஆற அமரச் சாப்பிடக்கூட யாருக்கும் நேரமில்லை. எல்லாவற்றிலும் சொகுசை எதிர்பார்க்கப் பழகிவிட்டார்கள். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பதெல்லாம் இந்தத் தலைமுறையினருக்குத் தெரியாது; புரியாது. உணவுமுறைகளில்கூட வசதிகளுக்குப் பழகிவிட்டதன் விளைவுகளில் ஒன்றுதான் சீட்லெஸ் பழங்கள்.


காய்கறிகளையும் பழங்களையும் தோலுடனும் விதைகளுடனும் சாப்பிட்ட காலம் மாறி, இன்று தோல், விதை நீக்கி, வெட்டப்பட்டு அப்படியே சாப்பிட ஏதுவாக விற்பனைக்கு வருவதை அறிந்திருப்போம். வாழைப்பழ சோம்பேறிகளாக மாறிப்போன மக்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்டவைதாம் விதையில்லாத பழங்கள். திராட்சை முதல் தர்பூசணி வரை எல்லாப் பழங்களுமே விதைகளின்றி விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அவற்றின் விலை சற்று அதிகம் என்றாலும் விதைகளைக் கடித்துத் துப்பவேண்டிய அவசியம் இல்லை என்பதால் விபரீதங்களைப் பற்றி யோசிக்காமல் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.
சீட்லெஸ் பழங்கள் ஆரோக்கியமானவைதானா என்கிற கேள்வியை மருத்துவர்களின் முன்வைத்தோம்.

சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் பேசியபோது, “அடிப்படையிலேயே சீட்லெஸ் பழங்கள், அவற்றிலுள்ள இனிப்புச் சுவைக்காக வணிக நோக்கில் கொண்டு வரப்பட்ட வீரிய ஒட்டு ரகங்கள். தற்போது சந்தையில் திராட்சை, பப்பாளி போன்றவை விதையில்லாமல் ஒட்டுரக விதைகளால் விளைவிக்கப்படுகின்றன. சீட்லெஸ் பழங்களைக் கொண்டு வந்ததற்கான காரணம், அதிக லாபம் ஈட்டவும், அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்யவும்தான். ஆனால், இந்த விதையிழப்பு என்கிற சீட்லெஸ் தொழில்நுட்பம் இயற்கையின் சமச்சீர் நிலையைக் குறைக்கிறது. ஒரு கனி எப்படி அமைய வேண்டும் என்பதை இயற்கைதான் தீர்மானிக்கும்.
இயற்கை தீர்மானிக்கும் ஒரு விஷயத்தை மனிதன் தன்னுடைய தேவைக்காக மாற்றியமைக்கக் கூடாது. இதனால் சமச்சீரற்ற நிலை உருவாகி, நோய்த்தாக்குதல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். காலச்சூழ்நிலையில் மரபணுக்கள் மாற்றம் அடைந்துதான் வந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னால் இருந்த வாழைப்பழத்தில் பெரிய அளவிலான விதைகள் இருந்தன. இன்றும், கடைகளில் விற்பனை செய்யப்படும் நாட்டு வாழைப்பழங்களில் கடுகு வடிவிலான தோற்றம் கொண்ட விதைகள் காணப்படும். காலத்திற்கேற்ப அந்தத் தாவரம் இயல்பாகவே தனது தன்மையை மாற்றிக்கொண்டு வருகிறது. ஆனால், மனிதன் தனது அவசரத் தேவைகளுக்காக விதையை நீக்கம் செய்வது இயற்கைக்குப் புறம்பானது.

பன்னீர் திராட்சையை விதைகளுடன் உண்ணும்போது விதையிலுள்ள ‘ரிசர்வெட்டால்’ என்கிற பொருள் புற்றுநோயைக் குணப்படுத்தும் என்கின்றன ஆராய்ச்சிகள். வெளிநாட்டுச் சந்தையில் திராட்சையின் விதைகள் கிலோ 1200 டாலருக்கு விற்கப்படுகின்றன. ஆனாலும், உடலுக்கு நன்மை தராத சீட்லெஸ் திராட்சை வாங்கவே பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு விதைக்கும் ஒரு பயன் கட்டாயம் இருக்கும். ஒரு விதை ஒரு தாவரத்தை உருவாக்க கூடிய தன்மை, தானாக மகரந்தச்சேர்க்கைக்கு உட்பட்டுக் கனியாகும் தன்மை எனப் பல சிறப்புத் தன்மைகளைப் பெற்றிருக்கும். ஒட்டுமொத்தமாக சீட்லெஸ் விதைகளையோ அல்லது பழங்களையோ பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், விதைகளுக்கு கார்ப்பரேட்டுகளிடம்தான் கையேந்த வேண்டும். முன்பெல்லாம் விவசாயிகள் வீட்டிலேயே விதைகளைத் தேவைக்கு ஏற்ப எடுத்து வைத்துக்கொள்வது வழக்கம். சீட்லெஸ் பழங்களைத் தொடர்ந்து விளைவிக்கும்போது விவசாயி விதைக்கு கார்ப்பரேட்டுகளிடம் கையேந்தும் நிலைதான் ஏற்படும். இதற்காகத்தான் சீட்லெஸ் பழங்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. பல உணவுத்தொழில் நுட்பங்கள், ரசாயனங்கள் இங்கே புகுத்தப்பட்டதற்கான காரணம் ‘உணவுத்தேவை’தான். அதற்காகத் தொழில்நுட்பமே வேண்டாம் எனச் சொல்லவில்லை. நீண்ட காலத்திற்கு நீடிக்கக் கூடிய தொழில்நுட்பமும், அனைவருக்கும் நன்மை தரக்கூடிய தொழில்நுட்பங்களும்தான் இங்கு தேவை. எனவே விதையுள்ள பழங்களைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது’’ என்கிறார்.

உணவியல் நிபுணர் விமலா அவர்கள், “இயற்கையாகவே விதையுள்ள பழங்கள்தாம் உடலுக்கு நன்மை தரக்கூடியவை. விதையில்லா திராட்சை, பப்பாளி, தர்பூசணி, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் இன்று விதையில்லாமல் கிடைக்கின்றன. வீரிய ரக விதைகளைக் கொண்டு விளைவிக்கப்படும் இவற்றில் ஆக்சின்(auxin) என்ற ரசாயனம் கலக்கப்படும். இந்த முறைக்கு ‘பார்த்தினோ கார்பிக்’ என்று பெயர். இத்தொழில்நுட்பத்தின் மூலம், பழங்களில் விதை உருவாவதைத் தடுத்து சதைப்பகுதியை அதிகமாக்கிக் கொடுத்துவிடும். ஆனால், பழங்களின் இயற்கைத்தன்மையே விதைகளைக் கொண்டிருப்பதுதான்.

விதையில்லாப் பழங்கள் அதிகமாக வருவதற்குக் காரணம், மக்கள் பழங்களை முழுமையாக உண்டு அதன் இனிப்புச் சுவையை மட்டுமே பெற விரும்புவதுதான். மேலும், ஜூஸ் கடைகளிலும், விதையில்லாத (சீட்லெஸ்) பழங்கள் அதிகமாக வாங்கப்படுகின்றன. காரணம் விதையுள்ள பழங்களில் ஜூஸ் பிழிவதால் விதை கலந்து ஜூஸ் கசந்துபோக வாய்ப்பு உண்டு. பழக்கடைகளிலும் விதையில்லாத பழங்கள் மக்கள் அதிகமாக விரும்பிக் கேட்பதால் அதிக அளவில் விற்பனை செய்கின்றனர். சீட்லெஸ் பழங்களுக்கு இனிப்புச் சுவை அதிகம் உண்டு. ஆனால்,  ஆரோக்கியமானவை அல்ல.
சீட்லெஸ் பழங்களில் கலக்கப்பட்டிருக்கும் ரசாயனங்கள் பழங்களை சீக்கிரம் கெட்டுப்போக விடாது. மேலும், உடலுக்கு எந்த விதமான சத்துகளையும் கொடுக்காது. இதுதவிர, சீட்லெஸ் பழங்களால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அறிவியல் ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சீட்லெஸ் பழங்கள் மட்டுமே சாப்பிடும் ஒருசில மக்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தபோது அவர்களுக்குத் தொற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இந்த சீட்லெஸ் விதைகளில் கலக்கப்பட்டிருக்கும் ரசாயனங்களினால் சிலருக்கு அலெர்ஜியும் வரலாம். இதுதவிர சீட்லெஸ் விதைகளில் ஜீன்களின் கட்டமைப்பு மாற்றப்படுவதால், அவ்விதைகளில் உருவாகும் பழங்களை உண்பதால், உண்பவர்களின் ஜீன்களிலும் படிப்படியாக மாற்றம் நிகழலாம். நிரந்தரமாக உடலில் தங்கும் நோய்களைக்கூட இந்த சீட்லெஸ் பழங்கள் ஏற்படுத்தும். நமக்குக் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆர்கானிக் வகையைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. அதேபோல, விதையுள்ள பழங்களை அதிகமாக உண்பதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது” என்றார்.

%d bloggers like this: