தினகரனின் காலை வாரிய எம்.எல்.ஏ.,க்கள்: முதல்வர் தெம்பு

சென்னை: அ.தி.மு.க.,வின் துணைப் பொதுச் செயலர் தினகரனை எதிர்ப்பதில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாகி விட்டார்.
டில்லி, திஹார் சிறைக்குச் சென்று திரும்பி இருக்கும் தினகரன், திடீர் தெம்பாகி, அ.தி.மு.க., அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் பலரையும், தன் அடையாறு இல்லத்துக்கு அழைத்து பேசி வந்தார். அப்போது, ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரவழைப்பது திட்டமல்ல; ஆனால், ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்து, சொல்வதை முதல்வர் பழனிச்சாமியை கேட்க வைக்க வேண்டும். இப்படி நெருக்கடி கொடுக்க, நீங்கள் எல்லாம்

ஒத்துழைத்தால், படிப்படியாக உங்கள் அனைவரையும் சுழற்சி முறையில் அமைச்சர் ஆக்குவேன் என்று உறுதி அளித்திருந்தார். சில பரிவர்த்தனைகளும் அப்போது நடந்ததாக, தினகரன் வீட்டுக்குப் போய்த் திரும்பிய சில எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதை அறிந்ததும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் பலரையும் தலைமைச் செயலகம் வரவழைத்து மாவட்ட வாரியாக சந்தித்தார். அப்போது, எம்.எல்.ஏ.,க்கள் பலரின் உள்ளக் குமுறல்களையெல்லாம் கொட்டச் சொல்லிக் கேட்ட முதல்வர் பழனிச்சாமி, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் உள்ள குறைகளை ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்லச் சொன்னார். அதன்படி, குறைகள் எழுதப்பட்டு, முதல்வரிடம் அளிக்கப்பட்டது. அதையெல்லாம் பார்த்த முதல்வர், அதில் செய்யக் கூடிய காரியங்களையெல்லாம், அதிகாரிகளையும், அமைச்சர்களையும் விட்டுச் செய்யச் சொல்லியிருக்கிறார். இதனால், தினகரன் பக்கம் போன அனைத்து எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
5 பேர் மட்டுமே பாக்கி:
இப்படி தினகரன் பக்கம் போன 34 எம்.எல்.ஏ.,க்களில், தங்கத் தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம் ஆகிய ஐந்து பேர் தவிர, மற்ற அனைவரும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தினகரனை எதிர்க்க முடிவெடுத்து விட்டார்.
முதல்கட்டமாக, தினகரன் தரப்பில் இருந்து அரசுத் தரப்புக்கு எந்த வேண்டுகோள்கள் வைக்கப்பட்டாலும், அதை என்னுடைய அனுமதியின்றி அமைச்சர்கள் நிறைவேற்றக் கூடாது என உத்தவிட்டுள்ளார். முக்கிய அதிகாரிகளுக்கும் இப்படிப்பட்ட உத்தரவு போடப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்த அதிரடிகளை, முதல்வர் தொடர்ந்து செய்வாரோ என, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அதிர்ச்சியுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
இதற்கிடையில், மீண்டும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை அதிகரிப்பதில், தினகரன் முனைப்புடன் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

%d bloggers like this: