பணி இழப்பு எனும் பதற்றம் உடல் மனச் சிக்கல்களிலிருந்து மீள்வது எப்படி?

ஐ.டி என்கிற பிரமாண்ட துறையின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதோ என்கிற கவலை பரவலாக எழ ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவில் ஆள் குறைப்பு, இந்தியாவில் பல ஐ.டி நிறுவனங்களில் ஆள்களை வேலையைவிட்டு எடுப்பதற்கான திட்டமிடல் ஆகியவையெல்லாம் சேர்ந்து இந்தத் துறை இளைஞர்கள் மனத்தில் பயத்தைக் கிளப்பியிருக்கிறது. வேலை இழப்பு இந்தத் துறையில் இருப்பவர்களுக்கு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?

உளவியல் ரீதியான பாதிப்புகளை விளக்குகிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி
“இவர்கள் எப்போதும் ஒருவித மன இறுக்கத்துடனேயே பணிபுரிகிறார்கள். எப்போது வேலை பறிபோகுமோ என்கிற அச்சமும் இருக்கும். நிறுவனங்களும் இப்படியான அச்சத்தை உண்டாக்கினால்தான் சிறப்பாக வேலை செய்வார்கள் என்று நினைக்கின்றன. அது, எதிர்மறையில்தான் போய் முடியும். எளிய வேலையைக்கூட பதற்றத்தோடு செய்வதால், வேலையில் பெர்ஃபெக்‌ஷன் குறையும். இதை `நியூராடிக் டிஸ்ஆர்டர்’ (Neurotic disorder) என்கிறார்கள். சரியாகத் தூக்கம் வராது. எப்போதும் சோர்வாகக் காணப்படுவார்கள். கட்டவேண்டிய இஎம்ஐ, குடும்பச்செலவுகள் எல்லாம் பயமுறுத்தும். காரணமே இல்லாமல் உடலில் எங்கேயாவது வலி தோன்றும். அலுவலக டென்ஷனை வீட்டில் காண்பிப்பார்கள். இதனால் குடும்பத்திலும் பிரச்னைகள் ஏற்படும். இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்கச் செலவுகளைக் குறைத்துக்கொள்வதும் எப்போதும் ஓரளவு பணத்தைச் சேமிப்பாக வைத்திருப்பதும் நல்லது.  அதிகமான அளவில் மனம் பாதிக்கப்பட்டிருந்தால் மனநல மருத்துவரிடம் கவுன்சலிங் பெறுவது நல்லது.’’
தீர்வுகள் பற்றிப் பேசுகிறார் மனநல மருத்துவர் சீனிவாச கோபாலன்…
காரணங்கள்…

* பணிச்சுமை, பதற்றம், மனஉளைச்சல் போன்ற பல காரணங்களால்  இவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
* இவர்களுக்கு வாழ்நாள் முழுமைக்குமாக ஒரே வேலை (Lifetime career) என்பது இல்லை. அடிக்கடி வேலையை மாற்றவேண்டி வரும்.
*  அரசு வேலையில் சேர்ந்தால் ஓய்வு, பென்ஷன், வேலை பாதுகாப்பு எல்லாம் இருக்கும். இந்த வேலையில் அதெல்லாம் கிடையாது.
* ஆங்கிலத்தில் `Cultural Shock’ என்று சொல்வார்கள். அந்தக் கலாசாரப் பாதிப்பும் ஏற்படலாம். அதாவது, ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு வேலைக்குப் போகவேண்டி வரும். நம் பண்பாடு, கலாசாரத்தையெல்லாம் அந்தச் சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு வாழ நேரிடும்.
* இலக்கு நிர்ணயம் சார்ந்த வேலை (Target oriented) இது. ஒரு வேலையைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்தே தீரவேண்டிய கட்டாயத்தால் மன உளைச்சல் ஏற்படலாம்.
* தன்னைத் தகவமைத்துக்கொள்ளாமை (Personal Inadequacy) அதாவது, ஐ.டி துறைகளில் மூன்று அல்லது நான்கு மாதத்துக்கு ஒருமுறை ரீஓரியண்டேஷன் என ஒரு பயிற்சி நடத்துவார்கள். அதற்கேற்ப ஒவ்வொரு பணியாளரையும் அப்டேட் செய்வார்கள். அப்படித் தங்களைத் தகவமைத்துக் கொள்ளாதவர்களால் பணியைச் சிறப்பாகச் செய்ய முடியாது. இதனாலும் மனரீதியாகப் பிரச்னைகள் எழலாம்.

* மற்ற வேலைகளைவிட மிகத் துல்லியமாக, நுணுக்கமாக, நீண்ட நேரம் செய்யவேண்டியது ஐ.டி பணி. இந்த எண்ணமேகூட பலருக்கு மனரீதியான பிரச்னைகளை உண்டாக்கும்.
* சரியான தூக்கமின்மையும் மனநலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
பின்பற்ற வேண்டியவை…
* மன அழுத்த நிர்வாக மேலாண்மை (Stress Management Techniques) நிபுணர்களிடம் சென்று பயிற்சி பெறலாம்.
* ரிலாக்சேஷனுக்கு யோகா, தியானம் ஆகியவற்றைச் செய்யலாம். இப்போது வந்திருக் கும் `மைண்ட்ஃபுல்னெஸ் மெடிட்டேஷன்’-ஐ முயற்சி செய்து பார்க்கலாம்.
* தங்களுடைய வாழ்க்கைத் திறன்களை (Life skills) வளர்த்துக்கொள்ள வேண்டும்.
* என்னதான் டார்கெட், குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடிப்பது என்றெல்லாம் இருந்தாலும், அவ்வப்போது ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும்.
* அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மனநல மருத்துவரிடம் கவுன்சலிங் கொடுக்கலாம்.

உடல்நலப் பிரச்னைகள் பற்றிப் பேசுகிறார் பொது மருத்துவர் பாஸ்கர்

மணிக்கட்டு பாதிப்பு

பணியின்போது கம்ப்யூட்டர் மவுஸைப் பயன்படுத்த, தொடர்ந்து கையையும் மணிக்கட்டையும் இயக்குவதால் மணிக்கட்டில் வலி, பலமிழத்தல், முறிவு (Wrist Splint) எல்லாம் ஏற்படும். மணிக்கட்டு கன்றிப்போகும்; வீக்கம் ஏற்படும். சில நேரங்களில் மணிக்கட்டை அசைக்கவே முடியாத நிலைகூட ஏற்படலாம். மருத்துவரின் உதவியைத்தான் நாடவேண்டியிருக்கும்.
பின்பற்ற வேண்டியவை
* கம்ப்யூட்டர் கீபோர்டு போதுமான அளவுக்குத் தாழ்வாக இருக்க வேண்டும். அதாவது டைப் செய்யும்போது மணிக்கட்டு மேல்நோக்கி வளையாமல் இருக்க வேண்டும்.
* மணிக்கட்டில் லேசாக வலி இருப்பதாக உணர்ந்தால், சற்று இடைவெளிவிட்டு வேலை செய்யலாம். அதாவது, ஒரு நிமிடம் வேலை பார்த்தால், ஒரு விநாடி நிறுத்தி ஓய்வு கொடுக்கலாம்.
* நேரம் கிடைக்கும்போது, மணிக்கட்டுக்கான வொர்க்அவுட்களை `ஹேண்ட் கிரிப்’ போன்ற அதற்கான சாதனங்களைக்கொண்டு செய்யலாம். மென்மையான பந்தை அமுக்கிப் பயிற்சி செய்வதும் பலன் தரும்.
ஃபிட்னெஸ் பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்றுச் செய்வது சிறப்பு.
* மவுஸ் பேடைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். மணிக்கட்டுக்கு வலி ஏற்படுத்தாத, பொருத்தமான கீபோர்டு, மவுஸ் ஆகியவற்றைப் பயன்படுத்துவது நல்லது.
* அடிக்கடி வலி வருபவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று, இரவில் தூங்கும்போது `ரிஸ்ட் ஸ்ப்லின்ட்’ (Wrist Splint) அணியலாம்.
* லேசாக வீக்கம் தெரிந்தால், ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். இது நல்ல பலன் தரும்.
* அடிக்கடி கைகளைத் தளர்வாக வைத்து ஓய்வு கொடுக்க வேண்டும்.
* கைகளையோ விரல்களையோ, மணிக் கட்டையோ அசைக்கவே முடியாத நிலை வரும்போது, வீக்கம் ஏற்பட்டால், மணிக்கட்டுச் சருமம் சிவந்திருந்தால் அவசியம் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

முதுகுவலி, முதுகுத்தண்டுவட பாதிப்பு (Slip Disc)

முதுகுவலி என்பது இந்தப் பணியாளர்களுக்கு ஏற்படும் சர்வசாதாரணப் பிரச்னை. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதால், முதுகுத்தண்டுவடத்திலும் பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு முதுகுத்தண்டுவட நரம்பில் வலி தோன்றும். தண்டுவடத்தில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வலியும் பாதிப்பும் ஏற்படலாம். பொதுவாக, தண்டுவடத்தின் கீழ்ப்பகுதியில்தான் உருவாகும். பாதிப்பு ஏற்பட்டால், அதைச் சுற்றியுள்ள நரம்புகளுக்கும் தசைகளுக்கும் கூடுதல் அழுத்தம் கொடுக்கவேண்டி வரும். அதனால் வலி அதிகமாகும்.
அறிகுறிகள்
* தண்டுவட வலியோடு, உடலின் ஒரு பக்கம் வலியும் உணர்ச்சியின்மையும் இருக்கும்.
* முதுகுத்தண்டுவட வலி, கைகளுக்கோ கால்களுக்கோ பரவும்.
* சில அசைவுகளைச் செய்யும்போதோ இரவிலோ வலி இன்னும் அதிகமாகும்.
* நிற்கும்போது அல்லது உட்கார்ந்திருக்கும்போது வலி அதிகரிக்கும்.
* கொஞ்ச தூரம் நடந்தாலே வலி அதிகமாகும்.
* தசைகள் பலவீனமாகும்.
* பாதிக்கப்பட்ட பகுதியில் வலி அல்லது எரிச்சல் இருக்கும்.
இந்தப் பிரச்னை இருப்பதை எக்ஸ்ரே, எம்ஆர்ஐ ஸ்கேன், சி.டி.ஸ்கேன் ஆகிய சோதனைகளின் மூலம் உறுதி செய்யலாம். பிரச்னை தீவிரமானால், மருத்துவச் சிகிச்சைதான் பலனளிக்கும். அது, ஸ்டீராய்டு ஊசியில் இருந்து, அறுவைசிகிச்சை வரை நீளக்கூடும்.
பின்பற்ற வேண்டியவை
* வேலை செய்யும்போது நிமிர்ந்த நிலையில், முதுகுக்குப் போதுமான சாய்மானம் கொடுத்து அமர வேண்டும்.
* உடல் எடை கூடுவதும் இந்தப் பிரச்னை ஏற்பட முக்கியக் காரணம். எனவே, உடல் எடையைச் சீராகப் பராமரிக்க வேண்டும்.
* நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கக் கூடாது; அவ்வப்போது சிறுநடை நடக்க வேண்டியது அவசியம்.
* வயிறு, கால்கள் தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகளை அவசியம் செய்ய வேண்டும்.
கண் தொடர்பான பிரச்னைகள் (Eye Fatigue)
கம்ப்யூட்டரைத் தொடர்ந்து பார்ப்பதால் கண் எரிச்சல், சோர்வுறுதல் (Eye Fatigue) ஆகியவை ஏற்படலாம். கண் மருத்துவத்தில் இதை `கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ அல்லது `டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெயின்’ என்கிறார்கள். `உலக அளவில் வருடத்துக்குச் சுமார் ஒரு கோடி பேர் இந்தப் பிரச்னைக்காகக் கண் மருத்துவரை நாடி வருகிறார்கள்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். இந்தப் பிரச்னை அதிகமானால், கண் தொடர்பான நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
அறிகுறிகள்
* கண்களில் எரிச்சல், புண் ஏற்படும்.
* கண்கள் உலர்ந்தோ, ஈரமாகவோ காணப்படும்.
* பார்வை மங்குதல் அல்லது இரண்டாகத் தெரிதல்.

* ஒளியைப் பார்க்கும்போது கண் கூசுதல்.
  பின்பற்ற வேண்டியவை
* கம்ப்யூட்டர் உங்கள் கண் பார்வையிலிருந்து 20 முதல் 26 இன்ச் தொலைவில் இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் திரை,  உங்கள் கண் பார்வைக்கு மேலாக இருக்காமல், கொஞ்சம் தாழ்வாக இருக்க வேண்டும்.
* கம்ப்யூட்டர் திரை, மேலும் கீழும், இடமும் வலமும் திருப்பக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அட்ஜஸ்ட் செய்துகொண்டு வசதியாக வேலை செய்ய முடியும்.
* கம்ப்யூட்டர் திரை பளிச்சென ஒளி வீசக் கூடாது. அது, கண்களைப் பாதிக்கும். அதை வடிகட்டும் கண்ணாடித் திரையைப் பயன்படுத்தலாம் அல்லது அதிக ஒளியடிக்காமல், குறைத்து வைக்கலாம்.

* 20-20-20 வழிமுறையைக் கடைப்பிடியுங்கள். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை, 20 விநாடிகளுக்குப் பார்க்கவும். இது கண்களுக் கான சிறந்த பயிற்சி.

* தொடர்ச்சியான இடைவெளிகளில் கம்ப்யூட்டரைவிட்டு எழுந்து சற்று தூரம் நடப்பதைப் பழக்கமாகக்கொள்ளலாம்.
* கண்களில் அதிகப் பிரச்னை, தொந்தரவு இருப்பதாக உணர்ந்தால் கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
உடல்பருமன்
அதிக உடலுழைப்பு இல்லாமையாலும் கண்ட நேரத்தில் கண்டபடி கண்டதைச் சாப்பிடுவதாலும் ஏற்படும் முக்கியமான பிரச்னை, உடல்பருமன். இது, மெள்ள மெள்ள தொற்றா நோய்கள் எனப்படும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் தொடங்கி இதய நோய் வரை ஏற்பட வழிவகுக்கும்.
பின்பற்ற வேண்டியவை
* நேரத்துக்குச் சத்தான உணவைச் சாப்பிடுவது; உடலில் கலோரி அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது.
* உடற்பயிற்சி, நடைப்பயிற்சியைத் தொடர்ந்து செய்வது.
* துரித உணவுகள், எண்ணெய் அதிகமுள்ள உணவுகள், ரெடிமேட் உணவுகளைத் தவிர்ப்பது.
* சிறுதானியங்களை உணவுப் பட்டியலில் முக்கியமாகச் சேர்த்துக்கொள்வது.
* ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 6-8 மணி நேரம் தூங்குவது.
* தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது.

%d bloggers like this: