வருங்கால வைப்புநிதி வீட்டுக் கடனுக்குக் கைகொடுக்கிறது, எப்படி?

சொந்த வீடு என்பது, நம்மில் பலருக்கும் ஒரு கனவாகவே இருக்கும். வீடு கட்டவோ அல்லது வீடு வாங்கவோ பெரும் பிரச்னையாக இருப்பது பணம்தான். இந்த நிலையில் பலருக்கும் வருங்கால வைப்புநிதி (இ.பி.எஃப்), வீட்டுக் கடன் வசதிக்குக் கைகொடுக்கிறது.

இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் `பத்தி 68-BD’ எனும் புதிய வீட்டுவசதிக் கடன் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இது ஓர் உறுப்பினர் தனது வைப்புநிதியிலிருந்து வீடு கட்டவோ, வீடு / ஃப்ளாட் வாங்கவோ, நிதியைப் பெற வழிவகை செய்கிறது.

புதிய திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: 

1. வைப்புநிதி சந்தாதாரர் குறைந்தபட்சம் பத்து உறுப்பினர்கள்கொண்ட ஒரு கூட்டுறவுச் சங்கத்திலோ அல்லது ஒரு வீட்டுவசதிச் சங்கத்திலோ உறுப்பினராக இருத்தல் அவசியம். 

2. ஓர் உறுப்பினர் மொத்தமாக அல்லது தவணைமுறையில் வீடு கட்டவோ, வீடு / ஃப்ளாட் வாங்கவோ அல்லது ஒரு வீட்டுவசதி நிறுவனம்/ விளம்பரதாரர்/ வீடு கட்டுபவரிடமிருந்து நிலம் வாங்கவோ செய்தல் அவசியம். 

3. ஓர் உறுப்பினர் குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் வைப்புநிதி சந்தாதாரர்களுக்கான உறுப்பினராக இருத்தல் அவசியம். 

4. ஓர் உறுப்பினர், ஒருமுறைதான் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம். 

5. ஓர் உறுப்பினர் மற்றும் அவரின் துணைவரது வைப்புநிதி கணக்கையும் சேர்த்து, குறைந்தபட்சம் 20,000 ரூபாய் இருத்தல் அவசியம். 

6. எடுக்கப்படும் தொகையானது, உறுப்பினரின் வைப்புநிதிக்கணக்கின் இருப்பில் 90 சதவிகிதம் மிகாமலோ அல்லது வாங்கவிருக்கும்    சொத்தின் மதிப்போ, இவற்றில் எது குறைவோ அந்தத்தொகை வழங்கப்படும். 

7. ஒப்பந்ததாரர்களின் செயல்களினால் ஏற்படும் எந்த விளைவுகளுக்கும் வைப்புநிதி நிறுவனம் பொறுப்பாகாது. 

8. உறுப்பினரின் பெயரிலோ, அவரது துணைவரின் பெயரிலோ அல்லது துணைவரோடு சேர்ந்தோ நிலுவையிலிருக்கும் வீட்டுவசதிக் கடனைத் தவணையிலோ, மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ சம்பந்தப்பட்ட வீட்டுவசதி நிறுவனத்துக்குத் திருப்பிச் செலுத்தும் வசதி. 

9. ஓர் உறுப்பினர், தன் உறுப்பினர் தகுதியை இழந்தாலோ அல்லது அவரது கணக்கில் மாதத் தவணையைச் செலுத்தும் அளவுக்குப் பணம் இல்லாமல்போனாலோ, அதற்கு வைப்புநிதி நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பாகாது. 

10. வீட்டுவசதிக் கடனானது, சம்பந்தப்பட்ட வீட்டுவசதி நிறுவனத்துக்கு மட்டுமே திருப்பிச் செலுத்தப்படும். 

11. தேவைக்கு அதிகமான வீட்டுவசதிக் கடன் பெற்றால், அது 30 நாள்களுக்குள் மொத்தமாகத் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். 

12. ஒதுக்கீடு கிடைக்கவில்லையெனில் அல்லது ரத்துசெய்யப்பட்டாலோ பெறப்பட்ட வீட்டுவசதிக்கடன் 15 நாள்களுக்குள் மொத்தமாகத் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். 

13. ஓர் உறுப்பினர், தனது வைப்புநிதிக் கணக்கின் இருப்புத்தொகை மற்றும் கடந்த மூன்று மாதங்களின் உறுப்பினரது பங்கு ஆகியவற்றின் சான்றிதழ்பெற, தனியாகவோ அல்லது சேர்ந்தோ சம்பந்தப்பட்ட வீட்டுவசதி நிறுவனத்தின் மூலமாக, அதற்கான படிவத்தில் ஆணையருக்கு விண்ணப்பிக்கலாம். 

14. இதற்கு மாற்றாக ஓர் உறுப்பினர், தனது வைப்புநிதிக் கணக்குப் புத்தகத்தை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

15. வீட்டுவசதிக் கடனை மாதத் தவணையில் செலுத்தும்பட்சத்தில், உறுப்பினர் ஓர் அங்கீகாரம் மற்றும் உறுதிமொழிக் கடிதத்தை ஆணையருக்குத் தர வேண்டும். 

16. ஓர் உறுப்பினரது ஆண்டு வருமானம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் குறிப்பிட்டுள்ளதைவிட குறைவாக இருந்து, தனது பெயரிலோ அல்லது தன் குடும்ப உறுப்பினரது பெயரிலோ, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சொந்த வீடு இல்லாமலிருந்தால், அத்தகைய உறுப்பினர் 2.20 லட்சம் ரூபாய் வரை கடன் இணைப்பு மானியத் திட்டம் (Credit Linked Subsidy Scheme) ன் மூலம் மானியம் பெறலாம்.
இத்தகைய மானியம், இந்திய அரசின், வீட்டமைப்பு மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் (MoHUPA), தன் இணை நிறுவனமான HUDCO மற்றும் தேசிய வீட்டுவங்கி மூலம் வழங்கப்படுகிறது. இதற்கான தகவல்கள் http://www.mhupa.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும். இந்த மானியம் பெற, ஓர் உறுப்பினர், பொதுத்துறை/ தனியார் துறை/ கூட்டுறவு வங்கி மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனத்தில், வீட்டுவசதிக் கடன் பெறலாம். இதற்கான தகவல்கள், http://mhupa.gov.in/writereaddata/ews-lig-pli.pdf மற்றும் http://mhupa.gov.in/writereaddata/mig-pli.pdf என்ற இணையதள முகவரியில் கிடைக்கும்.

%d bloggers like this: