Advertisements

உனக்கு இந்தப் பதவியைக் கொடுத்தது யார்?’ – தினகரனைத் திட்டித் தீர்த்த சசிகலா

அ.தி.மு.கவில் இருந்து தினகரனை ஒதுக்கி வைக்கும் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’ என நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்ததை அதிர்ச்சியோடு கவனிக்கிறது சசிகலா அணி. ‘பெங்களூரு சிறையில் சசிகலாவின் கோபத்தை தினகரனால் எதிர்கொள்ள முடியவில்லை. ‘இரண்டு மாதம் அமைதியாக இரு’ என்று அவர் கூறியதை, அணிகள் இணைவதற்கான அவகாசமாக மாற்றிக் கூறிவிட்டார் தினகரன்’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், முன்ஜாமீன் பெற்ற கையோடு, ‘கட்சிப் பணிகளில் ஈடுபாடு காட்டப் போகிறேன்’ என அறிவித்தார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். இதற்கு ஆதரவு அளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நேற்று தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று மாலை டி.டி.வி.தினகரன், அவருடைய மனைவி அனுராதா உள்ளிட்ட குடும்பத்து உறவுகள் சசிகலாவை சந்திக்கச் சென்றனர். அவருக்கு ஆதரவாக 11 எம்.எல்.ஏக்களும் சில எம்.பிக்களும் ஆதரவாக இருப்பதை அறிந்து, 27 அமைச்சர்கள் ஒன்றுதிரண்டு கூட்டம் நடத்தினர். கூட்டம் குறித்து பேட்டியளித்த ஜெயக்குமார், ‘ எம்.ஜி.ஆர் ஆரம்பித்த, ஜெயலலிதா வழி நடத்திய அ.தி.மு.கவை காக்கவேண்டும். இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் தொடர வேண்டும். அதற்குப் பிறகும் அ.தி.மு.க ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சி மற்றும் ஆட்சி நலனைக் கருத்தில் கொண்டு சசிகலா, தினகரன் சார்ந்தவர்களை கட்சியில் இருந்து முழுமையாக விலக்கி வைக்க வேண்டும் எனக் கூட்டத்தில் ஒருமித்த முடிவை எடுத்தோம்’ என அறிவித்தார். இதனை எதிர்பார்க்காத தினகரன், ‘என்னை நீக்கச் சொல்லும் அளவுக்கு ஜெயக்குமார் வானளாவிய அதிகாரம் படைத்தவரா?’ என சீறினார். 

“தினகரன் பக்கம் 11 எம்.எல்.ஏக்கள் இருப்பதால், ஆட்சியே தங்கள் கையில் இருப்பதுபோலப் பேசி வருகின்றனர். ‘சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்’ என்றுதான் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வருகிறார். அவர் பக்கம் 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் விலகிக் கொண்டாலும், ஓ.பி.எஸ் அணியின் எம்.எல்.ஏக்கள் எங்களை ஆதரிப்பார்கள். ஆட்சியும் கட்சியும் நீடிப்பதற்காக பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க இருக்கிறோம். வரும் 14-ம் தேதி தொடங்கும் சட்டசபைக் கூட்டத் தொடரை எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி கொண்டு செல்வார். தற்போது தினகரன் பக்கம் இருக்கும் எம்.எல்.ஏக்கள் சிலரும் எங்கள் அணிக்கு வர இருக்கிறார்கள்” என்கிறார் கொங்கு மண்டல அ.தி.மு.க அம்மா அணியின் நிர்வாகி ஒருவர். 

“பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுடனான சந்திப்பு முடிந்த பிறகு, மிகுந்த மனஅழுத்தத்தோடுதான் வெளியே வந்தார் தினகரன். 40 நாட்கள் சிறை வாசத்துக்குப் பிறகு, நடந்த சம்பவங்களை சசிகலாவிடம் விளக்குவதற்காக குடும்பத்தினருடன் சென்றார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இருந்து தினகரனின் செயல்பாடுகளை அவ்வப்போது சசிகலாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் திவாகரன். குடும்ப உறுப்பினர்களை அவர் பழிவாங்கிய விதத்தைப் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறியிருந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற நாளில் தினகரன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் சசிகலா. தற்போது நிலைமை மாறிவிட்டது. நேற்றைய சந்திப்பில் உச்சகட்ட கோபத்தை தினகரன் மீது காண்பித்தார். இப்படியொரு கோபத்தை தினகரன் குடும்பத்தினர் யாரும் எதிர்பார்க்கவில்லை” என விவரித்த மன்னார்குடி குடும்ப உறவினர் ஒருவர், தொடர்ந்து சிறையில் பேசப்பட்ட விஷயத்தை விளக்கினார். “இந்த சந்திப்பின்போது பேசிய சசிகலா, ‘இந்தக் கட்சிக்கும் ஆட்சிக்கும் ‘நான் மைனஸ்’ என்று மற்றவர்கள் சொல்லலாம். ஆனால், நீயே அதை நிரூபிப்பதுபோல் நடந்து கொண்டது எந்தவகையில் சரி? இதனை மற்ற அமைச்சர்கள் ஒரு காரணமாக எடுத்துக் கொள்ளும்படியான சூழலை உருவாக்கிவிட்டாய். இதன் தொடர்ச்சியாக, உன்னையும் ஒதுக்கி வைத்துவிட்டனர். கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நமது குடும்ப உறுப்பினர்கள் நீக்கப்பட்டபோது, பலரும் கைதானார்கள். நீ அமைதியாக இருந்ததால், எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உன்னை, துணைப் பொதுச் செயலாளராகக் கொண்டு வந்ததே நான்தான். ஜெயிலில் இருந்து வந்த பிறகும், தீவிர அரசியலில் இருந்து சில வாரம் ஒதுங்கியிருக்காமல், ‘நான் கட்சிப் பணியில் ஈடுபடுவேன்’ எனக் கூறியது மிகவும் தவறானது. சூழல்களைப் புரிந்து கொண்டு நீ பேசியிருக்க வேண்டும். ‘இந்த அரசு வேண்டுமா? வேண்டாமா?’ என்றால், எம்.எல்.ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள். ஜெயலலிதாவுக்குப் பிறகு கட்சி மற்றும் ஆட்சியைக் காப்பாற்றியது நான்தான். இதைப் பற்றித்தான் நீ வெளியில் பேசியிருக்க வேண்டும். அந்த நன்றிகூட உனக்கு இல்லாமல் போய்விட்டது. நான்தான் எல்லாம் என இனியும் செயல்பட்டால், உன்னைக் கட்சியில் இருந்து தூக்குவதற்கு எனக்கு ஒரு நொடி போதாது. ஈ.டி வழக்கில் நீ உள்ளே போய்விட்டால், குடும்பத்தில் இருந்து வேறு யாரையாவது என்னால் பதவிக்குக் கொண்டு வர முடியும். உன் நடவடிக்கையால் குடும்பத்துக்குள் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்று தெரியுமா? இந்த அரசாங்கத்தைக் காப்பாற்றியது நான்தான். என்னை மறந்து செயல்பட நினைத்தால், நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும். நான் சொல்லும்வரையில் இரண்டு மாத காலம் நீ அமைதியாக இரு’ என கடுமையாக சத்தம் போட்டிருக்கிறார். சசிகலாவின் கோபத்துக்குப் பதில் கூற முடியாமல் வெளியே வந்தார் தினகரன்” என்றார் விரிவாக. 

“அ.தி.மு.கவில் இருந்து 2011-ம் ஆண்டு நீக்கப்பட்ட பிறகு, மறுபடியும் கார்டனுக்குள் நுழைந்தபோது, ‘அரசியலில் ஈடுபட மாட்டேன்’ என ஜெயலலிதாவிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டுத்தான் வந்தார் சசிகலா. அந்த சத்தியத்தை மீறியதற்குக் காரணம், ‘பொதுச் செயலாளர் பதவியை விட்டுவிடக் கூடாது’ என்பதற்காகத்தான். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற நாளில் இருந்து சசிகலாவின் நெருங்கிய உறவினர்களை ஒதுக்கி வைக்கும் வேலைகளில் ஆர்வம் காட்டினார் தினகரன். ‘சசிகலா குடும்பத்தில் இனி யாருக்கும் பதவி இல்லை’ என நேரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பு திவாகரன் அணியை கொதிக்க வைத்தது. தினகரனுக்கு எதிரான லாபியை உருவாக்கும் பணிகளில் ஆர்வம் காட்டினர் திவாகரன். பிரதமர் அலுவலகத்துடனும் ஆளுநர் மாளிகையுடனும் நெருக்கம் இருப்பதை வெளிக்காட்டத் தொடங்கினார். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டதை குடும்ப உறவுகளே வரவேற்றனர். இனி கட்சியில் இருந்து தினகரனை முழுமையாக ஒதுக்கி வைக்கும் வேலைகளைத் தொடங்கியுள்ளது திவாகரன் அணி. அதன் வெளிப்பாடுதான் சசிகலாவின் கோபம்” என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். சட்டசபைக் கூட்டத் தொடரில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்துவார்கள்’ என அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வரும் சூழலில், ‘122 எம்.எல்.ஏக்களைவிட கூடுதலாக இந்த அரசுக்கு ஆதரவு பெருகியுள்ளது. எந்த சூழலிலும் என்னுடைய ஆட்சிக்குப் பிரச்னை ஏற்படப் போவதில்லை’ என தைரியமாக வலம் வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ‘மூன்று அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது அ.தி.மு.க. தேர்தல் ஆணையத்தின் முடிவை ஒட்டியே, அ.தி.மு.கவின் அடுத்தகட்ட பயணம் தொடங்கும்’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Advertisements
%d bloggers like this: