வீட்டில் இருக்க வேண்டும் சிற்றரத்தை!

அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்?’ என்ற சொல்வழக்கு, ஒன்று உண்டு. அந்த அளவுக்கு தொண்டையில் சேரும் கபத்தை, வெளியேற்றும் சக்தி சிற்றரத்தைக்கு உள்ளது. நம் உடலில் தொண்டை மிக முக்கியமான உறுப்பு. நோய்களை தடுக்கும் சுவர் போன்றது. அதனால், தொண்டையை பாதுகாப்பதில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு சிற்றரத்தை, கைகொடுக்கிறது. இருமல் ஏற்படும் போது, சிறு துண்டு சிற்றரத்தையை வாயில் இட்டு மென்மையாக சுவைக்க வேண்டும். காரமும், விறுவிறுப்பும் கலந்த தன்மை, அப்போது தோன்றி, இருமல் நின்று விடும்.

சிலருக்கு உடல்சூடு காரணமாகவும் இருமல் தோன்றும். அப்போது சிற்றரத்தையுடன், சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து சுவைக்க வேண்டும்; இதுவும், இருமலை போக்கும் சிறந்த மருத்துவம்.
இருக்காது பக்கவிளைவு: குழந்தைகள் இருக்கும் வீடுகளில், இதை கட்டாயம் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும். குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும் போது, சிறிதளவு சிற்றரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்க வேண்டும். பக்கவிளைவை ஏற்படுத்தாது.
சிற்றரத்தை சிறந்த மணமூட்டி. சிறு துண்டை வாயில் இட்டு சுவைத்தால், வாய் நாற்றம் நீங்கும். ஈறுகளில் உள்ள நோய்த்தொற்றும் சீராகும். சிலருக்கு வாகனங்களில் பயணம் செய்யும்போது, வாந்தி ஏற்படும். அந்த தொந்தரவு இருப்பவர்கள் பயணம் செய்யும் போது சிறு துண்டு சித்தரத்தையை, வாயில் இட்டு சுவைத்துக்கொண்டிருந்தால் வாந்தி வராது.
வயிற்றை புரட்டுவது போன்ற அவஸ்தைகளும் ஏற்படாது. அரை தேக்கரண்டி சிற்றரத்தை பொடியுடன், அதிமதுர பொடி அரை தேக்கரண்டி, சுக்கு, மிளகு, திப்பிலி அடங்கிய திரிகடுக பொடி அரை தேக்கரண்டி கலந்து, சிறதளவு நீரில் கொதிக்க விட வேண்டும். நன்கு கொதி வந்ததும், இறக்கி வடிகட்டவும். அவை காரமாக இருக்கும் என்பதால், சிறிது தேனை கலந்து குடிக்கலாம். தொடர்ச்சியாக குடித்து வந்தால் மூக்கடைப்பு, நெஞ்சக சளி, ஒற்றை தலைவலி உட்பட சைனஸ் தொந்தரவுகள் விரைவில் நீங்கும்.
வயிற்றுக்கு இதம்: கொழுப்பு சத்தை கரைக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. நாக்கு வறட்சியை அறவே நீக்கும். கால் தேக்கரண்டி சிற்றரத்தை பொடியுடன், நான்கு பல் பூண்டு, ஒன்றரை தேக்கரண்டி சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் சர்க்கரையுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
வடிகட்டி, அத்துடன் தேன் கலந்து குடிக்கலாம். இவற்றை தொடர்ச்சியாக குடித்து வந்தால், வயிற்றுக் கோளாறு, வயிற்று புண், வாயு கோளாறு உட்பட நெஞ்சக கோளாறுகள் நீங்கும். விந்தணுக்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் ஆற்றலும் இதற்கு உண்டு.
கக்குவான் இருமல் உள்ள குழந்தைகளுக்கு, சிற்றரத்தையை அரைத்து தேனில் குழைத்து கொடுக்க, இருமலின் தாக்கமும் இழுப்பும் குறையும். சிற்றரத்தை, பனங்கற்கண்டு ஆகியவற்றை சம அளவு எடுத்து கஷாயம் வைத்து, மூன்று வேளைக்கு தொடர்ந்து உட்கொண்டு வந்தால், வரட்டு இருமல், சளி குணமாகும்.
சிற்றரத்தை, தாமரைப்பூ இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து, ஒரு ஸ்பூன் அளவுக்கு, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், மாரடைப்பு வராமல் தடுக்கலாம். சிற்றரத்தை, அமுக்கரா, சுக்கு என, மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து, இரண்டு கிராம் அளவு பொடியை தினமும், காலை, மாலை என இரு வேளையும் சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி, வாத நோய்கள் அனைத்தும் குணமாகும்.

%d bloggers like this: