Advertisements

படைப்பாளிகளும் பைத்தியக்காரத்தனங்களும்!

புதுமையானதும் மதிப்பு மிகுந்ததுமான ஒன்றை உருவாக்குவதே படைப்பாற்றல். தன்னைத்தானே அழித்துக்கொள்வதும் நிஜத்தை விட்டு விலகி அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் பாதை மாறிச் செல்லும் குழப்பமான நடத்தையே பைத்தியக்காரத்தனம் என்பது…நேரெதிர் முனையில் நிற்கும் இந்த இரண்டு குணாதிசயங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றால் நம்புவீர்களா? ஆம், மனோதத்துவ ரீதியாக இந்த இரண்டுக்கும் தொடர்பு உண்டு. இன்று, நேற்றல்ல… பல காலமாகவே படைப்பாற்றலுக்கும் மூடத்தனத்தின் உச்சத்துக்கும் உள்ள உறவு குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

Deviant behaviour என்கிற மாறுபட்ட ஒரு நடத்தை, வித்தியாசமான ஓர் அணுகுமுறை என்பது பெரும்பாலான படைப்பாளிகளிடம் இருந்திருக்கிறது. அப்படி இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை, அப்படி இருந்தால்தான் அவர்கள் படைப்பாளிகள் என்று ஆய்வாளர்கள் நம்பத் தொடங்கி வருடங்கள் பல ஆகிவிட்டன. தன்னைத்தானே சுருக்கிக்கொண்டு, தனக்குள் பயணித்து ஒரு குழந்தையின் சுதந்திரத்துடன் தனக்குள்ளேயேபுதையல் எடுக்கும் குணாதிசயமே படைப்பாற்றலின் அடிப்படை என்று பண்டைய கிரேக்க அறிஞர்கள் நம்பினார்கள்.நியாயமாக ஒப்புக்கொள்ளக் கூடிய லாஜிக்கான ஒரு சிந்தனைக்கும், நியாயமற்ற, ஒப்புக்கொள்ளவே கடினமான, லாஜிக் இல்லாத ஒரு சிந்தனைக்கும் நடுவே ஒரு கோடு வரைந்து அந்த இரண்டையும் பிரிப்பதாக வைத்துக்கொள்வோம். புத்திசாலித்தனமான படைப்பாற்றலுக்கும், அர்த்தமற்ற பிதற்றுதலுக்கும் இடையேயான மிக மெல்லிய கோடாக இதை கருதலாம். கொஞ்சம் பிசகினாலும் இங்கிருந்து அங்கு தாவிவிட முடியும். அதாவது, பைத்தியக்காரத்தனத்துக்கும் மேதாவித்தனத்துக்கும் இடையிலான மிக மெல்லிய சுவர் இது.
அப்படிப் பார்த்தால், ‘தெய்வீகமான ஒரு பைத்தியக்காரத்தனமே படைப்பாற்றல். கடவுளின் வரம் அது’ என்பார் அறிஞர் பிளாட்டோ. ‘கொஞ்சமேனும் முட்டாள்தனமோ அல்லது புத்தி பேதலிப்போ இல்லாத அறிவாளியை காண முடியாது’ என்பது அரிஸ்டாட்டிலின் வாக்கு. உலகின் அற்புதமான படைப்புகள் எல்லாம் படைப்பாளிகளின் மனம் ஒரு நிலையில் இல்லாத உணர்ச்சிமிக்க சூழலில்தான் படைக்கப்பட்டுள்ளன.
‘தூக்கமற்ற எத்தனையோ இரவுகளில் பயமும் குழப்பமும் பதற்றமும் அதே நேரத்தில் தெளிவும் ஞானமும் கலந்து(!) உணர்ச்சிக் கலவையாக படைக்கப்பட்டவைதான் பல உன்னத படைப்புகள்’ என்றார் மார்ஷல் ப்ரவுஸ்ட். கி.பி. 1880-ம் ஆண்டுகளில் இந்த விசித்திர தொடர்புகள் அலசப்பட்டு, அதுபற்றிய குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. மனோதத்துவ மாமேதை சிக்மெண்ட் ப்ராய்டு, ‘பல கலைஞர்களின் வாழ்வை நுணுக்கமாக ஆராய்ந்தால் மனவியல் ரீதியிலான பல உண்மைகளை கண்டறியலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றிக்கொள்வதாக தமாஷாக சொல்வார்கள். ஒரு கலைஞனின் படைப்பு அவன் மனவோட்டத்தின் வெளிப்பாடாகவே இருக்கும். அவனது காயத்துக்கு முதலில் மருந்து போட்டுக்கொண்ட அந்தப் படைப்பு பிற்பாடு அவனது ரசிகர்களுக்கு அருமருந்து மற்றும் விருந்தாக இருக்கும்.
குறிப்பாக, புகழ்பெற்ற கவிஞர்கள் மற்றும் ஓவியர்களின் வாழ்வியலுக்கும் அவர்களின் படைப்புகளுக்கும் இது மிகவும் பொருந்தும்.தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையும் தானே அனுபவப்பூர்வமாக உணர்ந்த சம்பவங்களையும் திரைக்கதையாக வடிக்கும்போது மிகுந்த உயிரோட்டமாக அமைந்து, அது மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது என்கிற உண்மை வெற்றி பெற்ற எத்தனையோ திரைப்பட இயக்குநர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.சில விஞ்ஞான உண்மைகளை இத்துடன் தெரிந்துகொள்ளலாம்….நமது மூளை செல்களுக்கு நியூரான்கள்(Neurons)என்று பெயர். மில்லியன் கணக்கான நியூரான்கள் நம் மூளையில் உண்டு. இரண்டு நியூரான்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுவதற்கு காரணமான வேதிப்பொருட்களை நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள்(Neurotransmittors) என்கிறோம். அவைகளில் சில Acetylcholine, Dopamine, Serotonin. இதில் டோப்பமின் மிக முக்கியமானது.
இரண்டு நியூரான்களுக்கு இடைப்பட்ட மிகச் சிறிய இடத்தில் டோப்பமின் இருக்கிறது. ஒவ்வொரு நியூரானின் மேற்புறத்திலும் இந்த டோப்பமினை வரவேற்பதற்காக டி-1, டி-2 என்கிற ரிசப்டார்கள்(ரீசிவர்ஸ்) இருக்கின்றன. டோப்பமின் இந்த ரிசப்டார்களில் போய் ஒட்டிக்கொண்டு அதன் விளைவாக ஏகப்பட்ட வேதியியல் பரிமாற்றங்களை செய்கின்றன.இந்த ரிசப்டார்களின் அளவு சிலருக்கு குறையலாம்; சிலருக்கு கூடுதலாக இருக்கலாம். மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை எடுத்துக்கொண்டால் இந்த டி-2 ரிசப்டார்களின் அடர்த்தி அவர்களுக்கு குறைவே. அதேசமயம் படைப்பாற்றல் மிக்க கலைஞர்களின் மூளையை ஆய்வு செய்து பார்த்ததில் அவர்களுக்கும் மேற்படி ரிசப்டார்கள் குறைவாக இருப்பதை கண்டறிந்தனர். நேரெதிர் திசைகளில் பயணிக்கும் இருவருக்குமே மூளையில் இருக்கும் இந்த ஒற்றுமை ஆச்சர்யமானதுதானே.
எத்தனையோ தகவல்கள் மூளையின் மேற்புற கார்டெக்ஸ்(Cortex) பகுதியை எட்டுவதற்கு முன் அவற்றை வடிகட்டி தேவையானவற்றை மட்டும் அனுப்பும் பணியை தலாமஸ்(Thalamus) செய்கிறது. வடிகட்டப்பட்ட அந்தத் தகவல்களை நன்றாக உள்வாங்கிக்கொண்டு காரண, காரியங்களை அலசி, அடுத்து என்ன செய்யலாம்? எப்படி எதிர்வினையாற்றலாம் என்ற முடிவை கார்டெக்ஸ் எடுக்கும். நாம் மேற்சொன்ன படைப்பாளிகளுக்கும் முட்டாள்தனம் மிகுந்தவர்களுக்கும் தலாமஸ் பகுதியில் கொஞ்சமே கொஞ்சம் டி-2 ரிசப்டார்கள் மட்டும் இருந்ததையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதிலிருந்து என்ன தெரிகிறது எனில், தகவல்கள் வடிகட்டப்படுவதும் கொஞ்சமாகத்தான் நடக்கும். ஆக, எந்த எடிட்டிங்கும் இல்லாமல் முழுத் தகவல்களும் மூளைக்குப் போய் சேர்கின்றன. இதுவே பல தலைசிறந்த கோக்குமாக்கான சிந்தனைகள் பிறக்க வழிசெய்கின்றன. 10 பேர் யோசிப்பதைவிட சற்றே வித்தியாசமாக யோசித்து மற்றவர்களுக்கு எளிதில் புலப்படாத வகையில் ஆச்சர்யம் தக்க வகையில் விஷயத்தைப் போட்டு உடைக்கும் படைப்பாளிகளின் ஆற்றலுக்கு இதுவே அடிப்படை காரணம்.
படைப்பாளிகள் நிலை இப்படி என்றால் மனச்சிதைவு நோயாளிகளுக்கு? அவர்களின் சிந்தனையில் நேர்க்கோட்டை விட்டு வெளியே யோசிக்கும் பாங்கு(Thinking out of the box) சற்றே அதிகமாகி – நிஜத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் போவதுதான் மனச்சிதைவுக்குள்ளானவர்களின் பிரச்னை.படைப்பாற்றல் vs உளவியல் கோளாறு: இரண்டுக்கும் தொடர்பு உண்டா?படைப்பாற்றலுக்கும் உளவியல் கோளாறுகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்தே வந்திருக்கின்றன என்கின்றன ஆய்வுகள். இரு விஷயங்களில் இவற்றுக்கு ஒற்றுமை இருக்கிறது. Mood எனப்படும் மனோநிலை தொடர்பான தொந்தரவுகள். வித்தியாசமாக சிந்திக்கும் முறைகள். இவைதான் அவை. முதலில் மூட் என்ன என்பதைப் பார்ப்போம்.
அற்புதமான ஒரு கவிஞர் சோகமான மூடுக்கு செல்கிறார் என்றால் வந்து விழுவது எல்லாம் பிரமாதமான சோகக் கவிதைகளாக இருக்கும். மிகவும் உற்சாகமாக இருந்தால், உலகமே தன்வசப்பட்டதாக ஒரு களி நிலைக்குச் சென்று, பாடலும் அதே புத்துணர்வுடன் வந்து விழும். அவரது மனோநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைப் பொறுத்து படைப்புகளின் வண்ணம் வேறுபடும்.அடுத்து, வித்தியாசமாக சிந்திக்கும் முறைகள். ஒரே காரியத்தை ஒரேமாதிரியாக ஒரே நேரத்தில் செய்து கொண்டிருப்பது என்பது அன்றாட கடமையாக வேண்டுமானாலும் இருக்கலாம். மாறுதலே இல்லாத ஒன்றில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும்? எல்லா நாட்களும்தானே நாம் அதே பேருந்தில், அதே நேரத்தில் அலுவலகம் செல்கிறோம்.
என்றாவது ஒருநாள் காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டமோ மெரினா கடற்கரையோ போய், வேறு விதமான மனிதர்களைப் பாருங்கள். பட்டப் பகலில் அசந்து தூங்கும் அந்த மனிதர்களைப் பார்த்து வியப்படைவீர்கள். என்ன வேலை பார்த்து இவர்கள் களைத்துத் தூங்குகிறார்கள் என்று ஆச்சர்யப்படுவீர்கள்.உங்கள் சிடுசிடு அதிகாரியின் முகத்தை மறந்துவிட்டு வேறு மாதிரியான மனிதர்களின் உலகைப் பாருங்கள். வழக்கமாக செல்லும் சாலையை விட்டு வேண்டுமென்றே வேறு திசையில் செல்லுங்கள். உங்கள் ஏரியாவிலேயே உங்களுக்குத் தெரியாத ஏதோ ஓர் ஆச்சர்யமான விஷயத்தைக் கண்டிப்பாகப் பார்ப்பீர்கள்.அதேசமயம் மேற்சொன்ன காரியங்களே தலையாய காரியங்களாக மேற்கொண்டால் அதுவும் கூட முட்டாள்தனம்தான். உலகத்தை வழக்கமாக பார்க்கும் கருப்பு வெள்ளை கண்ணாடியை கழற்றிவிட்டு கலர் கண்ணாடியை அணியுங்கள். வண்ணமிகு உலகம் உங்கள் விழித்திரையை மட்டும் அல்ல… மனத்திரையையும் நிரப்பி, உங்களுக்குள் உள்ள படைப்பாளியை அடையாளம் காட்டும்.
நமக்குள் உறங்கிக்கிடக்கும் ஆழ்மன முரண்பாடுகளின் தொகுப்பே படைப்பாற்றலுக்கும் சரி, மனக்கோளாறுகளுக்கும் சரி… அடிப்படையான ஒரு விஷயம். மனம் அமைதியாக இருக்கும்போது பெரிய விஷயங்கள் எதுவும் எழுத முடியவில்லை என்றே பல புகழ் வாய்ந்த எழுத்தாளர்கள் சொல்லியிருக்கின்றனர்.ஆனால், பல சமயங்களில் ஆழ்மனக் கடலுக்குள் மூழ்கி சிறு பிராயம் முதல் நாம் கடந்து வந்த வலி மிகுந்த மற்றும் துள்ளித் திரிந்த பாதைகளை நினைவுகூர்ந்து பார்க்கும்போதுதான் படைப்புகள் எங்களுக்குள் பிரவாகமாக பொங்குகிறது என்பதும் அவர்களின் கருத்து.இப்படி சொல்வதால் படைப்பாளிகள் அனைவருக்கும் கண்டிப்பாக உளவியல் பிரச்னை இருக்கும் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. தெளிந்த மனதுடன் அற்புதமான கலை உணர்ச்சியுடன் பல படைப்புகளை உருவாக்கிய எத்தனையோ கலைஞர்கள் உடலாலும் உள்ளத்தாலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்திருக்கின்றனர் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

Advertisements
%d bloggers like this: