Advertisements

ஆல் நியூ மாருதி டிசையர் – மாற்றம் முன்னேற்றம்!

டிசையரை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரின் செடான் வடிவமாகத்தான் மாருதி சுஸூகி முதலில் அறிமுகப்படுத்தியது. ஆனால், இன்று ஸ்விஃப்ட் என்ற அடைமொழியையே உதறிவிட்டு, டிசையர் என்ற தனி அடையாளத்தோடு வளர்ந்திருப்பதுடன், மாதந்தோறும் சுமார் 16,500 கார்கள் விற்பனையாகும் அளவுக்கு இது மக்கள் காராக வளர்ந்து நிற்கிறது.

ஆல்ட்டோவுக்கு அடுத்தப்படியாக, நம் நாட்டில் அதிகம் விற்பனையாகும் காரான டிசையரின் மூன்றாவது தலைமுறை கார் அறிமுகமாகிவிட்டது. ஆல் நியூ டிசையர் எந்த அளவுக்குப் புதுசு? புதிய டிசையரில் என்ன மாறியிருக்கிறது? எதெல்லாம் மாறவில்லை?

வரிச்சலுகையைப் பெறவேண்டும் என்பதால், இது இன்னமும் நான்கு மீட்டருக்கு உட்பட்ட காராகவே இருக்கிறது. டிக்கியை எடுத்து ஸ்விஃப்ட்டுக்குப் பின்னால் ஒட்டியதைப்போலத்தான் முன்பு டிசையர் இருந்தது. ஆனால், புதிய டிசையரில் அந்தக் குறை இல்லை. காரின் நீள அகல உயரங்கள் ஒரு செடான் காருக்கான தோற்றத்துடன் இருக்கின்றன. டிசையரின் முகப்பும் புதுத் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. ஆனால், இந்த டிசைனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என யோசிக்கத் தூண்டுகிறது புதிய கிரில். ஏ.சி நாப், பின்பக்கப் பயணிகளுக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் 12 வோல்ட் பவர் சாக்கெட் ஆகியவை எல்லாம் புதிதாக இருக்கின்றன. அதேபோல, டிசையரின் டிக்கியும் 378 லிட்டர் அளவுக்குப் பெரிதாகியிருக்கிறது. டிக்கி கொஞ்சம் உயரமாக இருப்பதால், அதில் பெட்டி படுக்கைகளை ஏற்றி இறக்குவது கொஞ்சம் சிரமம்.
இன்ஜின்களைப் பொறுத்தமட்டில் எந்த மாற்றமும் இல்லை. 83bhp சக்தியைக் கொடுக்கும் அதே 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான். டீசல் டிசையரிலும் பழைய டிசையரைப் போலவே அதே 1.3 லிட்டர் 4 சிலிண்டர், 75bhp கொண்ட டீசல் இன்ஜின்தான். குறிப்பிடத்தக்க மாற்றம் ஐந்து கியர்கள் கொண்ட AMT கியர்பாக்ஸ். டீசல், பெட்ரோல் ஆகிய இரண்டிலும் இதைச் சேர்த்திருக்கிறார்கள். மைலேஜை அதிகப்படுத்த மாருதியின் பொறியாளர்கள் நிறையவே சிரமப்பட்டிருக்கிறார்கள். பெட்ரோல் டிசையர் லிட்டருக்கு 22 கி.மீ; டீசல் டிசையர் லிட்டருக்கு 28.4 கி.மீ மைலேஜ் (அராய் மைலேஜ்) கொடுப்பதாக மாருதி சொல்கிறது. இதற்குக் காரணம், டிசையரின் எடை குறைந்திருப்பதுதான்.

முந்தைய டிசையரைப் போலவே புதிய பெட்ரோல் டிசையரும் அமைதியாக, ஸ்டார்ட் ஆகி மிதமான வேகத்தை எட்டும் வரை சத்தமில்லாமல் இயங்குகிறது. 3,500 rpm தாண்டிவிட்டால், ஸ்போர்ட்டியான சத்தம் வெளிப்படுகிறது. 6,300 rpm ரெட்லைனைத் தொடும்வரை சக்திக்குப் பஞ்சமில்லாமல் இயங்கும் டிசையரின் அதிகபட்ச டார்க் 4,200 rpm-ல் வெளிப்படுகிறது.  பெட்ரோல் டிசையரில் இருக்கும் மேனுவல் கியர்பாக்ஸ், கியரை மாற்றி மாற்றி ஓட்டினாலும் உற்சாகமாகச் செயல்படுகிறது. AMT-யிலும் ஆட்டோமேட்டிக் வேண்டாம்; மேனுவலாக கியரை மாற்றி மாற்றி ஓட்ட ஆசைப்பட்டால், டிப்ட்ரானிக் மோடு (Tiptronic mode)-க்கு மாற்றி ஓட்டலாம்.

இப்போது டீசலுக்கு வருவோம். ஆரம்பத்தில் போதுமான அளவுக்கு உடனடியாக சக்தி கிடைக்கவில்லை என்றாலும், இன்ஜின் ரெவ் ஆகஆக சக்தி பெருகுவதை உணரமுடிகிறது. ஆனால், இன்ஜின் அதிகமாக ரெவ் ஆகும்போது, சத்தமும் அதிகமாகக் கேட்கிறது. முந்தைய டிசையரைவிட புதிய டிசையர் சாலையில் இருக்கும் குண்டு குழிகள் தரும் அதிர்வுகளைச் சிறப்பாக உள்வாங்கிக்கொண்டு பயணத்தை ஸ்மூத்தாக்குகிறது. பெட்ரோல் டிசையரின் ஸ்டீயரிங் லைட்டாக இருக்கிறது. 4.8 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்ட டிசையரை நகர்ப்புறச் சாலைகளில் ஈஸியாக ஓட்ட முடிகிறது. டீசல் டிசையரின் ஸ்டீயரிங் கொஞ்சம் ஹெவி.

தாராளமான இடவசதி, பிராக்டிக்லாக மட்டுமல்லாது ஓரளவுக்கு செளகரியமாகவும் டிசையர் இருக்கிறது. டாப் வேரியன்ட்டுகளில் பல சிறப்பம்சங்களைக் கொடுத்திருக்கிறார்கள். மைலேஜிலும் முன்னேற்றம் தெரிகிறது. மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க் டிசையருக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
ABS, EBD, இரட்டைக் காற்றுப்பைகள் ஆகியவற்றை அனைத்து வேரியன்டுகளிலும் கொடுத்திருப்பது பாதுகாப்புக்குக் கட்டியம் கூறுகிறது. டிசையரின் விலை குறைந்த வேரியன்ட்டுக்கும் விலை அதிகமான டாப்-எண்ட் வேரியன்ட்டுக்கும் இடையேயான விலை வித்தியாசம், சுமார் நான்கு லட்ச ரூபாய். காரணம் – டிசையரில் மொத்தம் 14 வேரியன்டுகள்! அதனால், யாருக்கு எந்த டிசையர் தேவையோ, அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Advertisements
%d bloggers like this: