நல்லெண்ணம் நல்லதையே செய்யும்!

நல்லவர்களின் வார்த்தைக்கு தெய்வமே செவிசாய்க்கும் என்பதற்கு உதாரணமான கதை இது:
வட மதுரையில், அரிவியாசர் எனும் பக்தர் வாழ்ந்து வந்தார். அன்பையும், அகிம்சையையும் போதிக்கும் அவரின் மனமும், நாவும் எப்போதும் நாராயண நாமத்தையே உச்சரிக்கும்.
ஒரு சமயம், அரிவியாசருக்கு, பூரி ஜகந்நாதம் சென்று, பகவானை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அதன்படி, வட மதுரையிலிருந்து, ஜகந்நாதம் புறப்பட்டார்.
வழியில், ஒரு அழகான சோலை தென்பட, அதன், நடுவில், காளி கோவில் இருந்தது. நடந்த களைப்பு தீர, கோவில் மண்டபத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தவர், பின், அப்படியே, நாராயணனை உள்ளத்தில் தியானித்தபடி, பக்தியில் ஆழ்ந்து விட்டார். திடீரென, ஏதோ ஒரு ஓசை கேட்க, திடுக்கிட்டு, திரும்பி பார்த்தார்.
அங்கே, ஒருவர், ஆட்டை, ‘தரதர’ வென இழுத்து வந்து, காளி கோவிலில் பலி கொடுத்தார். ஆடு, துடிதுடித்து இறந்தது. இதைப் பார்த்த அரிவியாசருக்கு, உடலும், உள்ளமும் பதை பதைத்தது.
‘அமைதியும், அழகும் நிறைந்த இடத்தில் ஆபத்து இருக்கும் என்பர்; அதற்கேற்றாற் போல், இனிமையான இந்த இடத்தில், இவ்வளவு கொடுமையா… இனிமேல் இங்கிருக்க கூடாது…’ என்று எண்ணி, அங்கிருந்து புறப்பட்டார், அரிவியாசர்.
அப்போது, விக்கிரகத்திலிருந்து வெளிப்பட்ட காளி, ‘அரிவியாசா… என் ஆலயத்தில் வந்து தங்கியிருந்த நீ, பசியோடு செல்வதா… வா, நான் உனக்கு உணவிடுகிறேன்; பசியாறி போ…’ என்றாள்.
‘தாயே… கருணை பெருக்கெடுத்து ஓடும் உன் சன்னிதியில், உதிர வெள்ளம் ஓடலாமா… அதை, நீ ஏற்கலாமா… இன்று முதல், நீ உயிர்ப்பலி விரும்பாதிருந்தால், நீ அளிக்கும் உணவை நான் ஏற்கிறேன்; இல்லையேல், பசியோடு போகிறேன்…’ என்றார், அரிவியாசர்.
உத்தம பக்தனின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, ‘அரிவியாசா… உன் விருப்பம் நிறைவேறும்; இனி, நான் உயிர் பலி ஏற்க மாட்டேன்; வந்து பசியாறிச் செல்…’ என்றார், காளிதேவி.
அத்துடன், அந்நாட்டு அரசர் கனவில் காட்சியளித்து, ‘மன்னா… இன்று முதல், என் சன்னிதியில் உயிர்க்கொலை கூடாது…’ எனக் கூறி, எச்சரித்தாள். அதன்படியே, மன்னரும் பறையறிவித்து, காளியின் கட்டளையை தெரியப்படுத்தி, உயிர் பலியைத் தடுத்தார். மேலும், அரிவியாசரிடம் வந்து, அவரை வணங்கி, நல்லருள் பெற்றார்; பின், ஜகந்நாதம் சென்று, பகவானை தரிசித்தார், அரிவியாசர்.
தன் சொற்படி, தெய்வங்களையே செயல்பட வைத்த, அருளாளர்கள் நிறைந்த பூமி இது!

<span>%d</span> bloggers like this: