எங்களைப் பார்த்துக்கங்கண்ணே…!’ – எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவிய தினகரன் எம்.எல்.ஏக்கள்

அ.தி.மு.கவில் அணிகள் இணைவதற்காக அமைக்கப்பட்டிருந்த குழு கலைக்கப்படுகிறது’ என அறிவித்துவிட்டார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ‘ தினகரனைச் சந்தித்துவிட்டு வந்த எம்.எல்.ஏக்களில் பலரும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். இதைப் பற்றி அவரிடம் நேரிடையாகவே கூறிவிட்டனர். ஆட்சியைப் பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அச்சமும் இல்லை’ என்கின்றனர் கொங்கு மண்டல வட்டாரத்தில்.

‘ அண்ணா தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணையுமா?’ என்ற கேள்விக்கு இன்னமும் விடை தெரியாமல் தவிக்கின்றனர் தொண்டர்கள். பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தினகரன் என மூன்று துண்டுகளாகப் பிரிந்துள்ளனர். அணிகள் இணைப்பு தொடர்பாக, மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோதே, பன்னீர்செல்வத்தின் கோரிக்கைகளை ஏற்க பழனிசாமி அணியினர் மறுத்துவிட்டனர். சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பது முதல் ஜெயா டி.வி நிர்வாகத்தைக் கைப்பற்றுவது வரையில் சில முக்கிய கோரிக்கைகளை வைத்திலிங்கம் எம்.பி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கொதித்துப் போன கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்கள், ‘ சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டதாக கபட நாடகம் ஆடுகின்றனர்’ என்றார். இதன்பிறகு, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனும் சிறை சென்றார். மீண்டும் அவர் வெளியில் வந்தபோது, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் அவரைக் கண்டுகொள்ளவில்லை. ‘ எடப்பாடி பழனிசாமிக்கு என்னுடைய பலத்தைக் காட்டுகிறேன்’ என ஆதரவு எம்.எல்.ஏக்களை வீடு தேடி வர வைத்தார் தினகரன். 

இதையடுத்து, ‘ஆட்சிக்கு நெருக்கடி’ என்ற ரீதியில் செய்திகள் வெளியாயின. இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாத எடப்பாடி பழனிசாமி, எப்போதும்போல் மௌனம் காத்தார். நேற்று ஈரோட்டில் நடந்த அரசு விழாவில், ‘ நம்பிக்கை துரோகிகளுடன் நட்பு வைத்துக் கொள்ளக்கூடாது. நெருக்கடி வருகிறபோது உதவிக்கரம் நீட்டுகிறவர்கள்தான், உண்மையான நண்பர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். என் நண்பர்களை நான் முழுமையாக நம்புகிறேன். அந்த நம்பிக்கைதான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. என்னாலும் என் நண்பர்கள் உயர்வார்கள்’ எனக் குட்டிக் கதை சொன்னார். இதில், ‘ அவர் குறிப்பிடும் நண்பர்கள் யார்? துரோகிகள் யார்?’ என்ற கேள்வி அரசியல் மட்டத்தில் எழுந்துள்ளது. ” பன்னீர்செல்வத்தால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டபோது, எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தினார் சசிகலா. தினகரனையும் அவர்தான் கட்சிக்குள் கொண்டு வந்தார். ‘ தன்னால் ஒரு பொதுத் தலைவராக உருவாக முடியவில்லை’ என்ற ஆதங்கம் தினகரன் மனதில் எழுந்துள்ளது. ‘ எடப்பாடி பழனிசாமி வசம் அதிகாரத்தை ஒப்படைக்காமல் இருந்திருந்தால், அரசியல் மட்டத்தில் நல்ல பெயர் எடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கலாம். பன்னீர்செல்வத்தை வளர்த்துவிட்டதால், அவர் தலைவராகிவிட்டார். தற்போது எடப்பாடி பழனிசாமியும் தலைவராக வலம் வருகிறார். எடப்பாடியா? பன்னீர்செல்வமா என்றுதான் மக்கள் பார்க்கிறார்கள். இந்த அரசு இருக்கும் வரையில் ஆட்சியில் மட்டுமல்ல, கட்சியிலும் உங்களுக்கென்று தனி இடத்தை உருவாக்கிக் கொள்ளப் போராட வேண்டும்’ எனத் தினகரனிடம் கூறி வருகின்றனர் அவருடைய ஆதரவாளர்கள்” என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர். 

” சிறையிலிருந்து தினகரன் வந்த நாளில் தொடர்ச்சியாக பல எம்.எல்.ஏக்கள் அவரைச் சென்று சந்தித்தனர். அதே எம்.எல்.ஏக்களை எடப்பாடி பழனிசாமியும் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர் பதவி கேட்ட எம்.எல்.ஏக்களுக்கு எல்லாம், ‘ நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்’ என உறுதியாகக் கூறிவிட்டார். அதேநாளில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஒருவரும் முதல்வரைச் சந்தித்துப் பேசினார். ‘ என்னுடைய மாவட்டத்தில் ஓ.பி.எஸ் அமைச்சராக இருந்தார். அவருடைய இடத்தில் நான் இருக்கிறேன். எனக்கு அமைச்சர் பதவி கொடுங்கள்’ எனக் கேட்க, ‘ உனக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் தினகரனை மிரட்டுவது போன்ற தொனி ஏற்பட்டுவிடும். உனக்கு அடுத்து 97 பேர் வரையில் மந்திரி பதவி கேட்பார்கள். ஆட்சியில் என்ன வேலை இருந்தாலும் சொல்லுங்கள். செய்து கொடுக்கிறேன். அமைச்சர் பதவி தருவதற்கு வாய்ப்பில்லை’ என நேரிடையாகக் கூறிவிட்டார்.

அடுத்ததாக, முதல்வரைச் சந்திக்க வந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் பலரும், ‘ எங்களைக் கையில் போட்டுக் கொண்டு ஆட்சியைக் கவிழ்த்துவிடலாம் எனக் கணக்குப் போடுகிறார் தினகரன். அதற்கு நாங்கள் துணை போக மாட்டோம். உங்கள் பக்கம்தான் நிற்போம். எங்களைப் பார்த்துக்கங்கண்ணே’ எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டனர். இதனால், மிகுந்த மகிழ்ச்சியுடன் வலம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ‘ பன்னீர்செல்வத்துடன் ஒன்று சேர்ந்து இரட்டை இலையை மீட்க வேண்டும்’ என்பதில் இரு அணியின் நிர்வாகிகளும் உறுதியாக உள்ளனர். மக்களின் ஆதரவும் பன்னீர்செல்வம் பக்கம் இருப்பதால், குடியரசுத் தலைவர் தேர்தல் முதல் வரக் கூடிய தேர்தல்களையும் ஒன்றாக எதிர்கொள்ளும் மனநிலையில் இருக்கிறார். ஆட்சிக் கவிழ்ப்பு குறித்து, தினகரன் தரப்பினர் தீவிரமாக யோசித்ததால்தான், நண்பன்-துரோகி என்ற குட்டிக் கதையை எடப்பாடி பழனிசாமி சொன்னார்” என்கின்றனர் கொங்கு மண்டல நிர்வாகிகள். ஜெயலலிதா ஆட்சி தொடர்கிறதோ இல்லையோ, குட்டிக் கதைகளும் அமைச்சர்களின் ஆளுக்கொரு பேச்சும் மக்களைக் குழப்பநிலையிலேயே ஆழ்த்தியிருக்கிறது. 

%d bloggers like this: