மிஷன் 2021 – ஆட்டத்தில் 5 பேர்

ஜினி மீண்டும் அரசியல் அஸ்திரம் தொடுத்திருக்கிறார். ரஜினி தனியாகக் கட்சி ஆரம்பித்தால் தன் எதிர்காலம் பாதிக்குமோ என்று அப்போது அஞ்சிய விஜயகாந்த், இப்போது ‘ரஜினி அரசியலுக்கு வர்றதால தே.மு.தி.க-வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை’ என்கிறார். ரஜினி மட்டுமல்ல, அவருடைய நண்பர் கமல், சிஷ்யர்கள் விஜய், அஜித், விஷால் என எல்லோருமே அரசியல் களத்தில் இறங்கத் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றனர்.
ரஜினி ரெடி!


ஐந்து நாள்கள் ரசிகர்களைச் சந்தித்த ரஜினிக்குப் பின்னால், அரசியல் ஒளிவட்டம் பிரகாசிக்கிறது.  முதலில், தன் ரசிகர் களிடம் கட்டுப்பாடு இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த ரஜினிக்கு, இப்போது பரமதிருப்தி. அதன் எதிரொலியாக முதல் நாளில் ‘நான் அரசியலில் இறங்குவது ஆண்டவன் கையில் இருக்கிறது’ என்று சூசகமாகச் சொன்னவர், ஐந்தாம் நாளில் ‘இப்போது அவரவர் வேலையைப் பார்ப்போம். போர் வரும்போது களத்தில் குதிப்போம்’ என வெளிப்படையாக அரசியல் பிரகடனம் செய்திருக்கிறார்.
கடந்தகால உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ரஜினியின் அனுமதி பெறாமலே ரஜினி ரசிகர்கள் பலர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற, பேரூராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றினர். இப்போது ரஜினியே பச்சைக்கொடி காட்டிவிட்டார். அப்புறம் என்ன? ‘ஆட்சி அவங்ககிட்ட இருக்கு… போடா ஆண்டவனே நம்ம பக்கம்!’ என்ற  ரஜினியின் ‘படையப்பா’ பட வசனம்தான் ரசிகர்கள் எல்லோரிடமும்  மைண்ட்வாய்ஸாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

கமல் குழப்பம்!
எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தபோது அவரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் கமல். எம்.ஜி.ஆரின் நீண்டகாலக் கனவான `பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை, அவர் ஆட்சிக்கு வந்ததால் நிராசையானது. அதன் பிறகு, தன் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் `பொன்னியில் செல்வன்’ திரைப்படத்தைத் தயாரிக்கவும், அதில் கமலை கதாநாயகனாக நடிக்கவைக்கவும் நினைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அதுவும் பிறகு நிறைவேறாமலேயே போனது. அப்போதே கமலுக்கு அரசியல் ஆசை இருந்ததை எம்.ஜி.ஆரிடம் சொல்லியிருந்தால், அவரே ஆசீர்வாதம் செய்து அட்சதை போட்டு அ.தி.மு.க-வின் இளைஞர் அணி பொறுப்பைக் கொடுத்திருப்பார்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, கருணாநிதியிடமும் இணக்கமாகவே இருந்தார் கமல். கோபாலபுரத்துக்கு இடைத்தரகர் இல்லாமல் எந்நேரமும் செல்லும் உரிமையும் தரப்பட்டது. இப்போதும் தி.மு.க தலைமையோடு இணக்கமாகவே இருக்கிறார் கமல்ஹாசன்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தனது அரசியல் தொடர்பை விசாலமாக்கிக் கொண்டார் கமல். அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பி.ஜே.பி, திராவிடர் கழகம் என அனைத்துக் கட்சிகளில் இருக்கும் முக்கியமான புள்ளிகளுடன் அரசியல் தொடர்பில் இருந்துகொண்டிருக்கிறார். அவர்களுடன் காரசாரமான அரசியல் விவாதங்களைச் செய்துவருகிறார். ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்து தளங்களிலும் தனது கருத்துகளைப் பதிவுசெய்து வருகிறார். நேரடியாக அரசியலில் இறங்கலாமா அல்லது நண்பர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாமா என்கிற குழப்பத்தில் இருக்கிறார் கமல்.
வர்றாரு விஜய்ணா!
விஜயகாந்தைப் போலவே, `ரஜினி இனிமேல் அரசியலில் இறங்க மாட்டார்’ என்ற முடிவில் `மக்கள் இயக்கம்’ அமைப்பை உருவாக்கினார் விஜய்.
2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, திருச்சியில் ஜெயலலிதாவைச் சந்தித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ‘விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க-வின் வெற்றிக்காகப் பாடுபடும்’ என்றார்.
அகமகிழ்ந்துபோன ஜெ., விஜய் மக்கள் இயக்கத்துக்கு இரண்டு சீட் தர ஆசைப்பட்டார். அப்போது ‘இந்த முறை எம்.எல்.ஏ சீட் வேண்டாம். கட்சி ஆரம்பித்து, அடுத்த முறை உங்களோடு கூட்டணி அமைக்கும்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று பவ்யமாகப் பதிலுரைத்த எஸ்.ஏ.சி-யை, வைத்த கண் வாங்காமல் பார்த்த ஜெயலலிதா, செயற்கைப் புன்னகையோடு விடைகொடுத்தார்.
முதலமைச்சராக வெற்றிபெற்ற பிறகு ‘ராமருக்கு அணில் உதவியதுபோல ஜெயலலிதாவின் வெற்றிக்கு விஜய் மக்கள் இயக்கம் உதவியது’ என்று எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்னதை, ஜெயலலிதா ரசிக்கவில்லை. அதன் பிறகு விஜய் தொடர்பான விஷயங்களை, கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு கண்காணிக்க ஆரம்பித்தார் ஜெ. அடுத்து, விஜய் நடித்த ‘தலைவா’ படத்துக்கு ஏகப்பட்ட இடையூறுகள் தரப்பட்டன. விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22-ம்தேதி. அதை பிரமாண்டமாகக் கொண்டாடத் தீர்மானித்தார் ‘தலைவா’ படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின். தமிழக அரசுக்குச் சொந்தமான அரங்குகளிலோ, மைதானத்திலோ விஜய் பிறந்த நாள் விழாவுக்கு இடம் தரக் கூடாது என்று தடைவிதித்தது அரசு.
மீனம்பாக்கம் அருகில் உள்ள ஜெயின் கல்லூரி மைதானத்தில் விஜய் பிறந்த நாள் விழாவைப் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போதுதான் அ.தி.மு.க-வின் பொதுக்குழு நடத்த அறிவித்திருந்தார் ஜெ. அதனால், ஜெயின் கல்லூரிக்கு எதிரே இருந்த காம்பவுண்டில் ‘அம்மா அழைக்கிறார்…’ என்று வாசகம் எழுதப்பட்டு, ஜெ-வின் பிரமாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டது. ஜெயலலிதா கட் அவுட்டுக்குக் கிஞ்சித்தும் குறைவில்லாத அளவுக்கு ஜெயின் கல்லூரி வளாகத்தில் ‘அப்பா அழைக்கிறார்…’ என்று வாசகம் எழுதப்பட்டு, எஸ்.ஏ.சந்திரசேகரின் பிரமாண்ட கட் அவுட் வைக்கப்பட்டது. இந்த இரண்டு கட் அவுட் விஷயங்களும் ஜெயலலிதா காதுக்குச் செல்ல, கோபத்தின் உச்சிக்குப் போன ஜெயலலிதா, விஜய் பிறந்த நாள் விழாவை நடத்தவே கூடாது என்று ஜெயின் கல்லூரிக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

தனது பிறந்த நாள் விழாவில் அரசியலில் இறங்குவது குறித்துப் பேசவிருந்த விஜய், ஜெயலலிதாவின் கோபத்தால் அமைதியானார். வழக்கமாக, தன் பிறந்த தினமான ஜூன் 22-ம் தேதி அன்று சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் மோதிரங்கள் வழங்குவது விஜய்யின் வழக்கம். ஜெ-வின் சீற்றத்துக்குப் பிறகு மோதிரங்கள் வழங்குவதை நிறுத்திக்கொண்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, மாஸ்  தலைவர்கள் இல்லாத சூழ்நிலையில் மீண்டும் தனது மக்கள் இயக்கத்தை உயிர்ப்பித்து அரசியல் அவதாரம் எடுக்கலாம் என விஜய் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், ரஜினியின் அரசியல் பிரவேசப் பேச்சு அவருக்கு மனக்குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 
ஆல் இஸ் வெல் அஜித்?!
ஆரம்பத்தில் பத்திரிகைகளில் அஜித் கொடுத்த தடாலடிப் பேட்டிகள் பிரசித்திபெற்றவை. தனக்கென வைத்திருந்த ரசிகர் மன்ற அமைப்பைக் கலைத்தது சுவாரஸ்யமான கதை. அப்போது அடிக்கடி தினசரி பத்திரிகைகளில் ‘தூத்துக்குடியில் அஜித் ரசிகர் மன்றத் தலைவர் கட்டப்பஞ்சாயத்து’, ‘பாண்டிச்சேரியில் கோஷ்டி மோதலில் அஜித் ரசிகர் கைது’ என்று வருவதைப் பார்த்து அதிர்ந்துபோனார். அப்போதுதான்  அஜித்திடம் ரகசியத் திட்டம் ஒன்று உருவானது.
தனது ரசிகர் மன்றத்தில் மாவட்டம், நகரம், கிராமம்தோறும் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பை ரகசியமாக நடத்தினார் அஜித். இந்த எண்ணிக்கையைப் பார்த்தபோது மயக்கமே வந்துவிடும்போல் ஆகிவிட்டதாம். தமிழ்நாட்டு மக்கள்தொகையில் பாதிப்பேர் மன்ற உறுப்பினர்கள் போன்ற தோற்றத்தைக் கண்டு வாயடைத்துப் போனார். கடைசியில் புலன்விசாரணையில் இறங்கியபோது அஜித் ரசிகர் மன்றத்தில் இருக்கும் ஒருவரே பல ரசிகர் மன்றங்களில் உறுப்பினராக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்று இரவே அத்தனை ரசிகர் மன்றங்களையும் கலைப்பதற்கு உத்தரவிட்டார் அஜித்.

`இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் தேர்தலில் நிச்சயம் வாக்களிக்க வேண்டும்’ என்று சொல்லும் அஜித், தமிழகத்தின் அரசியல் குறித்து தனியாக வாய் திறந்ததில்லை. ஆனால், ரஜினி எவ்வழியோ அஜித்தும் அவ்வழியே. ஆம், இல்லை என்கிற எந்தப் பதிலும் அஜித்திடம் இருந்து வராது. “அரசியலுக்கு நீங்க வருவீங்களா?” என்று கேட்டால், “என்னைச் சுற்றி அரசியல் இல்லாமல் இல்லையே” எனச் சிரிப்பார்.  கருணாநிதி ஆட்சியின் போது  ‘பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா’ நடத்தியது கலையுலகம். அப்போது மேடையில் ‘எங்களை விழாவுக்கு வரச்சொல்லி மிரட்டுறாங்க அய்யா’ என அஜித் உணர்ச்சி வசப்பட்டுப் பேச, ரஜினி இருக்கையைவிட்டு எழுந்து கைதட்ட, அருகில் இருந்த கருணாநிதி கடுப்பானார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது கேக்கையும், ஜெயலலிதா பிறந்த நாளின்போது ஸ்வீட் பாக்ஸையும்  கார்டனுக்கு அஜித் அனுப்பிவைப்பது வழக்கம். ஜெயலலிதா இறந்தபோது பல்கேரியாவில் ‘விவேகம்’ படப்பிடிப்பில் இருந்ததால், ஜெயலலிதாவை அடக்கம் செய்வதற்குள் அஜித்தால் சென்னைக்கு வர முடியவில்லை. மறுநாள் அதிகாலையே ஜெயலலிதா சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இப்போது எல்லா அ.தி.மு.க-காரர்களும் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து அறிவிப்பு வெளியிடுகிறார்களே, இதற்கெல்லாம் முன்னோடி அஜித்தான். அ.தி.மு.க-வில் ஈ.பி.எஸ் கோஷ்டி, ஓ.பி.எஸ் கோஷ்டி, தீபா கோஷ்டி என ஆளாளுக்குத் தனி ஆவர்த்தனம் செய்துவரும் சூழ்நிலையில், ஜெயலலிதாவுடன் பழகிய நிகழ்வுகளை வெளியே சொன்னால் எங்கே தன்னையும் ஏதாவது ஒரு கோஷ்டியில் சேர்த்துவிடுவார்களோ என்ற குழப்பத்தில் பேசாமல் தவிர்த்துவருகிறார் அஜித்.
நானும்  இருக்கேன் விஷால்!
விஷாலின் அரசியல் ஆசைக்கு, நடிகர் சங்கத் தேர்தல் முதலில் தூபம் போட்டது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டுத் தலைவராக வென்றவுடன், அந்த ஆசை அதிகமாகிவிட்டது. ஒருவகையில் விஜயகாந்த் பாணியைக் கடைப்பிடிப்பவர் விஷால்.
ஒரு காலத்தில் ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக இருந்தவர் பூக்கடை நடராஜன். பின்னாளில் அவரையே தனது ரசிகர் மன்றத் தலைவராக நியமித்துக்கொண்டார் விஜயகாந்த். அதுபோல முன்பு விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்த ஜெயசீலனை, இப்போது தன் ரசிகர் மன்றத் தலைவராக்கியிருக்கிறார் விஷால். விஜய்க்கு `இளைய தளபதி’ பட்டம் இருப்பதால், தனக்கு `புரட்சித் தளபதி’ பட்டத்தை சூடிக்கொண்டார்.
சென்னையைத்தாண்டி வெளியே எங்கு ஷூட்டிங் நடந்தாலும், அங்கு விஷால் கையெழுத்துப்போட்ட அவரது புகைப்படங்கள் விநியோகிக்கப்படுகின்றன. விஷால் செய்த சாதனைகள் எனத் துண்டுக் காகிதங்கள் கொடுக்கப்படுகின்றன. கிராமத்து இளைஞர்களின் மனதில் பதியவேண்டும் என்பதுதான் விஷாலின் உடனடி இலக்கு.
ஐந்து பேருக்குக்குமே மிஷன் 2021-தான். இந்தத் தேர்தலில் ஐந்து பேருமே நேரடியாகக் களத்தில் இறங்குவார்களா என்பது சந்தேகமே. ஆனால் 2021 சட்டசபைத் தேர்தலைத் தங்களின் அரசியல் அறிமுகமாக அமைத்துக்கொள்ள ஐவருமே ஆர்வமாக இருக்கிறார்கள்.


ணையம்தான் இன்று அனைத்துப் பிரபலங்களின் நம்பிக்கையான செய்தித்தொடர்பாளர். ரசிகர்களைச் சந்திக்க உதவும் என்ட்ரியாக சமூக வலைதளங்களை நினைக்கிறார்கள். தங்கள் படங்கள் பற்றிய முதல் தகவல்கள் தொடங்கி, தங்களது கருத்துகள், விளக்கங்கள் அனைத்தையும் நேரடியாகத் தன் ரசிகர்கள், தொண்டர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கச் சொல்லி அவர்கள் மனதில் இருக்கும் விஷயங்களையும் தெரிந்துகொள்கிறார்கள். இதில் அரசியல் ஆசை கொண்ட நடிகர்கள் எப்படி?

விஜய்
விஜய்க்கு நேரடியாகச் சமூக வலைதளப் பழக்கம் இல்லை. ஆனால், இளைய தளபதி எப்போதும் ஆன்லைன்தான். அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் ரசிகர்களுடன் `டச்’சிலேயே இருக்கிறார். அவ்வப்போது, ட்விட்டரில், ரசிகர்களைக் கேள்விகள் கேட்கச் சொல்லி பதில்களும் சொல்லி வருகிறார். மூன்று மாதத்துக்கு ஒருமுறை ரசிகர்களைத் தவறாமல் சந்திப்பது விஜய் வழக்கம். சமீபத்தில் ஆன்லைன் ரசிகர்களுக்கு மட்டும் எனப் பிரத்யேகமான ஒரு ஃபோட்டோ செஷனும் நடத்தியிருக்கிறார். அரசியலுக்கு வந்தால் உதவும் `குட் பாய்’ இமேஜை  வளர்க்க சமூக வலைதளங்கள் விஜய்க்கு நன்றாகவே கைகொடுக்கின்றன.
அஜித்
அஜித் ஆன்லைன் கடவுள். ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யூப் என எங்கும் அஜித் இல்லை. ஆனால், எல்லா இடத்திலும் அஜித்தான் மாஸ். சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் ஆட்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அஜித் ரசிகர்கள். அஜித்தைப் பாராட்டி எழுதினால் லைக்ஸும், ரீ ட்வீட்ஸூம் பறக்கும். ஒரே ஒரு ட்வீட்டிலேயே பல ஆயிரம் ஃபாலோயர்ஸ் கிடைக்கும் ஃபார்முலாக்கள் உண்டு. அந்தச் சூத்திரங்கள் எல்லாவற்றிலும் அஜித் பெயர் இருக்கும். அஜித்தின் புகழ் பரப்ப அவரின் இயக்குநர்கள் தொடங்கி அனைத்து நடிகர்களும் ஓவர்டைம் பார்க்கிறார்கள்.
விஷால்
விஷால் இப்போது ட்விட்டரில் இல்லை. ஆனால், பல ஆண்டுகள் படு ஆக்டிவ். அவரே தனது மொபைலில் இருந்து ட்வீட் செய்ததால், விஷாலுக்கு ட்விட்டரில் நல்ல மைலேஜ். ஆனால், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சில ட்வீட்களைப் போடுவதும், பின் டெலிட் செய்வதும் என விஷாலின் ட்விட்டர் பயணம் மேடு பள்ளம் நிறைந்தது. இப்போது, விஷாலுக்கு ஆதரவாக சில கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், நடிகர் சங்கத்தில் அவரின் அதிரடி நடவடிக்கைகளைப் பெரிதாகப் பாராட்டினாலும், நெட்டிசன்கள் மத்தியில் விஷாலுக்கு சுமாரான வரவேற்புதான்.

%d bloggers like this: