கோடைக்கால நோய்கள் வராமல் தடுப்பது எப்படி?

கோடை என்றதும் விடுமுறைதான் நினைவுக்கு வரும். குறிப்பாகக் குழந்தைகள் `ஊர் சுற்றலாம் வாங்க…’ன்னு தம் நட்புகளுடன் கைகோத்து விளையாடத் தயாரானாலும், வெயிலின் தீவிரம் அவர்களை அனுமதிப்பதில்லை. ஆம்… வறுத்தெடுக்கும் வெயிலின் காரணமாகக் காய்ச்சல், சளி, இருமல் எனப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும் இங்கே பார்ப்போம்..!

கோடையில் காய்ச்சல் அதிகமாக வருகிறதே… ஏன்?

நமது உடல், 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனது. ஆகவே அந்த எண் சாண் உடம்புக்காக ஒருநாளைக்கு 8 முதல் 10 டம்ளர் வரை நீர் அருந்த வேண்டியது அவசியம். ஆனாலும், கோடைக் காலத்தைப் பொறுத்தவரை, உடலின் நீர்ச்சத்து வேகமாகக் குறையும். இப்படி உடல் வறட்சி ஏற்படும்போது, உடலிலுள்ள எதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்கும். அந்த நேரத்தில் பரவக்கூடிய எல்லா நோய்க் கிருமிகளும், மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக, நண்பகல் நேரங்களில் வெயிலில் அலைபவர்கள், அதிக அளவு உழைப்பவர்கள், அதிக ஆக்டிவாக இருப்பவர்கள் (கூலிவேலை செய்பவர்கள் தொடங்கி கார்ப்பரேட் தொழிலாளிகள் வரை) ஆகியோருக்கு, இந்த வகை உடல் சோர்வுகளும், நோய் எதிர்ப்புத் திறன் குறைதலும் ஏற்படும். இன்றைய எந்திர உலகில் அனைவருமே மிகவும் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், கோடைக் காய்ச்சல் அதிகமாக ஏற்படுகிறது. இவை யாவும், காய்ச்சலைத் தாண்டி சளி, இருமல், தொண்டைவலி, உடல்வலி, அதீத தாகம் போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

நண்பகலில் (பகல் 12-4 மணி வரை) வெளியே செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

வெயிலின் வெப்பம் அதிகரிக்கும்போது, உடலில் சூட்டுக் கட்டி உருவாகும். வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இத்தகைய பாதிப்புகள் அதிகமாக இருக்கும். வெப்பம் அதிகரிக்கும்போது, உடல் சோர்வு ஏற்படும். வெப்பம் அதிகரிப்பதால், வெப்பப் பக்கவாதம்கூட (Heat Stroke) ஏற்படும்.

கோடைக்காலக் காய்ச்சல் வருவதற்கான காரணம் என்ன?

கோடைக்காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் நோய்க் கிருமிகள் அதிகளவில் பரவக்கூடும். அதுமட்டுமன்றி, வியர்வை அதிகமாக வெளியேறி, உடல்சோர்வு உண்டாகும். அது நோய்க்கிருமிகள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை மேலும் அதிகமாக்கும். இந்தப் பிரச்னையில், காய்ச்சல் அதிகளவில் பரவும்.

கோடைக்காலத்தில் சளி, தொண்டைவலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுவதே சளித்தொல்லைக்கான முக்கியக் காரணமாகும். மேலும், வியர்வை அதிகமாக வெளியேறும்போது ஃப்ரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரைக் குடிப்பது, ஐஸ்க்ரீம் சாப்பிடுவது, குளிர்ந்த பானங்களை அருந்துவது போன்றவையும் தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதுபோன்ற பாதிப்புகளோடு மாசு கலந்த காற்றை உள்ளிழுக்கும்போது தொண்டை மற்றும் நெஞ்சுப் பகுதியில் பாதிப்புகள் ஏற்படும். மேலும், சளி மற்றும் வறட்டு இருமல் ஏற்படலாம். சில நேரங்களில், காய்ச்சல் வராமல் தொண்டையில் மட்டும் பாதிப்பு ஏற்படலாம். அதாவது, தொண்டை கட்டிக்கொண்டு பேச முடியாமல் கரகரவென இருப்பது, தொண்டையில் வலி ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் வரும்.

வேறு என்னென்ன பாதிப்புகள் வரலாம்?

*
வெயிலில் இருந்து வீடு திரும்பியதும் குளிர்ந்த நீரைப் பருகினால் சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஆனால் இத்தகைய சளி, இருமல் வந்தால் பயப்படத் தேவையில்லை. குளிர்சாதனப்பெட்டிகளில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீரைப் பருகுவதற்குப் பதிலாக, மண்பானைகளில் நீர் ஊற்றி வைத்துக் குடிப்பது நல்ல தீர்வைத் தரும். தொடர் இருமல், தொண்டை வலி எனப் பிரச்னை தொடர்பவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் உடனடியாகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

வெயில் காலங்களில் ஹெச்.1.என்.1 என்ற வைரஸ் அதிகம் பரவும். இதனால், பன்றிக் காய்ச்சல் வரும் வாய்ப்பு உள்ளது. மேலும் வெயிலின் தாக்கத்தால், டைஃபாய்ட், அம்மை நோய், மலேரியா போன்றவை வரக்கூடும். மூச்சடைப்பு, மூக்கு/தொண்டையில் வலி எடுப்பது போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள், மருத்துவர்களை அணுகவேண்டியது அவசியம். (ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்வது,  இந்த வகை ஆபத்துகளில் இருந்து காக்கும்). குறிப்பாக, வெயிலில் பகல் நேரத்தில் குழந்தைகள் விளையாடும்போது, அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆகவே, நண்பகல் வேளைகளில் அவர்களை வெளியே அனுப்பாமல் இருப்பது நல்லது.

குழந்தைகளுக்கு மணல், தோட்டங்கள், புல்வெளி, பூங்கா போன்ற இடங்களில் காணப்படும் பூச்சிகளால் அலெர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதோடு காய்ச்சலும் வரலாம்.  அவர்களது உடம்பில் தழும்பு, சொறி – சிரங்குகள், புண் என எது இருந்தாலும், உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். மேலும், எத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்குத் தகுந்த ஆன்டி-வைரஸ் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது அவசியம்.

எலி ஜுரம் எனப்படும் ஒருவகை நோய் பரவிவருகிறது. எலியின் கழிவுகள் படர்ந்திருக்கும் ஏதாவது ஒன்றின்மீது உடல் படுவதால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படும். ஆகவே, ஸ்டோர் ரூம்,  கிச்சன் முதலியவற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்வதன்மூலம் எலிஜுரம் வராமல் தவிர்க்கலாம்.

வீட்டுக்குள் நுழைந்தவுடனும், உணவு உண்ணுவதற்கு / சமைப்பதற்கு முன்பும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். இல்லையேல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.
கோடைக்காலப் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?

பகலில் வெளியே செல்லும்போது, முகம் மற்றும் கைகளைத் துணிகளால் மூடியபடி செல்வது நல்லது. தொப்பி,  துணியால் முக்காடு போட்டுச்செல்வது நல்லது. எங்கே சென்றாலும், குடை எடுத்துச் செல்வது நல்லது.

வீட்டுக்குள் நுழைந்ததும் சற்று இளைப்பாறிய பிறகே தண்ணீர் குடிக்க வேண்டும். சோர்வாகவோ,  பதற்றமாகவோ உணர்பவர்கள் வீடுகளுக்குள் நுழைந்ததும் குளிர்ந்த நீரைக் குடிக்கக்கூடாது. தினமும் அதிகளவு தண்ணீர் பருக வேண்டியது அவசியம். அதேநேரத்தில் அது குளிர் நீராக இல்லாமல், மண்பானை நீராக இருக்க வேண்டும்.

வியர்வை அதிகமாக வெளியேறும்போது, அந்தக் கிருமிகளால் பாதிப்புகள் அதிகமாகும். எனவே, ஒரு நாளைக்கு இரண்டுமுறை குளிக்க வேண்டும். பெரும்பாலும் பகல் நேரங்களில் வெயிலில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. பருத்தியினாலான ஆடைகளை அணிவது நல்லது.

பூங்காக்களில் புல் தரைகளில் படுப்பது, சுற்றுலா செல்லும்போது மலைமேல் ஏறுவது போன்ற சாகச விளையாட்டுகளைத் தவிர்ப்பது நல்லது.

தரமற்ற உணவுகளைச் சாப்பிடுவதை (ஜங்க் ஃபுட்,  ரோட்டுக் கடை உணவுகள்) முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவுகள் உண்பது நல்லது. தினமும் வீட்டிலேயே தயாரிக்கும் நீர்மோரை அருந்துவது மிகவும் நல்லது.


அம்மை வந்தால் காய்ச்சல் ஏற்படுகிறதே, ஏன்?

கோடைக்காலத்தில்தான் அம்மை நோய்க்கான பாதிப்புகள் அதிகம். வெயில் காலத்தில் பூமி சூடாகும்போது, பரவிக்கிடக்கும் அசுத்தங்களில் இருந்து ‘வேரிசெல்லா ஜாஸ்டர் (Varicella Zoster)’ என்ற வைரஸ் அதிகமாகப் பரவும். அதுவே அம்மை நோய்க்கான காரணமாகும். சின்னம்மை நோயைப் பொறுத்தவரை குழந்தைகளுக்குத்தான் நோய் பாதிப்பு அதிகம். இது தொற்று நோயாகவும் இருக்கும் என்பதால், அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். அம்மை நோய் வருவதற்கான முக்கிய அறிகுறி, காய்ச்சல். அம்மை நோயின் பாதிப்புகளும், வைரஸும் உடலில் பரவத் தொடங்கும்போது, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துவிடும். அவ்வாறு குறையும்போது, காய்ச்சல் வரும். பெரும்பாலும், அம்மை நோய் ஏற்படுவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்னரே காய்ச்சல் பாதிப்பு வந்துவிடும்.

%d bloggers like this: