உடையும் ‘சிதம்பர’ ரகசியம்!

மிழகத்தில் அ.தி.மு.க வட்டாரத்தையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்த ரெய்டு பூதம், இந்தமுறை காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த 16-ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டுக் கதவைத் தட்டியது, சி.பி.ஐ படையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு. கார்த்தி சிதம்பரத்தைக் குறிவைத்து, சென்னை, டெல்லி, மும்பை, குர்கான் ஆகிய நகரங்களில் ஒரே நேரத்தில் சி.பி.ஐ ரெய்டு நடந்தது. எல்லா ரெய்டுகளுக்கும் பின்னால் அதிகாரக் காரணங்கள் இருப்பதுபோல், அரசியல் காரணமும் இருக்கும். கார்த்தி சிதம்பரம் விவகாரத்திலும் அப்படிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன.
அதிகாரக் காரணங்கள் என்ன?


மும்பையைச் சேர்ந்த மீடியா நிறுவனம் ஐ.என்.எக்ஸ். 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் இந்திராணி முகர்ஜி, அவருடைய கணவர் பீட்டர் முகர்ஜி. இந்த நிறுவனத்தின் சார்பில், கடந்த 2007 மார்ச் 13-ம் தேதி மத்திய ‘எஃப்.ஐ.பி.பி’ என்ற வாரியத்தில் ஒரு விண்ணப்பம் அளித்தனர். ‘எஃப்.ஐ.பி.பி’ என்பது வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (Foreign Investment Promotion Board) என்று அழைக்கப்படும் ஒரு பிரிவு. வெளிநாட்டு முதலீடுகளையும், பணப் பரிவர்த்தனைகளையும் ஊக்கப்படுத்தவும், அவற்றை வரைமுறைப்படுத்தவும் உருவாக்கப்பட்ட அமைப்பு இது. மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள்தான் இந்தப் பிரிவும் இயங்குகிறது. இதை வைத்துத்தான் சிதம்பரம் குடும்பத்துக்கான வில்லங்கத்தின் சரடு எடுக்கப்பட்டது.
ஐ.என்.எக்ஸ் மீடியா, ‘எங்கள் நிறுவனத்தின் சார்பில் தொடங்கப்படும் டி.வி சேனல்களுக்கு ரூ.4 கோடியே 62 லட்சம் வெளிநாட்டு முதலீட்டைப் பெற அனுமதி வேண்டும்’ என எஃப்.ஐ.பி.பி-யிடம் அனுமதி கேட்டது. அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு 2007 மே 18-ம் தேதி ஒப்புதல் கிடைத்தது. அந்த அனுமதியை வைத்து ஐ.என்.எக்ஸ் நிறுவனம், விதிமுறைகளை மீறி, 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீட்டைப் பெற்றது. இந்த முறைகேட்டை வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்து, எஃப்.ஐ.பி.பி-யிடம் தகவல் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் 2008-ம் ஆண்டு மே 26-ம் தேதி எஃப்.ஐ.பி.பி விளக்கம் கேட்டது.

இதில் பதறிப்போன ஐ.என்.எக்ஸ் நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தின் உதவியை நாடியது. இதையடுத்து, நிதி அமைச்சராக இருந்த தன் தந்தை ப.சிதம்பரத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி, இதை கார்த்தி சிதம்பரம் சரிசெய்து கொடுத்ததாகக் குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தில் நேரடியாக 10 லட்ச ரூபாயும், மறைமுகமாக சுமார் 3.5 கோடி ரூபாயும் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்கள் பெற்றதாக, சி.பி.ஐ பதிவு செய்த வழக்குக் கூறுகிறது.  இதன் அடிப்படையில்தான் கார்த்தி சிதம்பரத்தின் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 120பி (கூட்டுச் சதி), 420 (ஏமாற்றுதல்), ஊழல் தடுப்புச் சட்டம் 13(2), 13(1) ஆகிய பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்துக்கு, கடந்த 15-ம் தேதிதான் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

அரசியல் காரணங்கள் என்ன?
பி.ஜே.பி-க்கும் காங்கிரஸுக்கும் மோதல் அரசியல் தவிர்த்து, பரஸ்பர நட்பும் புரிதலும் உண்டு. இரண்டு கட்சித் தலைவர்களுக்கும் அது பொருந்தும். ஆனால், ப.சிதம்பரம் மட்டும் அதில் விதிவிலக்கு. சிதம்பரத்துக்கும் பி.ஜே.பி-க்கும்… சிதம்பரத்துக்கும் நரேந்திர மோடிக்கும்… சிதம்பரத்துக்கும் மோடியின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர் ஆடிட்டர் குருமூர்த்திக்கும் ஜென்மப் பகை; இவர்களுக்குள் எப்போதும் ஆகாது. பிரதமர் மோடி, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போதே, ‘ரீ-கவுன்ட்டிங் மினிஸ்டர்’ எனச் சொல்லி ப.சிதம்பரத்தை வறுத்தெடுத்தார். ப.சிதம்பரமும் மோடிக்குப் பதிலடி கொடுத்துக்கொண்டே இருந்தார். அப்போதே ‘பி.ஜே.பி ஆட்சி  அமைந்தால், ப.சிதம்பரம் பாடு அவ்வளவுதான்’ என்று சொல்லப்பட்டது. அதேபோல, பண மதிப்பிழப்பு விவகாரத்தில் தனது கருத்துகளை மிகத் தெளிவாக, உறுதியாக, கடுமையாக வெளிப்படுத்திய ப.சிதம்பரம், “பொருளாதாரம் தெரியாத மேதைகள் எடுத்த நடவடிக்கை” என்று சொல்லி குருமூர்த்தியை வார்த்தைகளால் குத்திக் கிழித்தார். குருமூர்த்தியும் அசரவில்லை. “அரசியல் மேடைகளில் அலங்காரமான வார்த்தைகளில் பேசுவது பொருளாதாரம் அல்ல; ஆதாரங்களின் அடிப்படையில் பேச வேண்டும்; ப.சிதம்பரம் ஆதாரங்கள் இல்லாமல் பிதற்றுகிறார்” என்று பதிலடி கொடுத்தார். இதுபோன்ற வார்த்தைப் போர்கள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும்போதே, சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஈடுபட்ட… ஈடுபட்டுக் கொண்டிருந்த… கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் கண்காணிக்கப்பட்டு வலைப்பின்னல் நடந்தபடி இருந்தது. அந்த வலையில்தான் தற்போது கார்த்தி சிதம்பரம் வசமாகச் சிக்கி உள்ளார்.
சிதம்பரத்தின் கணிப்பு!
‘சி.பி.ஐ எந்த நேரத்திலும் தன்னையும் தன் குடும்பத்தையும் நெருக்கும்’ என்பதை சிதம்பரம் பல மாதங்களுக்கு முன்பே கணித்து வைத்திருந்தார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை, நிதித்துறை என மத்திய அரசின் முக்கிய இலாகாக்களை தன்வசம் வைத்திருந்தவர் அவர். பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கின் மூலம் சிதம்பரத்துக்கு நெருக்கடி கொடுக்க முயன்றனர். மற்றொரு புறம் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராகவும் காய்கள் வேகமாக நகர்த்தப்பட்டன. கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பருக்குச் சொந்தமான வாசன் ஹெல்த் கேர் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. கார்த்தி சிதம்பரம் பங்குதாரராக இருப்பதாகக் கூறப்படும் ‘அட்வான்டேஜ் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம், வாசன் ஹெல்த்கேர் நிறுவனத்தில் அந்நிய முதலீட்டுக்கு உதவியதாக அமலாக்கப் பிரிவு அப்போது குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக கார்த்தி அனுப்பிய மின்னஞ்சல்களும் இருப்பதாகத் தகவல்கள் கசிந்தன. சுமார் 2,100 கோடி ரூபாய் தொடர்புள்ள இந்த அந்நியச் செலாவணி விதிமீறல் விவகாரத்தில், கடந்த மாதம்தான் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. அந்தச் சூடு அடங்குவதற்குள்ளாக இப்போது ரெய்டு நடந்துள்ளது.

ரெய்டின்போது நடந்தது என்ன?
ப.சிதம்பரத்தின் வீடு, சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ளது. அதே வீட்டில்தான் கார்த்தி சிதம்பரமும் வசித்து வருகிறார். கடந்த 16-ம் தேதி காலை 7.30 மணிக்கு சி.பி.ஐ அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது, கார்த்தி சிதம்பரம் டென்னிஸ் விளையாடச் சென்றிருந்ததார். சி.பி.ஐ அதிகாரிகள் வீட்டுக்கு வந்த தகவல் அவருக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், அவசர அவசரமாக வீட்டுக்குத் திரும்பினார். அவர் வரும்வரை காத்திருந்த சி.பி.ஐ அதிகாரிகள், அவருடன் வீட்டுக்குள் சென்றனர். டிராக் சூட் அணிந்திருந்த கார்த்தியிடம் வீட்டுக்குள் ஒரு டீம் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோதே, கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்துக்கு ஆறுபேர் கொண்ட சி.பி.ஐ குழு சென்றது.
அங்கு சோதனையை ஆரம்பித்த அதிகாரிகள், கார்த்தி சிதம்பரத்தின் பிரத்யேக அறையைத் திறக்கச் சொல்லி கார்த்தியின் உதவியாளரை வற்புறுத்தி உள்ளனர். அவர்கள், “சார் வந்தால் மட்டுமே இந்த அறையைத் திறக்க முடியும்; அவர் அனுமதியில்லாமல் திறக்க முடியாது’ என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். அதனால் அந்த அறையில் சோதனை நடத்த முடியாமல் தவித்த அதிகாரிகள், கார்த்தியை அவர் வீட்டில் இருந்து அழைத்துவர முடிவு செய்தார்கள். அதன் பிறகு மதியம் ஒரு மணியளவில் கார்த்தி சிதம்பரத்தை அவருடைய காரிலேயே அலுவலகத்துக்கு அழைத்துவந்தனர். வீட்டில் இருந்து அவரை வெளியே அழைத்து வந்தபோது, கார்த்தியின் மனைவி ஸ்ரீநிதியும், சிதம்பரத்தின் மனைவி நளினியும் கலங்கிய கண்களோடு வாசலில் நின்றிருந்தனர். அதன்பிறகு உத்தமர் காந்தி சாலையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்துக்கு அவரையும் அழைத்துக்கொண்டு போன சி.பி.ஐ., மூடிய அறையைத் திறந்தது. அங்கிருந்த கம்ப்யூட்டர், ஹார்டு டிஸ்க், ஆவணங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டது. அங்கு கார்த்தியிடம் இரண்டு மணிக்குத் தொடங்கிய விசாரணை, இரவு 8.30 மணிவரை நடைபெற்றது.

சிதம்பரம் எங்கிருந்தார்?
வீட்டில் சி.பி.ஐ சோதனை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், சிதம்பரம் பெங்களூரில் இருந்தார். பெங்களூரு நீதிமன்றத்தில் கறுப்புக்கோட்டை அணிந்துகொண்டு, வழக்கு ஒன்றில் வாதாட வந்தார். ‘‘உங்கள் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தப்படுகிறதே?’’ என அவரை வழிமறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது, பதில் எதுவும் சொல்லாமல் சிறு புன்னகையுடன் கடந்து சென்றார். சிறிது நேரத்திலேயே சி.பி.ஐ சோதனை பற்றி தனது கருத்தை அறிக்கையாக வெளியிட்டார். “தற்போதைய மத்திய அரசு, சி.பி.ஐ-யை எனக்கு எதிராகவும் எனது மகன் மற்றும் அவருடைய நண்பர்களுக்கு எதிராகவும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், கட்டுரையாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள் உள்ளிட்ட குடிமை சமூக செயல்பாடுகளையும் முடக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. அதே போல் எனது குரலையும் நசுக்க முயற்சி செய்கிறது. ஆனால், தொடர்ந்து எனது கருத்துகளைப் பேசியும் எழுதியும் வருவேன்” என்று காட்டமாகவே இருந்தது அந்த அறிக்கை. 
சோதனை நடைபெற்ற அன்று இரவே சென்னைக்கு வந்த சிதம்பரம், தனக்கு நெருக்கமானவர்களிடம் மனம்விட்டுப் பேசியுள்ளார். ‘‘ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விவகாரத்தை இப்போது கையில் எடுப்பதே அரசியல்ரீதியாக என்னை ஒடுக்குவதற்குத்தான். நான் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் மத்திய அரசை விமர்சித்து கட்டுரைகள் எழுதிவருகிறேன். அது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்குபற்றி நான் எழுதிய புத்தகம் அவர்களைக் கோபம் அடைய வைத்துள்ளது. இதுவரை என் மனசாட்சிக்கு விரோதமாக நான் எதையும் செய்ததில்லை. சி.பி.ஐ தொடர்ந்துள்ள இந்த வழக்கில் நானே ஆஜராகி வாதிடுவேன். இந்த வழக்கை எப்படி நடத்த வேண்டும் என எனக்குத் தெரியும்” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாராம்.

‘‘சிதம்பர ரகசியம் உடையும்போது, அவர் இன்னும் பல சிக்கல்களைச் சந்திப்பார்’’ என்கிறார்கள், பா.ஜ.க-வினர். கார்த்தி சிதம்பரம் தொடர்பான இன்னும் நான்கு விவகாரங்களை, சி.பி.ஐ கையில் அமலாக்கத்துறை கொடுத்திருப்பதாக டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வருமான வரித் துறை ரெய்டுகளும், சி.பி.ஐ சோதனைகளும் நடந்தபோது, ‘இது அரசியல் ரீதியான பழிவாங்கல் நடவடிக்கை ‘ எனப் புகார்கள் கிளம்பும். அதற்கு பதில் சொல்லும் இடத்தில் ப.சிதம்பரம் இருந்தார். இன்று அவரே, புகார் சொல்லும் இடத்துக்கு வந்துவிட்டார்!

%d bloggers like this: