Advertisements

நாம் அருந்துவது நல்ல பால்தானா?

அண்மை நாட்களாக பால் குறித்து வரும் தகவல்கள் கதிகலங்க வைக்கின்றன. கலப்பட பால் குற்றச்சாட்டு தீவிரமானது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்திருக்கும் விளக்கத்தால் திருப்தி அடையாத தமிழ்நாடு பால்முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் பால்வளத் துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கி இருக்கிறது.

குழந்தைகள் தொடங்கி பெரியவர் வரை அன்றாட நுகர்வில் பால் அத்தியாவசியமாகிவிட்ட சூழலில், இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. பால் கலப்படத்தின் பின்னணித் தகவல்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. உண்மையில் இதனை கலப்பட பால் என்று சொல்வதைவிட ரசாயன செயற்கை பால் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். சரி, பால் ஏன் நம் தேவைகளில் ஒன்றானது? உண்மையிலேயே பால் நமக்கு தேவைதானா? அப்படியானால் ஏன் தேவை? அனைத்தையும் அறிவோம் வாருங்கள்.

ஈக்களே சீந்தாத இன்றைய பால்

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தேநீர் கடையில் மாஸ்டராக பணியாற்றிய அனுபவம் உண்டு. அப்போது கடையில் மிகப் பெரிய தொந்தரவு ஈக்கள். அதிகாலை மூன்று மணிக்கு வேனிலிருந்து பால் ’கேன்’களை இறக்கியவுடனே தொடங்கிவிடும் ஈக்களின் படையெடுப்பு. சிந்திய பாலை ஈக்கள் கூட்டம் கூட்டமாக அப்பிக் கொள்ளும். ரீங்காரம் நாளெல்லாம் ஓயாது. இப்போதும் தேநீர் கடைகளுக்குச் செல்கிறேன். அவ்வளவு ஈக்களைப் பார்க்க முடியவில்லை. வரும் ஒன்றிரண்டு ஈக்களும் சர்க்கரைக்காக வருகின்றன. ஈக்கள்கூட நிரா கரிக்கும் செயற்கை யான இந்த ரசாயன கலப்பட பாலைத்தான் நம்மில் பெரும்பாலானோர் அருந்துகிறோம்.

இன்று உலகின் பால் உற்பத்தி சுமார் 50 கோடி டன்னுக்கும் அதிகம். இதற்காக வளர்க்கப்படும் பசுக்களின் எண்ணிக்கை 22.2 கோடி. ஆனால், இவ்வளவு பசுக்களை கொண்டு சுமார் 50 கோடி டன் பால் உற்பத்தி சாத்தியமில்லை. பால் அதிகம் கிடைக்க வேண்டுமெனில் பசுக்கள் அதிகமான எண்ணிக்கையில் கன்றுகளை ஈன வேண்டும். இது நடைமுறைச் சாத்தியமில்லை என்பதால் செயற்கைக் கருவூட்டல் வந்தது. மிகையான பால் தேவைக்காக பசுவின் கருவிலேயே கை வைத்தார்கள். பசுமைப் புரட்சி மூலம் எப்படி பயிரில் நஞ்சை விதைத்தார்களோ அப்படி வெண்மை புரட்சி மூலம் பாலையும் பாழாக்கினார்கள்.

செயற்கை கருவூட்டலால் காளைகளுக்கான அவசியம் குறைந்தது. அவை காயடிக்கப்பட்டு, படிப்படியாக அழிக்கப்பட்டன. சிந்து, ரெட்டேன், ஜெர்ஸி, எச்.எஃப், ப்ரவுன் ஸ்விஸ் உள்ளிட்ட கலப்பின மாடுகள் பெருகின. மேய்ச்சல் நிலங் கள் அழிக்கப்பட்டன. மாட்டுத் தீவனங்கள் வந்தன. இரண்டு லிட்டர் கறந்த மாட்டிலிருந்து இருபது லிட்டர் கறந்தார்கள். ஐந்து முதல் எட்டு நிமிடங்களில் இரண்டு லிட்டர் பால் கறப்பதுதான் ஒரு மாட்டின் உயிரியல் கடிகாரத்தை குலைக்காமல் இருப்பதாகும். ஆனால், அதே கால அவகாசத்தில் எந்திரம் வைத்து இருபது லிட்டர் பாலை உறிஞ்சினார்கள். அதன் சுரப்பு வேகத்தில் பால் சுரப்புக்கான ‘லேக்டேட்டிங் ஹார்மோன்’களும் பாலோடு கலந்து வெளியேறின. வெண்மை நிறத்தில் இருக்கும் மாட்டின் ரத்தம் அது.

பாலை பருகிய காலம் போய் மாட்டின் ரத்தத்தை பருகினார்கள். நோய்கள் பெருகின. பெண் குழந்தைகள் காலம் தப்பி பருவம் அடைந்தார்கள். பெண்களுக்கு நடுத்தர வயதிலேயே மாதவிலக்கு நின்றுபோனது. தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த சில நாட்களிலேயே பால் சுரப்பு நின்றது. ஆண் மலட்டுத் தன்மை அதிகமானது. மருத்துவ உலகம் இதை இன்னும் தீவிர ஆராய்ந்ததில் பல உண்மைகள் தெரியவந்தன.

ஏ-1 பால், ஏ-2 பால் தெரியுமா?

பாலில் கால்சியம், ‘கேசின்’ புரதம், வைட்டமின் ‘ஏ’ ஆகியவை உள்ளன. ’கேசின்’ புரதத்தில் ஏ-1, ஏ-2 என்று இரண்டு வகை உள்ளன. அயல்நாட்டு கலப்பின மாடுகளில் ’ஏ-1 கேசினும்’, நம் நாட்டு மாடுகளில் ’ஏ-2 கேசினும்’ இருக்கின்றன. ’ஏ-1 கேசின்’ பாலை உட்கொள்ளும்போது அது செரிமானத் தின்போது BCM7 (Beta-Caso-Morpine-7) ஆக மாற்றமடைகிறது. இது நீரிழிவு, நரம்புத் தளர்ச்சி, ஆட்டிஸம் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். மாறாக நாட்டு மாடுகளிலிருந்து கிடைக்கும் ’ஏ-2 கேசின்’ பால் செரிமானத் தின்போது ரசாயன மாற்றம் அடையாமல் உடலுக்கு நன்மை செய்கிறது. மேற்கண்ட உண்மைகள் பல்வேறு அறிவியல் ஆய்வுகள் மூலம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளன.

சமீப காலமாக – குறிப்பாக, ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு பிறகு, ஏ-2 நாட்டு மாட்டுப் பால் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, திருச்செங்கோடு ஆகிய ஊர்களில் நாட்டு மாடுகளின் மூலம் ஏ-2 பால் உற்பத்தி செய்யப்பட்டு லிட்டர் ரூ.80 – 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் ஏ-1 பால் உற்பத்தியுடன் ஒப்பிடும் போது ஏ-2 பாலின் உற்பத்தி அரை சதவீதத்துக்கும் குறைவே.

இது பாதி கலப்பட பால்

பாதி அளவு இயற்கை பாலுடன் இன்ன பிற பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுவது கலப்பட பால். கொள்முதல் செய்யப்படும் பாலிலிருந்து பிற பால் பொருட்களை உற்பத்தி செய்ய கொழுப்பை நீக்குகிறார்கள். மீண்டும் பாலின் அடர்த்தி மற்றும் புரதத்தை அதிகரிக்க விலங்குகளின் கொழுப்பு அல்லது கொழுப்பு பவுடர் சேர்க்கிறார்கள். சில சமயம் பாலின் அடர்த்தியை அதிகரிக்க மைதா மாவு, ஜவ்வரிசி மாவு, ஸ்டார்ச், மரவள்ளிக் கிழங்கு மாவு சேர்க்கிறார்கள். இவ்வாறு சேர்க்கப்படும்போது பால் கெடாமல் இருக்க பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு, அமோனியா, யூரியா, சோடியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் ட்ரை ஆக்ஸைடு இவற்றில் ஒன்றை சேர்க்கிறார்கள்.

இது ரசாயன சிந்தட்டிக் பால்!

மூன்று மாதங்கள் வரை கெட்டுப்போகாத சிந்தட்டிக் பால் உற்பத்தியும் இங்கே நடக்கிறது. இதை உற்பத்தி செய்ய மாடு தேவையில்லை. ரசாயனப் பொருட்கள் போதும். காஸ்டிக் சோடா, யூரியா, டிடர்ஜெண்ட் தூள், ஷாம்பூ ஆகியவற்றை கலந்து வாஷிங்மெஷின் போன்ற எந்திரத்தில் சுழல விடுகிறார்கள். இதனுடன் கொழுப்புச் சத்துக்காக தாவர எண்ணெய்யும், அடர்த்திக்காக மரவள்ளிக் கிழங்கு மாவு, இனிப்புக்காக சர்க்கரை அல்லது சாக்ரீம் சேர்த்து சுமார் ஒரு மணி நேரத்தில் செயற்கை பாலை தயாரித்துவிடுகிறார்கள்.

இதில் கலக்கப்படும் காஸ்டிக் சோடாவானது பாலை கெடாமல் பாதுகாக்கிறது. டிடர்ஜெண்ட் தூள் தாவர எண்ணெய்யை தண்ணீரில் கரையச் செய்கிறது. யூரியா கொழுப்பு அல்லாத பிற சத்துக்களை கூடுதலாக காட்ட உதவுகிறது. டெல்லியில் மட்டும் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் சிந்தட்டிக் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதுகுறித்து ஆய்வுகள் இதுவரை நடக்கவில்லை. அதற்கான தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் புள்ளிவிபரத்தின்படி ஒடிசா, பிஹார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சந்தைக்கு வரும் பாலில் 100 சதவீதமும் செயற்கை பால்தான். குஜராத்தில் 89 %, பஞ்சாப்பில் 81 %, ராஜஸ்தான் 76 %, டெல்லி 70 %, மகாராஷ்டிரம் 65 % செயற்கைப் பால் சந்தைப் புழக்கத்தில் இருக்கிறது.

பால் நமக்குத் தேவையா?

பால் மற்றும் பால் பொருட்களே வேண்டாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த குழந்தை கள் நல மருத்துவர் ஜெகதீசன் தனது மருந்துச் சீட்டிலேயே ‘ஆரோக்கியமான வாழ்வுக்கு விலங் குகளின் பாலை தவிருங்கள்’ என்று அச்சிட்டி ருக்கிறார். அவரிடம் பேசினோம். “மரபணுவியல் படித்த மருத்துவருமான நான் மனிதனின் மரபணுவியலில் பால் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக் கிறேன். மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங் களுக்கும் மூளை வளர்ச்சியடையும் வரை மட்டுமே பால் தேவை. அதன்படி மனிதனுக்கு மூன்று வயதுவரை மட்டுமே பால் தேவை.

பாலில் இருக்கும் ‘லேக்டோஸ்’ சர்க்கரை சத்து, சிறுகுடலுக்குச் செல்லும்போது ‘க்ளுகோஸ், கேலக்டோஸ்’ என்று இரண்டாக பிரிகிறது. அவற்றில் ‘கேலக்டோஸ்’ மூளை, கண் மற்றும் நரம்பு மண்டலங்களின் வளர்ச்சிக்கு முக்கிய மானது. இதன் தேவை மூன்று வயதுவரை மட்டுமே. ஏனெனில் ‘லேக்டோஸை’ இரண்டாக பிரிக்கும் ‘கேலக்டேஸ்’ நொதி மூன்று வயதுக்கு மேல் சுரக்காது. இதனால், சிறு குடலுக்கு வரும் ‘கேலக்டோஸ்’ செரிமானம் ஆகாமல் பெருங் குடலுக்குச் சென்று வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும். தவிர, மூன்று வயதுக்கு மேல் போதுமான மூளை வளர்ச்சி ஏற்பட்ட பின்பு கிடைக்கும் ‘கேலக்டோஸின்’ உபரி கண் விழிப்பாவையிலும் கண்களின் ரத்தக் குழாயிலும் படியும். இதனால், ரத்தக் குழாய் அடைப்பு, கண்புரை ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

‘பாலில் அபரிமிதமான கால்சியம் இருக் கிறது. பால் குடிக்கவில்லை எனில் கால்சியம் சத்து எங்கிருந்து பெறுவது?’ என்பது பெரும்பாலோனோர் எழுப்பும் கேள்வி. கால்சியத்தில் முதல் தரம், இரண்டாம் தரம் இருக்கிறது. பாலில் இருப்பது இரண்டாம் தர கால்சியம்தான். ஆனால், கீரைகளில் பாலில் இருப்பதை விட அதிகளவு முதல் தர கால்சியம் இருக்கிறது. எலும்பு வளர்ச்சிக்காக பால் குடியுங்கள் என்கிறார்கள். இது நேர்எதிரான மற்றும் பொய்யான தகவல். மனித ரத்தத்தில் இயல்பாகவே அமினோ அமிலம் 7.4 பி.ஹெச் அளவு இருக்கிறது. பால் அருந்தும்போது இதன் அளவு உயரும். அவ்வாறு உயர்வதை குறைப் பதற்காக தானாகவே எலும்பு கரைக்கப்படுகிறது. இதனால், எலும்பு தேய்மானம் ஏற்படும் என்பது தான் உண்மை. பால் அருந்தும்போது வயிற்றில் சில மில்லி ரத்தக் கசிவு ஏற்படும் என்பதால் கர்ப்ப காலத்தில் ரத்த சோகையால் பாதிக்கப்படும் பெண்கள் பால் அருந்தினால் ரத்த சோகை நோயின் தீவிரம் அதிகரிக்கும்.” என்கிறார்.

மருத்துவர் ஜெகதீசனின் கருத்து குறித்து, ஏராளமான மருத்துவ நூல்களை எழுதியவரும் பிரபல மருத்துவருமான கு.கணேசனிடம் கேட் டோம். “ஆம், உண்மைதான், மனிதர்களுக்கு பால் தேவையற்ற ஒன்றுதான். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat) அதிகம். ஒரு கப் பாலில் 6 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இது இதய நோயாளிகளுக்கு நல்லதில்லை. மேலும், பாலில் கொழுப்பானது கொழுப்பு அமிலங்களாகவும் உள்ள தால், மாரடைப்புக்கு வாய்ப்புள்ளது. மாடுகளுக்கு ஹார்மோன் ஊசி போடுவதால், அந்தப் பாலைக் குடிப்பவர்கள் புராஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், சூலகப் புற்றுநோய்களால் பாதிக்கப் படுவது அதிகரித்து வருகிறது.

பாலில் புரதம் ஒன்றுதான் முக்கியச் சத்துப் பொருள். சவலைக் குழந்தைகள், ஒல்லியாக உள்ள வர்கள், சைவம் சாப்பிடுபவர்கள், நோய்க் காலத்தில் புரத உணவைத் எடுத்துக்கொள்ள முடியாதவர் கள் வேண்டுமானால் பால் அருந்தலாம். அதுகூட அன்றைக்கு வந்த பாலை குடித்தால்தான் பாலில் உள்ள புரதம் உதவும். குளிர்ப்பதனப்பெட்டியில் நாள்கணக்கில் வைத்துக் குடித்தால் புரத அளவு குறைந்துவிடும்.” என்கிறார் கணேசன்.

தாய்ப்பால் மட்டுமே போதும்

‘பால் அரசியல்’ நூலின் ஆசிரியரும் சுற்றுச் சூழலியாளருமான நக்கீரன், “இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலகட்டத்திலிருந்து ’பால் குடித்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்’ என்கிற மாயையை பால் வணிக நிறுவனங்கள் படிப்படி யாக உருவாக்கிவிட்டன. இன்று, பிறந்த குழந்தை கள் முதல் முதியவர்கள் வரை பால் நுகர்வை திணித்தால்தான் அந்த வணிகம் உயரும்.

உலகில் எந்த ஓர் உயிரினமும் பிற உயிரினத்தின் பாலை குடிப்பதில்லை. மனிதனும் அப்படிதான் இருந்தான். தாய்ப் பால் என்பது ஓர் உயிர் உணவு. அதில் உயிர் செல்கள், சரியான விகிதத்தில் கார்போ ஹைட்ரேட், புரதம், கொழுப்பு, செரிமானத்துக்குரிய நொதிகள், ஹார்மோன்கள், தாதுக்கள், வைட்டமின்கள், தாயின் வழி பெறப்படும் நோய் எதிர்ப்புக்கான எதிர்பொருள் உட்பட குறைந்தது 400 தனித்துவமிக்க சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

பெண்களுக்கான வேலை வாய்ப்பு பெருகி யதும் தாய்ப் பால் குடித்தால் பெண்களின் அழகு குலையும் என்கிற பொய்ப் பிரச்சாரம் உருப்பெற்றது – இந்த காரணங்களால் ஒரு காலகட்டத்துக்கு பின்பு தாய்ப் பால் கொடுக்கும் வழக்கம் குறைந்தது. அப்போது பால் மாவு வணிகம் தலை தூக்கியது. இதனால், மாட்டுப் பாலுக்கான தேவை அதிகரித்தது. தொழில்முறை பால் பண்ணைகள் உருவாகின. உபரி பால் உற்பத்தி அதிகரித்தது. இதைத் தொடர்ந்து பாலாடைக் கட்டி, ஐஸ்கீரிம், சாக்லேட் என்று மிகப் பெரிய மற்றொரு வணிக உலகம் உருவானது. இந்த பேரளவிலான உற்பத்தியால் பால் என்பது இன்று இயற்கைப் பொருளாக இல்லை; அது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் செயற்கைப் பொருளாக மாற்றப் பட்டுவிட்டது. அதனைத்தான் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அருந்துகிறோம்.’’ என்றார்.

பால்… சில கேள்விகளும் பதில்களும்

அடர்த்தியாக இருப்பதுதான் நல்ல பாலா?

அடர்த்தியாக இருந்தால் அது கலப்பட பால். தண்ணீராக இருந்தால்தான் நல்ல பால். ஏனெனில் பாலில் 87 % தண்ணீர்தான் இருக்கிறது. மீதம் 9 % புரதம், லேக்டோஸ், தாதுக்கள், வைட்டமின்கள், 4 % கொழுப்பு உள்ளன.

சில நிறுவனங்கள் மட்டும் பாலை எவ்வாறு கெடாமல் பாக்கெட்டில் அடைத்து விற்கின்றன?

மாட்டிலிருந்து கறந்த பால் எட்டு மணி நேரத்துக்கு கெடாது. சில நிறுவனங்கள் கறந்த பால் கெடும் முன்பே உயர் கொதிகலனில் பாலை காய்ச்சி குளிரூட்டி (Ultra-High-Temperature Processing) பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து விற்கின்றன.

பாலுக்கு மாற்றாக எதை உண்ணலாம்?

பாலில் கால்சியம், பொட்டாசியம், புரதம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் A, B, B12 ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை சாமை, திணை, வரகு, கேழ்வரகு ஆகிய சிறு தானியங்கள், கொண்டைக் கடலை, ராஜ்மா, உளுந்து, இறைச்சி, மீன், முட்டை, கருவேப்பிலை, புதினா, மல்லி, கீரை ஆகியவற்றிலும் உள்ளன.

பாலில் கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது?

ஒரு வழுவழுப்பான சாய்வான வீட்டு ஓடு மீது ஒரு துளி பாலை விடுங்கள். பால் ஓடிய பின்பு அந்த தடத்தில் வெண்ணிற கோடு இருந்தால் அது தண்ணீர் கலக்காத பால். வெண்ணிற கோடு இல்லை எனில் அது தண்ணீர் கலந்த பால். சிறிதளவு பாலில் சில துளிகள் அயோடின் சேர்க்கும்போது பால் நீல நிறமாக மாறினால் அது மாவுப் பொருள் சேர்க்கப்பட்ட பால். ஒரு தேக்கரண்டி பாலை சோதனை குழாயில் விட்டு, அதில் அரை தேக்கரண்டி சோயா பீன்ஸ் தூளை சேர்த்து கலக்குங்கள். ஐந்து நிமிடம் கழித்து சில துளிகளை சிவப்பு லிட்மஸ் தாளில் விடும்போது, தாள் நீல நிறமானால் அது யூரியா கலந்த பால்.

Advertisements
%d bloggers like this: