Advertisements

கன்னி – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )

கன்னி –உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

மயோசித புத்தியுடன் செயலாற்றுபவர்களே! உங்களுக்கு 27.7.17 முதல் 13.2.19 வரை ராகு லாப வீட்டிலும், கேது 5-ம் வீட்டிலும் அமர்ந்து பலன் தரப் போகிறார்கள்.

ராகுவின் பலன்கள்: ராகு உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டுக்கு வருவதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் தம்பதிக்கிடையே சந்தோஷம் குடிக்கொள்ளும். வீண் செலவுகளைக் குறைப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்வியில் பிள்ளைகளின் நிலை உங்களைத் தலைநிமிரச் செய்யும். உங்களில் சிலருக்குப் புது வேலை கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஷேர் மூலமாகப் பணம் வரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 


  
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் ராசியாதிபதியும் ஜீவனாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு செல்வதால், இந்தக் காலகட்டத்தில் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

5.4.18 முதல் 10.12.18 வரை உங்களின் ஜீவனாதிபதியும் லாபாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் ராகு செல்வதால், நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணத்தை நடத்துவீர்கள். பழைய கடன் பிரச்னை ஒன்று தீரும்.

11.12.18 முதல் 13.2.19 வரை, உங்களின் சுக – சப்தமாதிபதியான குருவின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம், கடக ராசியில் ராகு பயணிப்பதால், சிக்கனம் அவசியம். தாயாரின் உடல்நிலை பாதிப்படையலாம். பணவரவுக்குக் குறைவிருக்காது. கன்னிப்பெண்களுக்கு, மனதுக்கு இனிய கணவன் வாய்ப்பான். மாணவர்களின் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். கலைத்துறையினரே! உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். மூத்தோர் நட்பால் சாதிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்துக்கே மாற்றம் கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்: கேது பகவான் தற்போது, உங்கள் ராசிக்குப் பூர்வபுண்ணிய வீடான 5-ம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். முடிவுகள் எடுப்பதில் குழப்பம், எடுத்த காரியங்களில் தடை தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை பெரிதாகும். புதியவர்களை நம்ப வேண்டாம். குடும்பத்தினருடன் செலவிடக்கூடிய நேரம் குறையும். பழைய கடன் பிரச்னையை நினைத்துப் புலம்புவீர்கள்.

வாகனம் பழுதாகி சரியாகும். முகஸ்துதி செய்பவர்களை நம்ப வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். மகளின் திருமணத்துக்காக வெளியே கடன் வாங்கவேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்களின் திரிதிய, அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், இந்தக் காலகட்டத்தில் சகோதரர்களால் நிம்மதி கெடும். சொத்து வாங்குவது விற்பதில் வில்லங்கம் உண்டாகலாம். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும்; சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். 

உங்களின் லாபாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். புது பதவிகள், பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

7.8.18 முதல் 13.2.19 வரை உங்களின் விரயாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால், செலவுகள் துரத்தும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்யுங்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். வேலைச் சுமை அதிகரிக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.

மொத்தத்தில் இந்த ராகு – கேது பெயர்ச்சி,  உங்கள் செயல் வேகத்தை அதிகப்படுத்துவதுடன் பணம், பதவியைப் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: ஏகாதசி திதி நாளில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்- ஸ்ரீவடபத்ரசயனரை வணங்கி வழிபடுங்கள்; வாழ்க்கை வரமாகும்.


Advertisements
%d bloggers like this: