இஞ்சியும் தேனும் இனிய மருந்து!

உணவே மருந்து என்று சொல்வதற்கு இஞ்சியும், பூண்டும் முக்கிய உதாரணம். இவை இரண்டும், உடலுக்கு எல்லா வகையிலும் இயற்கை மருந்தாக பயன்படுகின்றன. இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி
சாப்பிடுவது, ரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.

ரத்தநாளங்களில் ரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகிறது. ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கிறது. இதை, மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளனர்.
இஞ்சி, மேலும் பல நோய்களுக்கும் அருமருந்தாக உள்ளது. சளியின் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது. தலைவலியைப் போக்கி ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைத்து, மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.
மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. தினம் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறுடன் தேன் கலந்து சூடாக்கி குடித்து வர தொப்பைக் குறையும்.
வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு இஞ்சியை வதக்கி, அதனுடன் தேன் கலந்து சிறிது நீர் வீட்டு கொதிக்க வைத்து அந்த நீரை காலை, மாலை குடித்து வர வயிற்றுப்போக்கு குறையும். இஞ்சியை அரைத்து, அதை நீரில் கலந்து தெளிந்த நீருடன் துளசி சாற்றை கலந்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் குடித்து வர, வாயுத்தொல்லை நீங்கும். இஞ்சி சாறில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் பசி நன்றாக எடுக்கும்.
முற்றிய பசுமையான இஞ்சியின் மேல் தோலைச் சீவி நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமான தேனில், இஞ்சித் துண்டுகள் மூழ்கியிருக்குமாறு ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறிய பின், தினமும் இரண்டு துண்டு வீதம், உணவிற்கு முன், மென்று சாப்பிட்டு வர பசியின்மை, வயிற்றுப் பொருமல் தீரும்.
இஞ்சிச் சாற்றை தொப்புளைச் சுற்றிப் பற்றுப்போட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் நீங்கும். இஞ்சிச் சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி சாறுடன் சிறிதளவு தேன் கலந்து, 2 அல்லது 3 நாட்களுக்குத் தினமும் மூன்று வேளைகள் குடித்தால் வயிற்று வலி மற்றும் வயிறு கனமாக இருத்தல் குணமாகும்.
இஞ்சியை இடித்துச் சாறு எடுக்கவும். ஒரு தேக்கரண்டி அளவு சாறுடன், சிறிதளவு தேன் கலந்து, தினமும் மூன்று வேளைகள், 7 நாட்களுக்குப் பருகினால் சளியுடன் கூடிய இருமல் கட்டுப்படும்.
இஞ்சியைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, தேனில், 48 நாட்கள் ஊறவைக்க வேண்டும். தினந்தோறும், காலையில், ஒரு துண்டு வீதம் சாப்பிட்டு வர வேண்டும். நீண்ட நாட்கள் தொடர்ந்து இவ்வாறு செய்துவர, நரை, திரை, மூப்பு அணுகாது. தேகம் அழகுபெறும்; மனம் பலப்படும்; இளமை நிலைத்திருக்கும். சுக்கைப் பொடி செய்து, அரைத் தேக்கரண்டி அளவு பொடியைச் சிறிது தண்ணீர் கலந்து சூடாக்கி, பசை போலச் செய்து கொண்டு வலி இருக்கும் இடத்தில் பசையைப் பரவலாகத் தடவினால் தலைவலி தீரும். இஞ்சிச் சாறும் வெங்காயச் சாறும் வகைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து கலந்து, சிறிதளவு தேன் சேர்த்து உள்ளுக்குள் சாப்பிட்டால் வாந்தி கட்டுப்படும்.

%d bloggers like this: