Advertisements

மனதில் உறுதி வேண்டும்!

ப்போதுதான் ஒரு சிகரெட்டைப் புகைத்திருப்பார். கீழே போட்டு மிதித்த கையோடு இன்னொன்றை எடுத்துப் பற்றவைப்பார். இப்படி ஒருவரை அல்ல… பலரை நாம் பார்த்திருப்போம். இதைத்தான், `செயின் ஸ்மோக்கிங்’ (Chain Smoking) என்கிறோம். அப்படிப் புகை பிடிப்பவர், `செயின் ஸ்மோக்கர்’ (Chain Smoker). புகைப்பழக்கத்தில் இருந்து ஒருவரை விடுவிப்பது கடினம்… செயின்

ஸ்மோக்கர்ஸை விடுவிப்பது மிக மிகக் கடினம். ஆனால், இப்படித் தொடர்ந்து புகை பிடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதைத் தெரிந்துகொண்டாலே இவர்கள் இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டுவிடுவார்கள்.

கவனம்… நாள் ஒன்றுக்கு 10 சிகரெட்டுக்கு மேல் பிடிப்பவர்கள், தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் புகைப்பழக்கத்தைத் தொடர்ந்தால், அவர்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம்.

புகைப்பழக்கத்தால் ஏற்படும் பிரச்னைகள்

* தொடர்ந்து புகை பிடிப்பதால், நுரையீரல் தொற்று ஏற்படும். அது, நிரந்தர நுரையீரல் செயலிழப்புக்குக் காரணமாகிவிடும். இதனால், ஆக்சிஜனை வெளியிலிருந்து (செயற்கை முறையில்) எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக நேரிடும்.  இது உளவியல் சிக்கலோடு பொருளாதாரப் பிரச்னையையும் ஏற்படுத்தும்.

மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் ஏற்படுவதற்குப் பிரதான காரணம் புகை பிடிப்பதுதான். இதுவும் ஆஸ்துமாவைப் போல மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். ஆஸ்துமா  என்பது ஒவ்வாமையால் ஏற்படுகிறது. நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய், புகையைத் தொடர்ந்து சுவாசிப்பதால் ஏற்படுகிறது.

புகைப்பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

புகைப்பழக்கத்தை நிறுத்தத் தேவை மனக்கட்டுப்பாடு. `புகை பிடிக்கக்கூடாது’ என உறுதியாக நினைத்துவிட்டால் உடனடியாக நிறுத்திவிடலாம்.

புகைப்பழக்கத்தைப் பொறுத்தவரை உடனே நிறுத்தினால், எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

மனக்கட்டுப்பாடு இருந்தாலும் நிறுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு, `நிக்கோட்டின் மாற்றுச் சிகிச்சை’ (Nicotine Replacement Therapy) வழங்கப்படும். தேவைப்படுவோருக்கு மட்டும் இதை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். இதில் நிக்கோட்டினை மாத்திரைகள், சாக்லெட்கள், சூயிங்கம் என வேறு வடிவங்களில் மாற்றிக் கொடுப்பார்கள். புகை பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றினால், உடனே இவற்றைப் பயன்படுத்தலாம். மருந்துவர் பரிந்துரைக்கும் காலம் வரை இவற்றைச் சாப்பிடலாம். சுயமாகச் சாப்பிடக் கூடாது.

இந்த முறைகளாலும் நிறுத்த முடியாவிட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படிச் சிகிச்சைகள் எடுத்துக்கொண்டு, புகைப்பழக்கத்தைக் கைவிடலாம்.

அருகில் இருப்பவர்களுக்கும் ஆபத்து!

புகைப்பவர்களுக்கு அருகிலிருந்து, புகையைச் சுவாசிப்பதை  `என்விரான்மென்டல்  டொபெக்கோ ஸ்மோக்’ (Environmental Tobacco Smoke – ETS) அல்லது `பாஸிவ் ஸ்மோக்’ (Passive Smoke) என்பார்கள். புகை பிடிப்பவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுமோ, அதே பாதிப்புகள் இவர்களுக்கும் ஏற்படும். எவ்வளவு நேரம் புகைப்பவர்களுக்கு அருகில் இருக்கிறார்கள், எவ்வளவு புகையை உள்வாங்குகிறார்கள் என்பதைப் பொறுத்து இதன் பாதிப்பு மாறுபடும். பாசிவ் ஸ்மோக்கால் அதிகம் பாதிக்கப்படுவது, குழந்தைகள் மற்றும் பெண்களே. சாதாரண மக்களைவிட, பாசிவ் ஸ்மோக்கர்ஸுக்கு இரண்டு மடங்கு அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது. நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் இவர்களுக்கும் ஏற்படும். மேலும், புற்றுநோய், பக்கவாதம் எனப் புகை பிடிப்பவர்களைப் பாதிக்கும் பிற நோய்கள் இவர்களுக்கும்  ஏற்படலாம்.

பெண்களைப் பொறுத்தவரை,  கர்ப்பகாலத்தில், புகையைச் சுவாசித்தால் குழந்தைகள் குறைபாடு களுடன் பிறப்பதற்கோ, கரு கலைவதற்கோ வாய்ப்புகள் அதிகம். குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே நுரையீரல் பலவீனமடைந்துவிடும். இதனால் அந்தக் குழந்தைகள் காலம் முழுவதும் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.

குளிரூட்டப்பட்ட  இடங்களில்,  வெளிக்காற்றுக்கு இடமிருக்காது. அங்கே புகை பிடிக்கும்போது, புகை உள்ளேயே சுழலும். இது பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இப்படிப் பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்பதை நாம் எடுத்துக் கூறலாம். `புகைப்பது உடல் நலத்துக்குக் கேடு’என்னும் விழிப்புஉணர்வை  ஏற்படுத்துவ தோடு, புகைப்பவர்களின் உடன் இருப்பவர் களுக்கும் கேடு என்பதைப் புரியவைக்கவேண்டியது இன்றைய அவசியத் தேவை. அவசரத் தேவையும்கூட!

ஷாக் டேட்டா

உலகில் நிகழும் பத்தில் ஒரு மரணம் புகை பிடிப்பதால் ஏற்படுவதாக “தி லான்செட்” நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

*   இதில் பாதிக்கும் மேற்பட்ட மரணங்கள் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு நாடுகளில் நிகழ்வதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

5500 இளைஞர்கள் தினமும் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாவதாக இந்திய அரசின் சுகாதாரநலத் துறை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

25 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்கள் 15 வயதிலேயே புகை பிடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

Advertisements
%d bloggers like this: