Advertisements

தினகரன் – திவாகரன்… திடீர் சந்திப்பு பின்னணி!

‘வெளியில் சண்டையிடுகிறார்கள், உள்ளே கூடிக்கொள்கிறார்கள். மாட்டிக்கொண்டு முழிப்பது என்னவோ ஆதரவாளர்கள்தான்’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார்.
‘‘யாரைச் சொல்கிறீர்கள்?” என்றோம்.
‘‘சசிகலா குடும்பத்தைத்தான் சொல்கிறேன். மன்னார்குடியில் தினகரனுக்கு ஆதரவாக கடந்த 11-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் திடீரென ரத்தானதும், பேச்சாளர்கள் அவமானத்தோடு திரும்பியதும் தெரிந்த கதைதான். அதன் பின்னணியில் திவாகரன் இருந்தார். திரும்பிப் போகும்போது, கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, ‘மன்னார்குடிக்கு இவர் ராஜான்னா, கர்நாடகாவுக்கு நான் ராஜா. என்னோட பவரை நான் அங்கே காட்டறேன்’ எனத் திவாகரன் பெயரைக் குறிப்பிடாமல் சொல்லிவிட்டுப் போனார். புகழேந்தி மூலம் இந்தப் பிரச்னை சசிகலாவுக்குப் போய்ச் சேர்ந்ததாம். அவர் மிகவும் வருத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சசிகலா கணவர் நடராசன் தலையிட்டுப் பேசினாராம்.’’
‘‘என்ன பேசினாராம்?”

‘‘முட்டிக் கொண்டு நிற்கும் தினகரனிடமும் திவாகரனிடமும் நடராசன் பேசினாராம். ‘உங்களை எல்லாம் இந்த அளவுக்கு வாழ வைத்த சசிகலா, சிறையிலிருந்து இன்னல்படுகிறார். நமக்குள் நடைபெறுகிற சண்டை சசியின் மனநிலையையும், உடல்நிலையையும் மிகவும் பாதிக்கிறது. அவருக்கு நீங்கள்தரும் மரியாதை இதுதானா?’ என்று உருக்கமாக சொன்னாராம்.  இதைத் தொடர்ந்து, கடந்த 12-ம் தேதி இரவு சென்னையில் ரகசிய இடத்தில் திவாகரனையும் தினகரனையும் சந்திக்க வைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர், டாக்டர் வெங்கடேஷ். `இது உறவின்முறை சந்திப்பு. அரசியல் எதுவும் பேசவில்லை’ என்கிறார்கள் சசிகலா குடும்பத்தினர்.’’

‘‘வேறு என்ன பேசினார்களாம்?’’
‘‘தடைபட்டுப்போன மன்னார்குடி கூட்டத்தை விரைவில் இரு தரப்பும் இணைந்து நடத்துவதாக சமாதானப் பேச்சில் முடிவாகி உள்ளது. கடந்த 15-ம் தேதி பெங்களூரு சிறைக்குத் தினகரனும் டாக்டர் வெங்கடேஷும் சேர்ந்து சென்று சசிகலாவைச் சந்தித்தனர். அப்போது, இந்தச் சமாதானப் படலம் பற்றித்தான் முழுக்கவே பேசினார்களாம்.’’
‘‘அதே நாளில் சட்டமன்றக் கூட்டம் முடிந்ததும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூட்டமாகச் சென்று முதல்வர் எடப்பாடியைச் சந்தித்தார்களே… என்ன விஷயமாம்?”
‘‘இந்தச் சந்திப்பின்போது தன்னுடன் யாரையும் வைத்துக்கொள்ளவில்லை முதல்வர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், கண்டிப்பான தொனியில் முதல்வரிடம் பேசியதாகத் தகவல். ‘நீங்க ஆட்சியைக் கவனிங்க. தினகரன் கட்சி வேலையைச் செய்யட்டும். இரண்டு பேரும் இணைந்து பணியாற்றலாம்’ என்றார்களாம். ‘கட்சி வேலைகள் எதுவும் நடக்கறதில்லை. கட்சி இன்னைக்கு நடுரோட்டுல நிக்குது. கட்சி நிர்வாகிகள் யாராவது இறந்தால், துக்கம் விசாரிக்கக்கூட தலைமை யிலிருந்து யாரும் போவதில்லை. துணைப் பொதுச்செயலாளர் தினகரனும் போக முடியலை. சின்னம்மா படத்தையெல்லாம் கட்சி ஆபீஸுலிருந்து எடுத்தார்கள். சின்னம்மா அரசியலுக்கு வரக்கூடாதுன்னு கோஷம் போட்டப்பக்கூட, நாங்க மௌனமாக இருந்தோம். இப்போ இது எல்லை மீறிப்போகுது. கட்சியைக் காப்பாற்றி ஆகணும். இன்னும் கொஞ்ச நாளைக்கு நாங்க ஆட்சியை டிஸ்டர்ப் பண்ணமாட்டோம். சிலர் தினகரனைப் பற்றி தேவையில்லாத ஸ்டேட்மென்ட்களை கொடுக் கிறதை உடனே நிறுத்தணும்’ என்றார்களாம்.’’
‘‘முதல்வர் என்ன சொன்னார்?”
‘‘அவர் அமைதியாக முகத்தை வைத்துக் கொண்டு, ‘நான் சொல்றதை யாரு கேட்கிறார்கள்’ என்றாராம். ஆனால், எம்.எல்.ஏ-க்கள் சமாதானம் ஆகவில்லை. ‘இதையெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்கிற முறையில் சில அமைச்சர்களின் கட்சிப்பதவியை அவர் பிடுங்கினால் நீங்கள் என்ன செய்யமுடியும்? ஆனால், தினகரன் அப்படிச் செய்தாரா? பொறுமையாகத்தானே இருக்கிறார்’ என்று ஒரு எம்.எல்.ஏ ஆவேசமாகக் கேட்டாராம். பிறகு, சில நிமிடங்கள் அந்த அறையில் அமைதி நிலவியதாம். ‘கட்சி நிர்வாகிகள் சிலர் கன்ட்ரோலே இல்லாமல் நடந்து வருகிறார்கள். அவர்களுக்குத் தினகரன் என்கிற கடிவாளம் போட்டால்தான் அடங்குவார்கள்’ என்றார்களாம்.’’
‘‘தினகரன்தானே இவர்களை அனுப்பினார்? அவருக்கு ஏன் இந்த அவசரம்?’’
‘‘தலைமைக்கழகத்துக்குத் தினமும் வந்து கட்சி வேலை பார்க்க விரும்புகிறார் தினகரன். ஆனால் தான் வருவதை எடப்பாடி கோஷ்டியினர் தடுக்க ரெடியாகி வருகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட பின்னர், அப்படி ஒரு மோதலைத் தவிர்க்கவே பேச்சுவார்த்தை நடத்தும்படி எம்.எல்.ஏ-க்களை அனுப்பினாராம். ‘இது எடப்பாடிக்கு வைக்கப்பட்ட செக்’ என்கிறார்கள். இதற்கு அவர் சரியான முடிவு சொல்லவில்லை என்றால், பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொண்டு தன் ஆதரவாளர்களுடன் தலைமைக்கழகத்தில் நுழையப்போகிறாராம் தினகரன்.’’
‘‘கட்சி நிர்வாகம் முழுவதுமாக ஸ்தம்பித்து விட்டதா?’’
‘‘அப்படித்தான் சொல்கிறார்கள. தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் முகாம்களை அறிவிப்பது வழக்கம். அதுபோன்ற நேரங்களில், மறுநாளே ஜெயலலிதா ஒரு அறிக்கை விட்டு, கட்சிக்காரர்களை முடுக்கிவிடுவாராம். அவர்கள் இந்த முகாமில் போய் புதிய வாக்காளர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுப்பார்கள். இது கடந்த காலங்களில் ரெகுலராக நடந்து வந்தது. அண்மையில் அதே போல முகாம் பற்றிய அறிவிப்பு வந்தபோது அ.தி.மு.க தரப்பில் எந்த அறிவிப்பும் இல்லையாம். இதை எடப்பாடியிடம் சுட்டிக் காட்டிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், ‘உதாரணத்துக்கு இது ஒன்று போதாதா?’ என்றார்களாம்.’’
‘‘அப்புறம்?”
‘‘எடப்பாடி நிதானமாக, ‘கட்சியின் தலைமைக்கழக நிர்வாகிகளை அழைத்துப் பேசிவிட்டுப் பதில் சொல்கிறேன்’ என்று சொன்னாராம். ‘நீங்க என்ன சொல்லி அவர்களைச் சமாதானம் செய்வீர்களோ, தெரியாது. சீக்கிரமா முடிவு தெரியலைன்னா, விபரீதத்தைச் சந்திக்க வேண்டிவரும்’ என்று எச்சரித்துவிட்டுக் கிளம்பினார்களாம் எம்.எல்.ஏ-க்கள்.’’ 
‘‘தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பு முடிந்த கொஞ்ச நேரத்தில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினாரே முதல்வர்?’’
‘‘இந்தக் கூட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்று. திடீரெனக் கூட்டப்பட்டது அல்ல!          தம்பிதுரை எழுந்து, ‘அம்மாவுக்குச் சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனையிலிருந்து அரசுக்கு பில் வந்துள்ளது. 6 கோடியே 85 லட்ச ரூபாய் பில். முன்பு தலைவர் இறந்தபோது, முதலில் அரசு தரப்பில் பில்லைக் கட்டினார்கள். பிறகு, கட்சி அந்தப் பணத்தை திருப்பிக்கொடுத்தது. இப்போது என்ன செய்யப்போகிறோம்?’ என்று கேட்டார். அப்போது தினகரன் ஆதரவு மாவட்டச் செயலாளர் ஒருவர் எழுந்து, ‘இதுபற்றி இப்போது நாம் செய்யும் விவாதம் மீடியாவில் நிச்சயமாக வரும். ஏன் காலதாமதம் செய்யவேண்டும்? இப்போதே, 6 கோடி ரூபாய்க்கு செக் போட்டுக் கொடுத்துவிடலாம். மீதித்தொகை பற்றி மருத்துவமனையுடன் பேசி நாளை செட்டில் செய்வோம்’ என்றாராம். அதற்கு பெரும்பாலானவர்கள் ஆதரவுக் குரல் எழுப்ப… உடனே செக் புக் வரவழைக்கப்பட்டு, முதல்கட்டமாக 6 கோடி ரூபாய்க்கு ஒரே செக்கைக் கொடுத்தார்களாம்.’’
‘‘அடடே! தினகரன் அடுத்த என்ன செய்யப்போகிறார்?’’
‘‘அவர் மீது பொய் வழக்குப்போட்டதைக் கண்டித்து அவரது அணியினர் ஊர் ஊராக நடத்திவரும் பொதுக்கூட்டங்களில் இதுவரை தினகரன் கலந்துகொள்ளவில்லை. தேனி அல்லது மதுரை ஏரியாவில் நடக்கும் கூட்டத்தில் அவர் மேடை ஏறுவாராம்.’’
‘‘எடப்பாடியிடம் தனியாக யாராவது பேசினார்களா?’’
‘‘ஆமாம்! வேறு ஒரு சந்தர்ப்பத்தில் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஒருவர், எடப்பாடியிடம் விசாரித்தாராம். ‘சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் ஒதுக்கிவைக்கும்படி பிரதமர் மோடி உங்களிடம் நேரடியாகச் சொன்னாரா? உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்’ என்றாராம். எடப்பாடி பதில் சொல்லமுடியாமல் திணறுவதைக் கவனித்த அந்த எம்.எல்.ஏ, ‘முதல்வராக சசிகலா பதவி ஏற்கப்போனபோது வழக்கு இருக்கிறது. அவரைத் தேர்தெடுக்கவேண்டாம் என்று சொன்னார்கள். அதன்பிறகு சசிகலா குடும்பம் பற்றி டெல்லியில் இருந்து எதுவுமே சொல்லவில்லை என்பது உங்களுக்கே தெரியும். ஏன் பழைய விஷயத்தையே திரும்பத் திரும்பப் பேசுகிறீர்கள்’ என்று கேட்டாராம்.’’ 

‘‘ போயஸ் கார்டன் வீட்டில் கடந்த 11-ம் தேதி நடந்த களேபரங்களில் எல்லோரது கண்ணையும் உறுத்திய கதாபாத்திரம், தீபா பேரவை நிர்வாகி ராஜா. தீபாவின் கணவர் மாதவனையே மிரட்டிய அந்த ராஜா யார்?”
‘‘ஆயில் ராஜா என்றால் தி.நகர் கண்ணம்மாபேட்டையில் எல்லோருக்கும் தெரியும். தீபாவின் தம்பி தீபக் மூலமாக கடந்த 15 ஆண்டுகளாக அவர்கள் குடும்பத்துக்கு அறிமுகம் உள்ளவர்தான் ஆயில் ராஜா. அடிக்கடி வீட்டுக்கும் வருவார். அந்த வீட்டில் யாரும் ராஜாவைப் பெரிதாக மதித்தது  கிடையாது. ஆனால், தீபக் குடும்பத்தின் நட்பு ராஜாவுக்குத் தேவைப்பட்டது. அதனால், இவர்கள் ஒதுக்கினாலும் அவர் விடாமல் அந்த வீட்டைச் சுற்றுவதையே வாடிக்கையாக வைத்திருந்தார். அவர்மீது கலப்பட ஆயில், அடிதடி பிரச்னைகள் உள்பட 6 வழக்குகள் உள்ளதாகத் தகவல். இதுபோன்ற விவகாரங்களால் தீபக் முற்றிலுமாக ராஜாவை ஒதுக்கி வைத்தார்.’’
‘‘அப்புறம் எப்படி அவர் தீபாவிடம் வந்து சேர்ந்தார்?”
‘‘ஜெயலலிதா மரணம் அடைந்தபிறகு நிலைமை மாறியது. அந்த நேரத்தில் தீபாவுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள். அப்போலோ மருத்துவமனை, போயஸ் கார்டன் வீடு, ராஜாஜி ஹால் என எல்லா இடத்திலும் தீபாவுக்குப் பிரச்னைகள் ஏற்பட்டன. அந்த நேரத்தில் தீபக்கூட அவருக்குப் பெரிதாக உதவவில்லை. அதைப் பயன்படுத்தி தீபாவுக்கு விசுவாசமான நபராக மாறினார் ராஜா. தீபாவின் கணவர் மாதவனுக்கும்கூட ராஜாவின் தேவை அப்போது இருந்தது. தீபா-மாதவன் தம்பதிக்கு நம்பிக்கையான ஆட்கள் அப்போது கிடைக்கவில்லை. தீபா வீட்டு முன் கட்சிக்காரர்களின் கூட்டம் கூடியது. ஆனால், அவர்களில் யாரை நம்புவது, யாரை வீட்டுக்குள் சேர்ப்பது, யாரிடம் பொறுப்புக்களை ஒப்படைப்பது என்று தீபாவுக்குப் பெரிய குழப்பம் இருந்தது. மற்றவர்களோடு ஒப்பிடும்போது ராஜா நம்பிக்கைக்குரிய ஆளாகத் தெரிந்தார். அந்த நம்பிக்கையில்தான் தீபா தனியாக பேரவை ஆரம்பித்தபோது, ராஜாவைப் பொதுச் செயலாளராக நியமித்தார். அப்போதே தீபா பேரவையைச் சேர்ந்த மற்ற நிர்வாகிகள் ராஜாவின் நியமனத்தைக் கடுமையாக எதிர்த்தனர். அதனால், சில மணி நேரங்களில் ராஜாவிடம் கொடுத்த பொதுச் செயலாளர் பொறுப்பைப் பறித்தார் தீபா.’’
‘‘அப்படியானால் தீபா பேரவையில் ராஜா இப்போது இல்லையா?’’
‘‘பேரவையில் அவர் எந்தப் பொறுப்பிலும் இல்லை. ஆனால், தீபா பேரவையை முழுமையாக அவர்தான் கட்டுப்படுத்துகிறார்; கண்காணிக்கிறார். இந்த நேரத்தில் மாதவன் வேறு பிரச்னை செய்துவிட்டு தனியாகப் போனதால், தீபாவுக்கு ராஜாவை விட்டால் வேறு வழியில்லை.’’
‘‘மாதவன் பிரச்னை என்ன?’’
‘‘பேரவை நிதி என்று தீபாவுக்குத் தெரியாமல் மாதவன் பல இடங்களில் கணிசமான தொகையை வசூல் செய்ததாகச் சொல்கிறார்கள். அதைத் தீபாவுக்குத் தெரியாமல் அவருடைய வீட்டிலேயே பதுக்கியும் வைத்திருந்தார். தீபா ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மாதிரி அறிக்கை விடுவது, நம்பிக்கையோடு வந்த கட்சிக்காரர்களை ஒருங்கிணைப்பதில் கோட்டை விட்டது போன்றவற்றால் ஏமாற்றம் அடைந்த மாதவன், ஒரு நாள் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு தீபாவை விட்டுப் பிரிந்து சென்றது, தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்தது எல்லாம் தனிக்கதை. ஆனால், கடந்த 11-ம் தேதி போயஸ் கார்டனில் நடந்த களேபரத்தில் மீண்டும் தீபாவும் மாதவனும் சமாதானமாகிவிட்டனர்” என்ற கழுகார் பறந்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: