Advertisements

எதற்கும் உண்டு எக்ஸ்பைரி!

காலாவதித் தேதி… இதை ஆங்கிலத்தில் ‘எக்ஸ்பைரி டேட்’ என்பார்கள். பால், மருந்து, மாத்திரைகளுக்கு இந்தக் காலாவதித் தேதி அவசியம். காலாவதியாகும் வரை பால் ஓர் உணவாகப் பயன்படும். உயிர் காக்கும் மருந்து காலாவதியானால், அது உயிரைக் காப்பதற்குப் பதில் உயிர்க்கொல்லியாக எதிர்வினையாற்றவும் வாய்ப்பிருக்கிறது.

இதய நோயாளிகள், தங்களுக்குத் தேவையான மாத்திரைகளை எப்போதும் கையில் வைத்திருப்பார்கள். அந்த மருந்துகள் காலாவதித் தேதியை எட்டியிருந்தால், மருந்து செயல்படாமல் போகக்கூடும். உயிர் காக்கவேண்டிய நேரத்தில் உதவாமல் போகலாம். கூடும்.  எனவே, காலாவதித் தேதியைச் சரிபார்த்துக்கொள்வது அவசியமாகிறது.

அபாயங்களை உணராமல், காலாவதியான பல பொருள்களை மிகச் சாதாரணமாகப் பயன்படுத்திக்கொண்டிருப்போம். அதனால், பல்வேறுவிதமான பிரச்னைகளை அனுபவித்திருப்போம். அப்படிச் சில பொருள்களைப் பற்றித் தெரிந்துகொள்வதுடன் எத்தனை காலம் அவற்றைப் பயன்படுத்தலாம் என்பது பற்றியும் அறிந்துகொள்வோமா..?
காலணிகள்: 6 மாதங்கள் வரை
நாம் அணிந்திருக்கும் காலணிகள் கால்களை இறுக்கியபடி, வெதுவெதுப்பான உணர்வைக் கால்களில் ஏற்படுத்தினால், பூஞ்சைத் தொற்றுகள் உருவாகியிருக்கும். எனவே, காலணிகள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பிரச்னை  ஏற்படுத்தினால், அவற்றை உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
உள்ளாடைகள்: 1 – 2 ஆண்டுகள் வரை
பொதுவாகவே, ஓர் ஆண்டுக்குள் உடல் எடை அதிகரிக்கவோ குறையவோ வாய்ப்புள்ளது. இதனால், உடலின் அமைப்பும் மாறலாம். இதை அறியாமல் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உள்ளாடைகளை அணிவது சரியல்ல. அவற்றை ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் மாற்றிவிடுவது நல்லது.
பாத்திரம் சுத்தம் செய்யும் சோப்: 12 – 18 மாதங்கள் வரை

இவற்றை ஆஃபர்களில் வாங்கிக் குவிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், அதைப் பல ஆண்டுகளுக்கு வைத்திருக்காமல்  தேவையின்போது பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், அதன் வீரியம் 18 மாதங்கள் வரை மட்டுமே இருக்கும்.
தலையணை: 2 – 3 ஆண்டுகள் வரை
தலையணை சில காலங்களில் தோற்றம் மாறிவிடும். அதாவது, சுருங்கியோ உப்பலாகவோ காணப்படும். ஆகவே, இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் கழுத்து வலி வரலாம். அதில் அழுக்குகளும் தூசிகளும் சேர்ந்திருக்கக்கூடும். அலெர்ஜியை ஏற்படுத்தலாம்.
ரன்னிங் ஷூஸ்: ஓர் ஆண்டு வரை
250 – 300 மைல்கள் வரை ஷூ அணிந்து ஓடியிருந்தாலே, அதில் உள்ள குஷன் நீங்கியி ருக்கும். ஆகவே, அதைப் பயன்படுத்தும்போது மூட்டுகளில்  அழுத்தம்  ஏற்பட்டு வலி உண்டாகலாம்.
சலவை சோப்: 6 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை
இதன் வீரியம் குறைந்த பிறகு, துணிகளைச் சரியாகச் சுத்தம் செய்யாது. ஆகவே, காலாவதித் தேதியைப் பார்த்துப் பயன்படுத்துவது நல்லது.
துண்டு: 1-3 ஆண்டுகள் வரை
ஈரமான துணியில் பாக்டீரியாக்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளது. ஆகவே, ஒவ்வொரு முறையும் வெயிலில் காயவைப்பது நல்லது. இப்படிச் செய்தாலும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் துண்டைப் பயன்படுத்தவே வேண்டாம்.
கிருமிநாசினிகள்: 3 – 6 மாதங்கள் வரை
காலாவதித் தேதியைக் கடந்த பிறகு பயன்படுத் தினால், முழுமையான பாதுகாப்பைத் தராது. கிருமிகள் நீக்கும் ஆற்றலை இழந்திருக்கக் கூடும்.
மசாலா: ஓர் ஆண்டு வரை
மசாலா ஓர் ஆண்டைத் தாண்டியிருந்தால் அதன் சுவையில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். வாசனையும் நீங்கியிருக்கும். இதைப் பொடியாக அரைத்து வைத்திருந்தால் ஆறு மாதத்துக்கு மேல் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
மெத்தைகள்: 5 முதல் 10 ஆண்டுகள் வரை
பழைய, தளர்வான மெத்தைகள் முதுகு வலியை ஏற்படுத்தும். அசௌகரிய உணர்வைத் தந்து, தூக்கத்தையும் கெடுக்கும்.
குளியலுக்குப் பயன்படுத்தும் பஃப்:  6 மாதங்கள் வரை
பூஞ்சைகள் உருவாகியிருக்கும். அதன் அமைப்பும் மாறியிருப்பதால் சருமப் பிரச்னைகள் வரக்கூடும்.
மாவு: 6 – 12 மாதங்கள் வரை
மாவின் தரம் குறைந்து கெட்டுப்போகும்; துர்நாற்றம் வரும். பூச்சிகள், வண்டுகள் உருவாகும்.
ஆன்டிபாக்டீரியல் க்ரீம்: ஓர் ஆண்டு வரை
இதில் உள்ள கெமிக்கல்கள், வேதியியல் மாற்றம் அடைந்திருக்கும் என்பதால் பலனில்லாமல் போகலாம். சிலருக்கு, சருமப் பாதிப்புகளும் ஏற்படலாம்.
பழங்கள் மற்றும் காய்கறிகள்:
மாம்பழம், பப்பாளி மாதிரியான சில பழங்களில் கார்பைடு கல் போட்டுப் பழுக்க வைக்கிறார்கள். எத்திலீன் வாயுவை ஸ்பிரே செய்தும், எத்திலீன் கரைசலில் முக்கியெடுத்தும் பழுக்க வைத்து விற்பனைக்கு அனுப்பப் படுகின்றன. சிலவகைப் பழங்களின் எடையை அதிகரிக்கச் செய்ய ரசாயனங்களை உபயோகிப் பதும் நடக்கிறது. பழம் அழுக ஆரம்பித்தால், அதில் உள்ள எத்திலீன் வாயு வெளியேற ஆரம்பிக்கும். அது  உயிரையே பறிக்கிற அளவுக்கு ஆபத்தானது.
காய்கறிகளை ஃப்ரெஷ்ஷாக வாங்கி, உடனே உபயோகித்துவிட வேண்டும். அழுகின பகுதியை அப்புறப்படுத்திட்டு, நல்ல பகுதியை உபயோகிப்பது என்பது கூடாது.
இருமல் சிரப்
இருமலுக்கு மருத்துவர் பரிந்துரைக்கிற சிரப்பை இருமல் நிற்கும்வரை கொடுப்பது வழக்கம். பிறகு, அதை அலமாரியில் வைத்துவிடுவார்கள். ஆறு மாதங்களோ, ஒரு வருடமோ கழித்து இருமல் வந்தாலும், அதே மருந்தை மறுபடி உபயோகிப்பார்கள். பாட்டிலில் குறிப்பிடப்பட்டிருக்கிற எக்ஸ்பைரி தேதி முடியவில்லையே எனச் சமாதானம் சொல்லிக் கொள்வார்கள்.
ஆனால், இருமல் மருந்து மாதிரியான சில மருந்துகளைத்  திறந்து பயன்படுத்திவிட்டாலே, அதன் காலாவதித் தேதி மாறிவிடும். எனவே, இருமல் நின்றபிறகு, அந்த மருந்தை அப்புறப் படுத்துவதுதான் முறை. பத்திரப்படுத்தக் கூடாது.


எப்படிக் கண்டுபிடிப்பது?
* expiry
expiry date
expires
exp
exp date

use by
use before
*   நீங்கள் வாங்கும் மாத்திரைப் பட்டைகள், மருந்து பாட்டில்களின் மேல் அவற்றின் காலாவதித் தேதி  மேலே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றாகக் குறிப்பிடப் பட்டிருக்கும்.
*   சில மருந்துகளுக்குக் குறுகிய கால காலாவதி கெடு குறிப்பிடப்பட்டிருக்கும். குழந்தைகளுக்குத் தண்ணீரில் கரைத்துக் கொடுக்கக்கூடிய ஆன்டிபயாட்டிக் பவுடர்கள், கண்களுக்கான டிராப்ஸ் போன்றவை இந்த ரகம். இவற்றை ஒரு வாரம் முதல் அதிகபட்சம் 1 மாதத்துக்குள் உபயோகிக்கச் சொல்லி, உறையின் மீது குறிப்பிட்டிருப்பதைக் கவனிக்கலாம்.


ஆயுர்வேத மருந்துகளும் காலாவதியாகுமா?
`காலாவதி என்பது ஆங்கில மருந்துகளுக்கு மட்டுமே… அது ஆயுர்வேத மருந்துகளுக்குப் பொருந்தாது’ என்றொரு எண்ணம் நிலவுகிறது.
ஆயுர்வேத மருந்துத் தயாரிப்பில் பல வகைகள் உண்டு. அந்தத் தயாரிப்பைப் பொறுத்ததுதான் காலாவதி. பொதுவாக, ஆயுர்வேத மருந்துகளில் ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கப்படுவதில்லை. சிலவற்றில் ப்ரிசர்வேட்டிவ் தவிர்க்க முடியாததாகவும் இருப்பதுண்டு. மருந்தின் வடிவம், அதில் சேர்க்கப்படும் பொருள்கள் எனப் பலவற்றையும் பார்த்தே, அது எத்தனை நாள்களுக்குள் உபயோகிக்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும்.

ஆயுர்வேத மருந்துகள் பெரும்பாலும் நெய், சுத்தமான நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய், தேன், வெல்லம் என இயற்கையான ப்ரிசர்வேட்டிவ் சேர்த்துத் தயாரிக்கப்படுவதால், அவையே அந்த மருந்துகளைக் கெட்டுப் போகாமல் வைக்கும்.  அதுவும் ஒரு  குறிப்பிட்ட காலம் வரையில்தான். மருந்துகளில் இத்தனை காலத்துக்குள் உபயோகிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலம் முடிந்ததும், பவுடர் வடிவ மருந்து கட்டித்தட்டும். லேகியத்தில் பூஞ்சைக் காளான் வரும். நிறமும் மணமும் மாறும்.


மருந்துகளில் மாற்றம் நிகழுமா?
மருந்துகளின் காலாவதித் தேதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்து விவரிக்கிறார் தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் அப்துல் காதர்.

“1940 மற்றும் 1945-ம் ஆண்டின் இந்திய அரசின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருள்களின் சட்டத்தின்படி அனைத்து மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருள்களுக்கும் ஒரு காலாவதித் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அலோபதி மருந்துகளுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை இந்தக் காலாவதித் தேதி நிர்ணயிக்கப்படும். சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றைப் பொறுத்து, தனது குணங்களில் மாறுதல் அடையும் மருந்துகளுக்கு இதைவிடக் குறைவான காலம் காலாவதித் தேதி நிர்ணயிக்கப்படும். இப்படி ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் என ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்படும்.

மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருள்களின் சட்டத்தில் P அட்டவணையில் இந்த மருந்துகளின் விவரங்கள் மற்றும் காலாவதித் தேதி போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மருந்தும் எந்தெந்த வெப்ப நிலைகளில் மாறுதல் அடைகின்றன என நடத்தப்பட்ட சோதனை முடிவுகளைப் பொறுத்து, இவை முடிவு செய்யப்படும். இதுதவிர, மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் தனது மருந்துகளுக்குக் காலாவதித் தேதிகளை நிர்ணயிக்கலாம். ஆனால், அது அரசு சொன்ன கால அளவுக்குக் குறைவானதாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு மருந்துக்கு அரசு 3 ஆண்டுகள் அளவு என்பதைக் காலாவதித் தேதியாக அறிவிக்கிறது என்றால், அந்த மருந்தைத் தயாரிக்கும் நிறுவனம் இரண்டு ஆண்டுகள் எனக்கூட நிர்ணயித்துக்கொள்ளலாம்.
இந்த அட்டவணையில் இல்லாமல், புதிதாக அறிமுகமாகும் மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கும்போதே, காலாவதித் தேதிகளைக் குறிப்பிடும். பிறகு, புதிய மருந்துகளை சில ஆண்டுகள் இடைவெளியில் மேற்கண்ட சட்டத்தில் மத்திய அரசு இணைக்கும். மருந்துகளின் தன்மையைப் பொறுத்துதான் இவை அமைகின்றன. குறிப்பிட்ட காலாவதித் தேதிக்கு அடுத்து, அந்த மருந்துகள் பயன்படுத்தத் தகுந்தவை அல்ல. ஐந்து ஆண்டுகள் எனக் காலாவதித் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ள மருந்தை, அந்த ஐந்து ஆண்டுகளுக்குள் எப்போது உபயோகித்தாலும் ஒரே பலன்தான். எந்த மாறுதல்களும் இல்லை. ஆனால், அந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த மருந்தில் மாற்றங்கள் ஏற்படும். சில மருந்துகள் வீரியம் குறையும்; சில மருந்துகள் குணம் மாறும். அது அந்தந்த மருந்துகளின் தன்மையைப் பொறுத்தது.”

Advertisements
%d bloggers like this: