Advertisements

இயல்பாக விளையாட விடுங்கள்!

வெயில் வாட்டி வதைத்து வருகிறது. உடலில் இருக்கும் நீர்சத்து குறையும் காரணத்தால், இக்காலகட்டத்தில், குழந்தைகள், தங்களுக்கு தேவையான நீரை அருந்தும் பழக்கத்தை, பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். வெயிலில் அவதிப்படக் கூடாது என்பதற்காகத் தான், கோடை விடுமுறையே விடப்பட்டது என்று தெரியாமல்,

பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளை, வதைக்கும் வெயிலில், சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புகின்றனர்.
இது, தவறான நடவடிக்கை என்கின்றனர், குழந்தைகள் நல ஆர்வலர்கள். பள்ளி விடுமுறை விட்ட பின், பெரும்பாலான குழந்தைகள், தங்களுக்கு பிடித்தமான செயலிலேயே ஈடுபடுவர். அதை விடுத்து, பக்கத்து வீட்டு குழந்தைகள் வகுப்புகளுக்கு செல்கிறார்கள் என்பதற்காக, நீங்களும் அனுப்ப வேண்டாம் என்றும், அறிவுரை வழங்குகின்றனர்.
இவர்கள் கூறும் ஆலோசனை: முதலில், கொளுத்தும் வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். நீரை சுட வைத்து, குளிர்ந்த பின் தேவைக்கேற்ப பருக வேண்டும். சுத்தமான நீராக இருந்தால் மட்டுமே, வெளியில் நீர் அருந்தலாம். புளிப்பான தின்பண்டங்களை அதிகம் உண்டால், உடம்பு உஷ்ணமாகி,
அஜீரணக்கோளாறு, வயிற்றுப் போக்கு உண்டாகலாம். இவற்றை, முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
வெயில் இல்லாத காலை அல்லது மாலை வேளையில், நடனம், ஓவியம் வரைதல், மண்பானை ஓவியம் உட்பட பயிற்சிகளை, குழந்தைகளின் விருப்பத்துக்கு இணங்க பயிற்சி மேற்கொள்ள அனுப்பலாம். அதிகாலை அல்லது மாலையில் உடற்பயிற்சி கற்றுக்கொள்ளலாம். உச்சி வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
தன்னம்பிக்கை வளரும்: வீட்டுக்குள் விளையாட, நண்பர்களுக்கு கடிதம் எழுதுதல், பெண் குழந்தைகளுக்கு தாயம், பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுத் தரலாம். வார்த்தை விளையாட்டு, பாடல் விளையாட்டு, தினசரி மற்றும் வார இதழ்களை படிக்க கொடுத்து, சில கேள்விகளை கேட்டு பரிசு வழங்கும் நடைமுறையை ஏற்படுத்தலாம். இது, குழந்தைகளின் தன்னம்பிக்கையை மேலும் வளர்க்கும்.
பள்ளி படிப்பு என்பது, ஏட்டுக்கல்வியை மட்டும் தரக்கூடியது. புத்தகத்தில் பார்த்த அருகில் உள்ள இடங்களை, தாய், தந்தையுடன் சென்று பார்வையிட்டு அங்கு காணக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், மக்களின் கலாசாரம், பண்பாடு, மொழி, இனம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். புத்தகங்கள் படிப்பதன் மூலம் நம் அறிவை விருத்தி செய்யலாம். இதற்காக, நூலகங்களுக்கு அழைத்து செல்வதன் மூலம், குழந்தைகளின் படிக்கும் திறன் மேம்படும்.
முக்கியமாக, அழிந்து வரும் இயற்கையை பாதுகாக்க, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கலாம். மண்ணுக்கு எதிரியாக இருக்கும் பாலித்தீன் பைகள் குறித்த விழிப்புணர்வை, நேரம் கிடைக்கும் போது, அருகில் உள்ள மக்களுக்கு ஏற்படுத்தலாம். நீங்கள் வசிக்கும் பகுதியை குப்பையில்லா பகுதியாக்க, நண்பர்களுடன் களமிறங்கலாம். முதியோர் இல்லம் சென்று, பெரியவர்களிடம் மனதார பேசி விட்டு வரலாம்.
இதனால், அங்கிருக்கும் பெரியவர்களுக்கு மனதில் இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும். இப்போது, நமக்கிருக்கும் திறமை, உடனடியாக குழந்தைகளுக்கு வர வேண்டும் என்று, ஒரு போதும் எண்ணக் கூடாது. நமக்கு மேல், குழந்தைகளிடம் அறிவு வளர்ச்சி இருக்கிறது; அதை, நாம் தான் தெரிந்துக் கொள்வதில்லை. எனவே, குழந்தை பருவத்தை கெடுக்காமல், அவர்களை இயல்பாக இருக்க விடுவது நல்லது.

Advertisements
%d bloggers like this: