பாலியேட்டிவ் கேர்

பாலியேட்டிவ் கேர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு புற்றுநோயாளிகளின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டிருப்பது மிகப் பெரிய உண்மை. நோய் முற்றிய நிலையில் இருக்கும்போது அது குணப்படுத்தக்கூடிய நிலைகளைத் தாண்டியபிறகு அவர்கள் அனுபவிக்கிற வலி அசாதாரணமாக இருக்கும். அந்த அதீத வலியின் காரணமாக உடலின் ஒட்டுமொத்த உறுப்புகளும் பிரச்னைக்கு உள்ளாகும்.உதாரணத்துக்கு வயிற்றில் புற்றுநோய் இருக்கிறது என்றால் குடலைச் சுற்றி நெறிகட்டி வயிற்றில் நீர் சேர்ந்து கொள்ளும். இடுப்பில்

நெறிகட்டினால் கை கால்கள் வீக்கம், நரம்புகளில் வலி போன்றவை ஏற்படும்.புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் முழுமையாகக் குணப்படுத்திவிட முடியும். ஆனால், அது நெறி கட்டுதலை மீறி அக்கம் பக்கம் பரவிவிட்டால் புற்றுநோய் வீரியமடைந்து செயல்பட வேண்டிய  சுரப்பிகளின் இயல்பான செயல்பாட்டை மாற்றி அதன் விளைவாகவும் வலியை அதிகரிக்கும்.
வயிற்றில் புற்றுநோய் என்றால் பெருங்குடல், கல்லீரல் போன்றவை பாதிக்கப்பட்டு, செரிமானத்தன்மை பாதித்து வலியும் வேதனையும் அதிகரிக்கும். இதேபோல ஒவ்வொரு உறுப்பில் ஏற்படுகிற புற்றுநோயும் பரவி விட்டால், அந்த உறுப்பைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்பட்டு வலி ஏற்படும்.புற்றுநோயைக் குணப்படுத்த வேண்டும் என விரும்புவோரை விட, ‘டாக்டர் வலி தாங்க முடியலை… ஏதாவது மருந்து கொடுத்து உயிரை எடுத்துடுங்க’ எனக் கதறுகிறவர்களையே இன்று அதிகம் பார்க்கிறோம். இந்த மாதிரி நோயாளிகளுக்கு வலி நிவாரணமும் ஆதரவும் கொடுப்பதுதான் பாலியேட்டிவ் கேர் சிகிச்சை. உடல்ரீதியாக ஏற்படுகிற 50 சதவிகித வலிக்கும், மனரீதியாக ஏற்படுகிற மீதி 50 சதவிகித வலிக்கும் நிவாரணம் கொடுப்பதுதான் பாலியேட்டிவ் கேர்.
புற்றுநோயாளிகளைப் பொறுத்தவரை பாலியேட்டிவ் கேர் சிகிச்சை அளிப்பவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயம் அவர்களது வலிநிவாரணம். வலியில்லாத வாழ்க்கை என்பது மனிதர்களின் அடிப்படை உரிமை. அதை பாலியேட்டிவ் கேர் சிகிச்சையால் மட்டும்தான் கொடுக்க முடியும். பாலியேட்டிவ் கேர் சிகிச்சை அளிக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் எந்தெந்தப் புற்றுநோய்க்கு எப்படியெல்லாம் வலி வரும், அதற்கு எந்த மருந்து கொடுத்தால் வலி குறையும் என்று தெரியும்.
புற்றுநோயானது எலும்புகளில் பரவிவிட்டால் சாதாரண வலி மருந்து வேலை செய்யாது. அதாவது, சாதாரண பெயின் கில்லரை புற்றுநோய் அதிகமானவர்களுக்குக் கொடுக்க முடியாது. ‘பாராசிட்டமால் கொடுத்தோம். பெயின் கில்லர் கொடுத்தோம். தூக்க மருந்து கொடுத்தோம். ஆனாலும் பேஷன்ட் வலியால துடிக்கிறாங்க’ எனச் சொல்லிக் கொண்டு நிறைய பேர் வருகிறார்கள். நோயின் தீவிரம் அதிகரிக்கும்போது நரம்பிலும் வலியின் தீவிரம் அதிகமாவதால் சாதாரண வலி நிவாரணிகளுக்கு அது கேட்காது.வலி நிவாரணத்துக்கு பாலியேட்டிவ் கேர் சிகிச்சையில் முக்கியமாக உபயோகிக்கப்படுகிற மருந்து மார்ஃபின். இது கசகசா விதைகளால் தயாரிக்கப்படுவது. இது ஒருகாலத்தில் இந்தியாவில்தான் அதிகம் தயாரிக்கப்பட்டது. மார்ஃபின் உபயோகித்தால் சுவாசப் பிரச்னைகள் வரலாம் என்கிற பயம் பல மருத்துவர்களுக்கே இருக்கிறது. வாய்வழியே கொடுக்கும் மாத்திரைகளால் பெரியளவில் பாதிப்புகள் வராது. மலச்சிக்கல், தசை பலவீனம் போன்றவை வரலாம். மற்றபடி வேறெந்த பக்க விளைவுகளும் வருவதில்லை.
புற்றுநோயால் பாதிக்கப்படுகிற பலருக்கும் சாப்பிடப் பிடிக்காது. மனதளவிலான வலிக்கு கவுன்சலிங் கொடுத்து, நோயாளிகளுக்கு அந்த நோயைப் புரிய வைப்போம். எதனால் வலி ஏற்படுகிறது, அதற்கு என்ன மாதிரியான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் புரிய வைப்போம். பொதுவான வலி நிவாரண மருந்தாக பாலியேட்டிவ் கேரில் மார்ஃபின் கொடுப்பதுண்டு. தவிர எலும்பில் வீக்கம் இருந்தால் அதன் நிலைகளைப் பொறுத்து மார்ஃபினுடன் மற்ற மருந்துகளையும் சேர்த்துக் கொடுக்க வேண்டியிருக்கும்.வலி இரண்டு வகைப்படும். நாசி செப்டிவ் பெயின் (Nociceptive pain) என்றால் புற்றுநோய் தாக்கும் இடத்திலிருந்து  வரும் வலிக்குக் கொடுக்கும் மருந்து இது. புற்றுநோய் வீரியமடைந்து நரம்புகளையும் சேர்த்துப் பாதிக்கிறது என்றால் அது நியூரோபதிக் பெயின் (Neuropathic pain). புற்றுநோய் பரவிவிட்டால் இந்த இரண்டு வலிகளும் சேர்ந்து வரும். எந்த இடத்தில், எந்த நரம்பில் பரவியிருக்கிறது என்பதைப் பார்த்தே மருந்துகள் தரவேண்டும். புற்றுநோயில் தொற்று அதிகரிக்கும் வாய்ப்புகளும் கூடுதலாகவே இருக்கும்.
உதாரணத்துக்கு, கர்ப்பப்பையில் புற்றுநோய் என்றால் அடிவயிறு மற்றும் முதுகுவலி வருவது சகஜமாக இருக்கும். அவர்களுக்கு யூரினரி இன்ஃபெக்‌ஷன் வரும். பாலியேட்டிவ் கேர் நிபுணர்கள் அந்தத் தொற்றைக் கண்டுபிடித்து அதற்கேற்பவும் மருத்துவம் செய்வார்கள்.சிலவகை புற்றுநோய் மூளை வரை பரவியிருக்கும். உதாரணத்துக்கு மார்பகப் புற்றுநோய். நுரையீரல், கல்லீரலையும் சேர்த்துப் பாதிக்கும்.மூளைக்குப் பரவும்போது தலை முதல் கால் வரை உயிர் போகிற வலியும் வலிப்பும் வரலாம். இதை நோயாளிக்கும் உறவினர்களுக்கும் புரியவைத்து அதற்கேற்ப மருத்துவ முறைகளைக் கொடுப்போம். நரம்பு வலி மற்றும் மூட்டு வலிகளைக் குறைக்கவும் மருந்துகள் தருவோம்.பாலியேட்டிவ் கேர் என்பது வெறுமனே வலியைக் குறைக்கிற மருத்துவ முறை என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல… வலிக்குக் காரணமான விஷயத்தைக் கண்டறிந்து, புற்றுநோய்க்கான மருந்துகளோடு சேர்த்து வலியைக் குறைக்கும் மருந்துகளையும் பாதுகாப்பாகக் கொடுப்பதுதான் இதன் நோக்கம்.
வலி குறைந்தால்தான் நோயாளியால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். நோய் பாதித்த துக்கம் ஒருபக்கம் இருக்கும்போது அதை மிஞ்சும் வகையில்சம்பந்தமே இல்லாமல் இப்படி மரண வலி ஏற்படும்போது அவர்கள் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள். இழந்த நம்பிக்கையை மீட்டுத்தருவதுதான் பாலியேட்டிவ் கேர்!

%d bloggers like this: