தனுசு – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )

தனுசு –மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

யர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்களே! 27.7.17 முதல் 13.2.19 வரை உங்கள் ராசிக்கு 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் அமர்ந்து பலன் தரப் போகிறார்கள்.

ராகுவின் பலன்கள்: ராகு 8-ல் மறைவதால், மன அமைதி உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடி முடியும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிதுர்வழி சொத்துகளைப் பெறுவதில் இருந்த தடைகள் விலகும். ஆனால், ராகு 8-ல் இருப்பதால், எதையும் திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சப்தமாதிபதியும் ஜீவனாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு பகவான் செல்வதால், மறைந்துகிடக்கும் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்.  5.4.18 முதல் 10.12.18 வரை ராகு பகவான் உங்கள் தனாதிபதியும் திரிதியாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தைரியமாக முடிவெடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும். புது வாகனம் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.  உங்கள் ராசியாதிபதியும் சுகாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 வரை ராகு பகவான் செல்வதால், மனதில் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாணவ மாணவியர் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விரும்பிய பாடப்பிரிவில் சேர, சிலரின் சிபாரிசு தேவைப்படும்.
வியாபாரத்தில் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு முதலீடு செய்யாதீர்கள். வாடிக்கையாளர்களிடம் பக்குவமாகப் பேசுவது அவசியம். வேலையாட்களை விட்டுப்பிடிப்பது நல்லது. பங்குதாரர்கள் அனுசரித்து நடந்துகொள்வார்கள்.  உத்தியோகத்தில் தொல்லை கொடுத்த மேலதிகாரியே முக்கியப் பொறுப்புகளைத் தருவார். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள்.கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளைத் தருவதில் கவனம் செலுத்தவும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடிவரும். மூத்த கலைஞர்களால் உதவி கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 2-ல் கேது அமர்வதால், சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். அத்தியாவசியமான செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வழக்குகளில் எச்சரிக்கையாக இருக்கவும். வழக்கறிஞர்களை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். தொலைந்துபோன ஆவணம் ஒன்று கிடைக்கும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதி மற்றும் விரயாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், மதிப்பு மரியாதை கூடும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். அரசால் ஆதாயம் கிடைக்கும். திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். உங்கள் அஷ்டமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால், மற்றவர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். பணப் பற்றாக்குறை நீங்கும்.  வேலை கிடைக்கும்.உங்களின் பாக்கியாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், வராது என்று நினைத்திருந்த பணம் திரும்பக் கிடைக்கும். தந்தையுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.  வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வேலை காரணமாகச் சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த ராகு – கேது பெயர்ச்சி, புதிய படிப்பினை களைத் தருவதுடன், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற மனத் தெளிவையும் தருவதாக இருக்கும்.

பரிகாரம்: திருப்பூருக்கு அருகிலுள்ள அவினாசியில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅவினாசியப்பரைப் பிரதோஷ நாளில் சென்று தரிசித்து வழிபட்டு வரவும்; பிரச்னைகள் யாவும் நீங்கும்.

<span>%d</span> bloggers like this: