ஆட்சியைக் கலைக்கவும் தயங்க மாட்டேன்!’ – எம்.எல்.ஏக்களிடம் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலை மனதில் வைத்து ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். ‘எங்கள் ஆதரவை பா.ஜ.க நேரில் வந்து கேட்கட்டும்’ என வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர் அவர் ஆதரவு எம்.எல்.ஏக்கள். இந்த ஆட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ரசிக்கவில்லை. ‘என்னுடைய தயவில்தான் ஆட்சி நீடிக்கிறது. இதை நினைவில் வைத்துக்கொண்டு பேசுங்கள்’ என எம்.எல்.ஏக்களை அவர் எச்சரித்திருக்கிறார்.

அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரனை இதுவரையில் முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். நாளுக்குநாள் அவருக்குப் பெருகும் ஆதரவைக் கண்ட அ.தி.மு.கவினர், ‘ எடப்பாடி பழனிசாமி அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தி வருகிறார் தினகரன். ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கலாம்’ எனப் பேசி வந்தனர். ஆனால், ‘எம்.எல்.ஏக்கள் சந்திப்புகள் அனைத்தும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்குக் கொடுக்கும் மறைமுக எச்சரிக்கை’ என்கின்றனர் எம்.எல்.ஏக்கள் சிலர். நேற்று பா.ஜ.க எம்.பி இல.கணேசனும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், ‘குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க நிறுத்தும் வேட்பாளரை அ.தி.மு.க ஆதரிக்கும்’ எனப் பேட்டி அளித்தனர். இந்தப் பேட்டியால் கொந்தளித்த ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்க.தமிழ்ச்செல்வன், ‘இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறோம். ஆதரவு தேவை என்றால், எங்கள் கட்சியின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரட்டும். பொதுச் செயலாளரால் தேர்வு செய்யப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் இங்கு இருக்கிறார்’ எனச் சுட்டிக் காட்டினார். 

இதைப் பற்றி நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவு நிர்வாகி ஒருவர், “அ.தி.மு.கவின் ஆதரவு இல்லாமலேயே, குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றுவிடும். எங்கள் ஓட்டு என்பது அவர்களுக்குக் கூடுதல்தான். பெருவாரியாக வெற்றி பெறுவதற்கு நாங்கள் தேவைப்படுகிறோம். முதலமைச்சர் கூறினாலும், தினகரன் சொல்வதைத்தான் அவர் கட்டுப்பாட்டிலுள்ள எம்.எல்.ஏக்கள் கேட்பார்கள். தேர்தல் நாளன்று புறக்கணிப்பு செய்யவும் வாய்ப்பு அதிகம். தொடர் சிறைவாசம், வழக்கு நெருக்கடி என தினகரனை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ள பா.ஜ.க விரும்புகிறது. ‘இவ்வளவு தூரம் அலைக்கழிக்கப்பட்டுவிட்டோம். இனி என்ன நடந்தாலும் சரி’ எனக் களத்தில் நேரடியாக இறங்கிவிட்டார் தினகரன். ‘அ.தி.மு.க அரசின் அனைத்து எம்.எல்.ஏக்களும் மோடி கை காட்டும் வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள்’ என நம்பிக் கொண்டிருந்தனர் பா.ஜ.க நிர்வாகிகள். அந்த நம்பிக்கையைப் பொய்த்துப் போக வைத்துவிட்டார் தினகரன். இதனால் மத்திய அரசின் கூடுதல் அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி” என்றார் விரிவாக. 

ராஜேந்திர பாலாஜி அதேபோல், முதல்வர் பழனிசாமியைக் கூடுதல் கொதிப்புக்கு ஆளாக்கிய மற்றொரு விஷயம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சசிகலா ஆதரவு பேச்சு. ‘நான் உள்பட அனைவருமே சசிகலா குடும்பத்தால் கட்சியில் முன்னேறியவர்கள்தான். நேரம் இல்லாததால்தான் தினகரனைச் சென்று சந்திக்க முடியவில்லை’ எனப் பேசியிருந்தார் ராஜேந்திர பாலாஜி. இதுகுறித்து நம்மிடம் பேசிய கொங்கு மண்டல அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், “எம்.எல்.ஏக்களும் அமைச்சர் ஒருவரும் இவ்வாறு நேரடியாக சசிகலா தரப்பினரை ஆதரித்துப் பேசுவதை முதல்வர் ரசிக்கவில்லை. கடந்த மூன்று நாள்களாக எம்.எல்.ஏக்களைச் சந்தித்துப் பேசி வருகிறார் பழனிசாமி. கடைசி நாளான நேற்று எம்.எல்.ஏ ஒருவரிடம் பேசிய முதல்வர், ‘என்ன நினைத்துக்கொண்டு இவ்வாறு பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் செயலில் இறங்க ஆரம்பித்தால், இவர்கள் யாரும் தாங்க மாட்டார்கள். அவரவர் பொறுப்பை உணர்ந்து அமைதியாக இருந்தால், எந்தப் பிரச்னையும் இல்லை. அந்தக் குடும்பத்துக்கு ஆதரவாகப் பேசும் அமைச்சரின் இலாகாவைப் பறித்துவிட்டால், மற்றவர்களும் அமைதியாக இருப்பார்கள். இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய தயவில்தான் ஆட்சி நடக்கிறது.

என்னுடைய சொந்த முயற்சியில்தான் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் அரசு நடந்து கொண்டிருக்கிறது. முதல்வருக்கான அதிகாரம் பற்றி இவர்களுக்குத் தெரியுமா? நான் நினைத்தால் இந்த ஆட்சியை உடனே கலைத்துவிட முடியும். இனியும் இவர்கள் அதிகப்படியாக பேசினால் அதுதான் நடக்கும். எனக்கு எதிராகப் பேசும் அமைச்சர்களை நீக்கவும் தயங்க மாட்டேன். சூழல்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். இனியும் இப்படிப் பேச வேண்டாம் என அவரிடம் (அமைச்சரிடம்) சொல்லுங்கள். எனக்கு எதிரில் மாபெரும் சக்தி படைத்தவர் யாரோ, அவரை மட்டுமே அனுசரித்துச் செல்வேன்’ எனக் கொந்தளித்தார். ‘இந்தத் தகவல் எதிர்முகாமின் கவனத்துக்குச் செல்ல வேண்டும்’ என்று முதல்வர் நினைத்தார். அமைச்சரை நேரடியாக அழைத்து சத்தம் போட்டால், விரோதம் ஏற்படும் என்பதால்தான் தூதுவர்கள் மூலம் தகவல் அனுப்பினார். அவருக்கு எதிரிலுள்ள வலுவான சக்தியாகப் பிரதமரை நினைக்கிறார். ‘ஜெயலலிதா இறந்தபிறகு, சசிகலாவிடம்தான் அதிகாரமுள்ளது’ என்ற மனநிலையில்தான் கட்சி நிர்வாகிகள் உள்ளனர். இவர்களுக்குச் சூழல்களைப் புரிய வைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி” என்றார் விரிவாக.

எம்.எல்.ஏக்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மத்திய அரசை ஆட்டிப் படைக்க நினைக்கிறார் தினகரன். அவருடைய முயற்சிகளைப் பற்றி எடப்பாடி பழனிசாமி எந்தக் கவலையும் அடையவில்லை. ‘தினகரனின் முயற்சிகளுக்கு ஒத்துப் போய்விட்டால், சுதந்திரத்தை நிரந்தரமாக இழக்க நேரிடும்’ என்பதை வெளிப்படையாகவே பேசத் தொடங்கியிருக்கிறார்கள் கொங்கு மண்டல நிர்வாகிகள்.

<span>%d</span> bloggers like this: