சரியும் எஃப்.டி வட்டி… அதிக வருமானத்துக்கு என்ன வழி?

டந்த சில ஆண்டுகளாக, வங்கி வட்டி விகிதம் குறைந்துகொண்டே வருவதைக் காண்கிறோம். இது வங்கிகளில் கடன் பெற்றுத் திரும்பச் செலுத்துபவர்களுக்கு நல்ல விஷயம்தான். இதன்மூலம் அவர்கள் வாங்கிய கடனுக்கான வட்டி குறைகிறது. ஆனால், வங்கியில் டெபாசிட் செய்து அதன் மூலம் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பவர் களுக்கு வட்டி விகிதம் குறைப்பு என்பது நல்ல விஷயமல்ல.

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வருடத்துக்கு 8-9% என்ற அளவில் வட்டி இருந்தது. தற்போது அது, ஆண்டுக்கு 6-7 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. சமீபத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவானது,  டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தில் 0.50% குறைப்பதாக அறிவித்தது. இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கான வைப்பு நிதிக்குத் தற்போது ஆண்டுக்கு 6.25 சதவிகித வட்டி கிடைக்கிறது. மூத்த குடிமக்களுக்கு 6.75%  வழங்கப்படுகிறது.
உதாரணமாக, நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்தால், ஆண்டுக்கு ரூ.6,250 மட்டுமே வட்டியாகக் கிடைக்கும். ஒருவேளை நீங்கள் 30 சதவிகித வருமான வரி வரம்பில் இருந்தால், வருமான வரிக்குப்பிறகு ரூ.4,375 மட்டுமே கிடைக்கும். இன்னும் அதிக வருவாய் எதிர்பார்க்கும் புத்திசாலித்தனமான முதலீட்டாளர்களுக்கு இந்த வட்டி போதுமானதாக இருக்காது.
வட்டி விகிதக் குறைவு என்பதைப் பொதுவாக மோசம் என்று சொல்லிவிட முடியாது. இன்றைய நிலையில் பணவீக்கம் என்பது  கட்டுக்குள்தான் இருக்கிறது. அரசின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 2.99 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. பணவீக்கம் 9 சதவிகிதமாக இருந்தபோது, வட்டி விகிதம் 8 சதவிகிதமாக இருந்தது. தற்போது பணவீக்கம் 3%. வட்டி வருமானம் 6 சதவிகிதத்துக்கு மேல் என்பது முன்பிருந்த நிலையைக் காட்டிலும் பரவாயில்லை. இருப்பினும், வருமான வரிக்குப் பிறகு கிடைக்கும் முதிர்வுத் தொகை எவ்வளவு என்று பார்த்தால், அது 4-5% என்கிற அளவில் குறைவாகவே இருக்கிறது.

மாற்று வழிகள்
ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி குறைந்துவரும் இன்றைய நிலையில், இன்னும் அதிக வருவாய் கிடைப்பதற்கான மாற்று வழிகள் சில இருக்கின்றன. அவற்றைக் காண்போம்.
குறுகிய காலம்

ஃபிக்ஸட் டெபாசிட் என்பது உங்கள் பணத் தேவையை எதிர்கொள்ளவும், மிக அவசரக் காலத்தில் பணத்தை எடுத்துப் பயன்படுத்தவும் வாய்ப்பளிக்கிறது. இதன் மூலம், உங்கள் குறுகிய காலத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.  
  வங்கி வைப்பு
அண்மைக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல  சிறு வங்கிகள் (Small Banks), பெரிய வங்கிகளைக் காட்டிலும் அதிக வட்டி விகிதத்தில் வைப்புத் திட்டங்களை அளிக்கின்றன. ஃபிக்ஸட் டெபாசிட் சந்தையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அளிக்கும் வட்டியைக் காட்டிலும், சிறு வங்கிகள் 0.75% முதல் 1.5% வரையில் அதிக வட்டியை அளிக்கின்றன. இந்தச் சிறு வங்கிகளின் கிளை உங்கள் ஊரில் இல்லை என்றால்,  ஆன்லைன் மூலமாகவும் உங்கள் பணத்தை டெபாசிட் செய்யும் அளவுக்கு வசதிகள் உள்ளன.

  லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட்

குறுகிய காலக் கடன் திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்து 91 நாள்கள் அல்லது அதற்குக் குறைவான காலத்தில் முதிர்வு பெறக்கூடிய வகையில் சில திட்டங்கள் இருக்கின்றன. அவை, கருவூல பில், மணி மார்க்கெட் திட்டங்கள், சர்டிஃபிகேட்ஸ் ஆஃப் டெபாசிட்கள் உள்ளிட்டவையாகும்.
இந்தத் திட்டங்களில் ரிஸ்க் மிக மிகக் குறைவு. இந்தத் திட்டங்களிலிருந்து உடனடியாக உங்கள் பணத்தைத் திரும்ப எடுக்கவும் முடியும். 2017 மார்ச் மாதத்துக்கான கிரைசில் ஆம்ஃபி லிக்விட் ஃபண்ட் பெர்ஃபாமன்ஸ் இண்டெக்ஸ்படி, லிக்விட் ஃபண்ட் பிரிவுக்குக் கடந்த ஆண்டில் 7.2% அளவுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது. அதிக வருமானம் பெற, மிகக் குறைந்த செலவிலான டைரக்ட் பிளானைத் தேர்வு செய்யலாம்.
நடுத்தரக் காலம்
அவசரக் காலச் செலவுக்குப் பணம் தேவைப்படுவதைத் தாண்டி, தொகுப்பு நிதியை (கார்பஸ்) உருவாக்கும் முதலீட்டுக் கருவிகளாகக் செயல்படும் சில திட்டங்கள் இங்கே…
  கார்ப்பரேட் டெபாசிட்
இதைப் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் அளிக்கின்றன. கால அளவு என்பது ஓராண்டில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும். வங்கிகளில் முதலீடு செய்தால் கிடைக்கும் லாபத்தைக் காட்டிலும், இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகமாக இருக்கும். மூத்த குடிமக்கள் சற்று அதிக வருவாயைப் பெறலாம்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், முதலீடு செய்வதற்கு முன்பு அந்தத் திட்டத்தின் கிரெடிட் ரேட்டிங்கைப் பார்ப்பதுதான். அதிகபட்ச ரேட்டிங் இருந்தால் (ஏஏஏ-தான் அதிகபட்ச ரேட்டிங். டி – மிகக் குறைந்த ரேட்டிங்) அந்த நிறுவனம் உங்கள் பணத்துக்கு நல்ல வட்டியை அளிக்கும். இதில் முதலீடு செய்ய, தேர்ந்தெடுக்கப்பட்ட விநியோகஸ்தர்களை அணுக வேண்டும்.

  கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்
அதிக ரிஸ்க்கை எதிர்கொள்ள விரும்பாத முதலீட்டாளர்களுக்கான திட்டம் இது. கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் (டெட் மியூச்சுவல் ஃபண்ட்) திட்டங்களில் திரட்டப்படும் தொகை அரசுப் பத்திரங்கள், கார்ப்பரேட் டெபாசிட், பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள், மணி மார்க்கெட் திட்டங்கள், ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்யப்படும். இதில் உங்கள் பணம் மிகப் பாதுகாப்பான முதலீட்டில், மிகக் குறைந்த  ரிஸ்க் கொண்டதாக  இருக்கும். அதாவது, ரிஸ்க்கே இல்லாத எந்தவொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமும் இல்லை.என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். டெபிட் ஃபண்டாக இருந்தாலும், அதில்கூட ரிஸ்க் ஆபத்து இருக்கவே செய்கிறது.
எனவே, ரிஸ்க் குறைக்க, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) முறையில் நீங்கள் முதலீடு செய்வதே சிறந்தது.
2017 மார்ச் மாதத்துக்கான கிரைசில் ஆம்ஃபி டெட் ஃபண்ட் பெர்ஃபாமன்ஸ் இண்டெக்ஸ்படி, கடன் சார்ந்த ஃபண்ட் பிரிவு கடந்த ஆண்டு 10.17% வரையில் வருவாய் கொடுத்திருக்கிறது.
நீண்ட காலம்
மாதாந்திர வருவாய்த் திட்டம்
இது மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இதில் திரட்டப்படும் நிதியில் 70 முதல் 90% வரை கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. 2017 மார்ச் மாதத்துக்கான கிரைசில் ஆஃம்பி எம்ஐபி பெர்ஃபாமன்ஸ் இண்டெக்ஸ்படி, மாதாந்திர வருவாய்ப் பிரிவு, வருடத்துக்கு 14.95%  வரையில் வருவாய் தந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 9.8%  கிடைத்திருக்கிறது.
நீண்ட காலத் திட்டத்தில், குறைந்த ரிஸ்க்கில் அதிக லாபம் சம்பாதிக்க மாதாந்திர வருவாய்த் திட்டம் சிறந்ததாக இருக்கிறது. அதையும் எஸ்ஐபி முறையில் டைரக்ட் பிளான் மூலம் முதலீடு செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம்.
அரசுப் பத்திரங்கள்
2003 முதல் இந்திய அரசின் பத்திரங்கள் 8% வருமானம் அளித்து வருகின்றன. இந்தத் திட்டத்தின் காலம் ஆறு ஆண்டுகள். பங்குச் சந்தையில்  டிரேடிங் அக்கவுன்ட் மூலம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் இதில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்சத் தொகை ரூ.1,000 ஆகும்.
சிறு சேமிப்புத் திட்டம்
சிறு சேமிப்புத் திட்டத்தை வீழ்த்தக்கூடிய வேறு எந்தத் திட்டமும் இல்லை. பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (பிபிஎஃப்) திட்டமானது இப்போதும் ஆண்டுக்கு 7.9 சதவிகித வட்டியை அளிக்கிறது. இதில் முதலீட்டுக்கு வரிச் சலுகை இருக்கிறது. வருமானத்துக்கும் வரி இல்லை.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் சுகன்யா சம்ருதி திட்டம்கூட 8.4 சதவிகித வட்டியை அளிக்கின்றன. இந்தத் திட்டங்களிலும் பிபிஎஃப் போல், வரிச் சலுகைகள் உள்ளன. இவை, ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தைவிட அதிகம். இருப்பினும் இதில் முதிர்வுக் காலம் என்பது நீண்டதாக இருக்கிறது. எனவே, நீண்ட காலச் சேமிப்புத் திட்டங்களுக்கு இதைப் பயன்படுத்திக்கொள்வது சிறந்தது.

%d bloggers like this: