Advertisements

தினகரன் – திவாகரன் மோதல் வீதிக்கு வந்த குடும்பச் சண்டை

சிகலா குடும்பத்தினருக்கு எதிராக அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் அணி, தீபா அணி, ஜெயகுமார் அணி எனப் பிரிந்து கிடப்பது மட்டுமல்ல… சசிகலா குடும்பத்துக்குள்ளேயே எதிர்ப்பு அணிகள் உருவாகிவிட்டன. சசிகலாவின் தம்பி திவாகரனுக்கும், அக்கா மகன் தினகரனுக்கும் உச்சகட்ட யுத்தம் நடக்கிறது. சசிகலா குடும்பத்தின் தாய் பூமியான மன்னார்குடியில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் நடத்த இருந்த பொதுக்கூட்டத்தை, திவாகரன் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி எதிர்ப்புக்குரலை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

‘கழகம் காக்கவும் இரட்டை இலையை மீட்கவும் சின்னம்மா, டி.டி.வி.தினகரன் தலைமையேற்க வேண்டும்’ என வலியுறுத்தி, கடந்த 11-ம் தேதி மன்னார்குடியில் கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை காவல்துறையினரிடம் தினகரன் ஆதரவாளர்கள் கேட்டிருந்தனர். கூட்டத்துக்கு அனுமதி அளித்திருந்த நிலையில், திடீரென 11-ம் தேதி கூட்டத்தை ரத்துசெய்ய உத்தரவிட்ட போலீஸ், மேடை மற்றும் ஃபிளெக்ஸ்களை அகற்றிவிட்டார்கள். தினகரன் ஆதரவாளர்களுக்கும் திவாகரன் ஆதரவாளர்களுக்கும் எந்த நேரத்திலும் மோதல் ஏற்படலாம் எனத் தகவல் கிடைக்க, பெரும் போலீஸ் படை குவிக்கப்பட்டதால் பதற்றப் பூமியாக மாறிப் போனது மன்னார்குடி.

கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த தினகரன் ஆதரவாளர்களிடம் பேசினோம். ‘‘கடந்த 2-ம் தேதி மன்னார்குடியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தித்தான் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். ‘லோக்கல் வி.ஐ.பி-யைத் திட்டக்கூடாது, மத்திய அரசைத் திட்டக்கூடாது’ என இரண்டு நிபந்தனைகளோடு போலீஸ் அனுமதி அளித்தது. அண்ணன் டி.டி.வி.தினகரன் மற்றும் சிறப்புரையாளர்கள் நாஞ்சில் சம்பத், புகழேந்தி, குண்டு கல்யாணம் ஆகியோரிடம் இந்த நிபந்தனைகளைச் சொன்னோம். அவர்கள் ஓகே சொன்ன பிறகுதான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தோம். மேடை அமைக்கும்போது தொடங்கி எங்களுக்கு மிரட்டல் விடுத்தபடி இருந்தார்கள் திவாகரன் ஆதரவாளர்கள். போனில் கொலை மிரட்டலும் விடுத்தார்கள். மைக் விளம்பரம் செய்யும்போது குறிப்பிட்ட ஏரியாவுக்குப் போக விடாமல் தடுத்தார்கள்.
இந்த நிலையில்தான் மன்னார்குடி நகர     அ.தி.மு.க செயலாளர் மாதவன், ‘எங்கள் கட்சியின் சின்னத்தையும், முதல்வர் படத்தையும் போட்டு, எங்களிடம் ஆலோசிக்காமல் கூட்டத்தை நடத்துகிறார்கள், மீறி நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்’ என மன்னார்குடி காவல்நிலையத்தில் கடிதம் கொடுத்திருக்கிறார். அதன்பிறகுதான் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினரே மேடையை அகற்றிவிட்டார்கள். மீறிக் கூட்டம் நடத்தினால், நாஞ்சில் சம்பத்தைத் தாக்குவதற்கு திட்டமிட்டிருந்தார்கள். நூற்றுக்கு மேற்பட்ட அடியாட்களைக் கற்கள், உருட்டுக்கட்டைகளுடன் மன்னார்குடியில் இறக்கி இருந்தார்கள்’’ என்றனர். 
கூட்டம் ரத்தானதும் ‘‘அ.தி.மு.க விதிகளின்படி அடிப்படை உறுப்பினர்கூட பொதுக்கூட்டத்தை நடத்தலாம். நீதிமன்ற அனுமதி பெற்றுக் கூட்டத்தை நடத்துவோம்’’ என்றனர் சிலர். ‘‘இது குடும்பத்தினருக்குள் நடக்கும் பனிப்போர், நான் ஏதாவது பேசி சின்னம்மாவுக்குப் பிரச்னையாகிவிடக் கூடாது’’ என்றாராம் நாஞ்சில் சம்பத். கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தியும், நாஞ்சில் சம்பத்தும், நீதிமன்ற அனுமதியோடு ஒரு லட்சம் தொண்டர்களோடு மீண்டும் கூட்டத்தை நடத்துவோம் என்று முடிவெடுத்தனர். பின்னர், புகழேந்தி உள்ளிட்டவர்களை வாகனத்தில் ஏறிக் கிளம்பிச் செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தினர். ‘‘என்னை யாரு வந்து என்ன செய்யப் போறான்? எங்க கட்சி ஆட்சி நடக்குது. எனக்கு என்ன பயம்? யாராக இருந்தாலும் எங்க கட்சிக்காரர்கள்தான், விடுங்க நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று ஆவேசமாகச் சொன்னார் அவர். கட்டாயப்படுத்தி வாகனத்தில் ஏற்றி திருவாரூர் மாவட்ட எல்லைவரை சென்று வழியனுப்பி வைத்த பிறகே காவல்துறையினர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

பிறகு திருவாரூர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ஆர்.காமராஜிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். ‘‘எனக்கு எதுவும் தெரியாது. கூட்டம் நடந்தா என்ன…நடக்காவிட்டால் என்ன?’’ என்று விரக்தியோடு சொன்னாராம் அவர். திவாகரன் சென்னையில் இருக்கிறார். திவாகரன் மகன் ஜெயானந்த்தான் இந்தக் கூட்டத்தை ரத்து செய்வதற்காக காய் நகர்த்தினார் என்கிறார்கள் மன்னார்குடியைச் சேர்ந்த சிலர்.
திவாகரனின் ஆதரவாளரும் முன்னாள் மாவட்டச் செயலாளருமான எஸ்.காமராஜிடம் பேசினோம். ‘‘எங்கள் கட்சி கூட்டம்தான், நடத்தட்டும். ஆனால், இந்த நேரத்தில் இது தேவையில்லை. சின்னம்மாவைச் சிறையிலிருந்து மீட்டு வரவேண்டும். இன்னும் நான்கு ஆண்டுகள் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த வேண்டும். இப்போதைய தேவை இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதே தவிர, பொதுக்கூட்டம் நடத்துவது அல்ல’’ என்றார் பொதுவாக.
கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த தினகரன் ஆதரவாளர் வழக்கறிஞர் அகரம் சுரேஷிடம் பேசினோம். ‘‘காவல்துறையினர் யாருடைய தூண்டுதலில் இப்படிச் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. நீதிமன்ற அனுமதி பெற்று விரைவில் மன்னார்குடியில் கூட்டத்தை மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டுவோம்’’ என்றார் தடாலடியாக.
‘அ.தி.மு.க ஆட்சி என்றால் சென்னையும் மன்னையும் ஒன்றுதான்’ என்பார்கள். ஆனால், மன்னையிலேயே அ.தி.மு.க கூட்டம் ரத்து செய்யப்பட்டது, திவாகரனுக்கும், தினகரனுக்குமிடையே உஷ்ணம் கூடியிருக்கிறது என்பதற்கு இன்னொரு ஆதாரம்! 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: