எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாம்பழம்

உயிர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களில் மாம்பழம் முக்கியமானது. இதை சாப்பிடுவதன் மூலம் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். “உடல் சூடு அதிகரிக்கும்’ என்று பலரும் மாம்பழம் சாப்பிட தயங்குகின்றனர். ஆனால், இதற்கு மருத்துவ அடிப்படையில் எந்த சான்றும் இல்லை என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மாம்பழத்தில் வைட்டமின் “ஏ’வும், வைட்டமின் “சி’யும் அதிகம் உள்ளன. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால், இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலுக்கு கிடைத்து விடும். பலர், மாம்பழத்தை முழுவதுமாக சாப்பிடாமல், தோல் பகுதியை எறிந்துவிடுகின்றனர். அதன் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் “சி’ சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை, மாம்பழத்தில் அதிகமாக உள்ளன.
மாம்பழத்தில் “ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ்’ எனப்படும் எதிர் ஆக்சிகரணிகள் நிறைய அடங்கியுள்ளன. அவை, இருதய நோய் வராமல் தடுக்கும் திறன் கொண்டவை. விரைவில் முதுமை தோற்றம் அடைவதையும் தடுக்கின்றன. மாம்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து, கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. ரத்த சோகை உள்ளவர்களுக்கு, பாதிப்பை குறைக்கும்; நல்ல பலனும் தரும். நாளொன்றுக்கு எத்தனை மாம்பழம் சாப்பிடலாம் என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.
வறண்ட தோல் சருமம் இருந்தாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ, மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார், 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும். அஜீரண பிரச்னை உள்ளவர்களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை. வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சரியான ஜீரணத்திற்கும் உதவுகிறது.
தினமும் மாம்பழம் உண்பதன் மூலம் மாலைக்கண் கோளாறு, நரம்புத்தளர்ச்சி, மேனியில் சுருக்கங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. மாம்பழம் பழுத்திருந்தால் மட்டுமே சாப்பிடலாம்; கனியாத பழங்களை சாப்பிட்டால் கண் கோளாறு, மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனிதர்களுக்கு தினசரி 5 ஆயிரம் யூனிட் வைட்டமின் தேவை. மாம்பழம் அத்தேவையை நிறைவு செய்கிறது. இதை உண்பதன் மூலம் இருதயம் வலிமை பெறும்; பசியை தூண்டுகிறது. உடல் தோல் நிறம் வளமை பெறுவதுடன், முகத்தில் பொலிவும் உண்டாகும்.
கல்லீரல் குறைபாடுகள் விலகும். புது ரத்தஅணுக்கள் உற்பத்தியாகும். இயற்கையான முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் மட்டுமே சாப்பிடவேண்டும். செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.
பல்வலி, ஈறுவலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்ட மாம்பழம், கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றுக்கும் நல்ல பலன் தரும். மாம்பழச்சதையை மிக்சியில் இட்டு, சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்த சுவையாக இருப்பது மட்டுமின்றி, கோடை வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பையும், தோல் நோய் தொல்லைகளையும் போக்கும்.

%d bloggers like this: