ஆன்லைன் கட்டணங்கள் லாபம்..! எப்படி?

நாம் வாழும் ஒவ்வொரு மணித்துளியும் மிக முக்கியமானவை. இருபது, முப்பது வருடங்களுக்கு முன் எப்படியோ தெரியவில்லை. ஆனால் இன்று நாம் தவறவிடும் நிமிடங்கள் நமக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி விடும் என்பதுதான் உண்மை. பொன் போன்ற நேரத்தை நமக்கு மிச்சப்படுத்திக்கொடுக்கும் பணியில் ஏராளமான தொழில்நுட்பங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது என்று சொன்னால் டிஜிட்டல் பேமென்ட்டை (ஆன்லைன் கட்டணங்கள்) சொல்லலாம்.

மோடியின் டிஜிட்டல் இந்தியாவில்   இதுவும் ஓர் அங்கம். உண்மையைச் சொன்னால் டிஜிட்டல் மயம் என்பது காலத்தின் கட்டாயம். அதை மோடி செய்யாவிட்டாலும் யாராவது ஒருவர் செய்துதான் ஆகவேண்டும். டிஜிட்டல் பேமென்ட் கட்டாயமாக்குவது, ரொக்கப் பரிவர்த்தனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது எல்லாம் விவாதத்துக்குரியதுதான்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் படி யார் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் சரி, என் பணம் என்று தன் இஷ்டத்துக்குச் செலவு செய்ய முடியாது. யாருக்கும் கொடுக்க முடியாது. பொருட்கள் வாங்குவதிலும், ரொக்கமாக வைத்திருப்பதிலும் கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. அவற்றை மீறி நம்மால் செயல்பட முடியாது.  நவீன வளர்ச்சியின் ஒரு பரிமாணமாக நாம் இதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. மேலை நாடுகளில் எல்லாம் பயன்படுத்தி பழசாகி புதிய தொழில்நுட்பத்துக்கு மாறிய பிறகு தூக்கி எறிந்த தொழில்நுட்பங்கள் தான் இந்தியா போன்ற நாடுகளில் முயற்சி செய்து பார்க்கப்படுகின்றன.

அந்த அளவுக்கு டிஜிட்டல் மயம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. புதிய புதிய தனியார் நிறுவனங்கள், புதிய புதிய சேவைகளுடன் படையெடுத்து வரும் அதே நேரத்தில், வங்கிகளும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் வேகமாக பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்படும் என்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு விதமான பரிவர்த்தனைகளையும் ஒன்றாக ஒருங்கிணைக்க முடியும்.

பேப்பர்களைப் பயன்படுத்தி அவற்றில் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அலுவலகத்துக்கு அரை நாள் விடுப்பு போட்டுவிட்டு போய் வரிசையில் நின்றால், மதிய உணவு இடைவேளைக்கு ஊழியர்கள் போய்விட நாம் காத்திருக்க வேண்டிய காலம் எல்லாம் மலையேறிவிடும். பேப்பர்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க குறைக்க மரங்களைப் பாதுகாக்கலாம்.

ஒரு ஆராய்ச்சி முடிவில் கிடைத்த விவரங்களின்படி இந்தியாவில் வங்கி சார்ந்த சேவைகளுக்காகத் தான் மக்கள் அதிக நேரம் வரிசையில் நின்று நேரத்தைக் கழிக்கிறார்கள். சாதாரணமாக 1000 ரூபாய் போட வேண்டுமென்றாலோ எடுக்க வேண்டுமென்றாலோ கூட நாம் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. டிஜிட்டல் பேமென்ட் மூலம் இருந்த இடத்திலிருந்தே எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்பலாம், பெறலாம்.

அதேபோல் ஷாப்பிங். இன்றைய மால் கலாசாரத்தில் பொருள்களை வாங்குகிறார்களோ இல்லையோ வெறுமனே எஸ்கலேட்டரில் ஏறி இறங்கியே ஒரு நாள் முழுக்கவும் கழித்து விடுபவர்கள் இருக்கிறார்கள். இ-காமர்ஸ் உலகம் வந்த பிறகு இருந்த இடத்திலிருந்தே பொருள்களை வாங்க முடிகிறது. எளிதில் அதற்கான பணத்தை அனுப்பவும், திரும்பப் பெறவும் முடிகிறது.

காசோலை க்ளியர் செய்யும் செயல்தான் வங்கிகளில் அதிக நேரம் எடுக்கக்கூடிய பரிவர்த்தனை ஆகும். டிஜிட்டல் பரிவர்த்தனையை முழுமையாக செயல்படுத்தினால் இதற்காக செலவிடும் பெரும் நேரத்தை, மனித உழைப்பை மிச்சப்படுத்தலாம்.

மேலும் டெபிட், கிரெடிட் மற்றும் இதர கார்டுகள் அனைத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றை பாயின்ட் ஆஃப் சேலில் பயன்படுத்தாமல், ஏடிஎம்களில் பணத்தை எடுத்து ரொக்கமாக வைத்திருந்தே செலவு செய்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஏராளமான சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் ஆஃபர்கள் கொடுக்கின்றன. அவற்றையெல்லாம் முறையாகச் செயல்படுத்தினால் நிச்சயம் நமக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது லாபகரமானதாகவே இருக்கும்.  

பீம் ஆதார் மூலம் ஆதார் எண்ணையும், நம்முடைய கை ரேகையையும் வைத்தே பணப்பரிவர்த்தனைகளைச் செய்யலாம் என்பது வரம் தானே.

%d bloggers like this: