மகரம் – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )

மகரம்-உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

தர்மங்களை எதிர்த்து நிற்பவர்களே! உங்களுக்கு 27.7.17 முதல் 13.2.19 வரை, ராகு ஏழிலும் கேது ராசியிலும் அமர்ந்து பலன் தரப் போகிறார்கள்.

ராகுவின் பலன்கள்: ராகு பகவான் ராசிக்கு ஏழாம் வீட்டில்வந்து அமர்வதால், உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உற்சாகம் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பி-க்களின் நட்பால் சில விஷயங்களைச் சாதிப்பீர்கள். எனினும், களஸ்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் ராகு அமர்வதால் கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போகவும். மனைவியின் உடல்நலனில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்துகளைப் பராமரிப்பீர்கள். வயதில்

குறைந்தவர்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். மறதியால் பொருள் இழப்பு நேரிடும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சஷ்டம பாக்யாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு பகவான் செல்வதால், இந்தக் காலக்கட்டங்களில் தந்தையாரின் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு, மனை வாங்குவீர்கள். திடீர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். செல்வாக்குக் கூடும்.  5.4.18 முதல் 10.12.18 வரை ராகு பகவான் உங்களின் ராசிநாதனும், தனாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வழக்கு சாதகமாகும். அரசால் ஆதாயம் உண்டு. நிர்வாகத் திறமைக் கூடும். உங்களின் தைரியஸ்தானாதிபதியும், விரயாதிபதியு மான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 முடிய ராகு பயணிப்பதால் புது முயற்சிகள் பலிதமாகும். இளைய சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்குத் திருமணப் பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்படும். கலைத் துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சின்னச்சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். இயன்றவரையிலும் கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். கடையை மாற்றுவதில் அவசரம் வேண்டாம். உத்தியோகத்தில் உங்களின் கருத்துகளை மேலதிகாரியிடம் பதிவு செய்யவும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுமுன் படித்துப் பாருங்கள்.

கேதுவின் பலன்கள்: கேது பகவான் உங்கள் ராசியிலேயே வந்து அமர்வதால், இனிய பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். எனினும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வெளியூர் பயணங்களில் பாதுகாப்பு முக்கியம். ஆவணங்களைப் பத்திரப் படுத்துங்கள். இரவுப் பயணங்களைத் தவிர்க்கவும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:  27.7.17 முதல் 29.11.17 வரை உங்களின் சுக லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம், உங்கள் ராசியிலேயே கேது பகவான் செல்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள், மூத்த சகோதரர் வகையில் அலைச்சல்கள் வந்து போகும். வீடு மனை வாங்கும்போது கவனம் தேவை. உங்களின் சப்தமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால்  மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புது நகை வாங்குவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு உண்டு. பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும். இக்காலக் கட்டத்தில் திருவோணம் நட்சத்திரக்காரர்கள் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. 7.8.18 முதல் 13.2.19 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம், மகர ராசியில் கேது செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் தாமதமாகும். குடும்பத்தில் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். ஆரோக்கியக் குறைவு ஏற்படும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாகும். வேலையாட்களின் பொறுப்பின்மையை நினைத்து வருந்துவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உரிமையை தக்கவைத்துக்கொள்ள நீதிமன்றம் செல்ல வேண்டிவரும்.

மொத்தத்தில் இந்த ராகு – கேது பெயர்ச்சி, ஆன்மிகப் பலத்தால் உங்களுக்கு நிம்மதியை அளிப்பதாக அமையும்.

பரிகாரம்: சூரியனார்கோயிலுக்கு அருகிலுள்ள திருலோக்கி தலத்தில் அருளும் ஸ்ரீஷிராதிசயன பெருமாளைச் சனிக்கிழமைகளில் வணங்கி வழிபட்டு வாருங்கள்; வாழ்க்கை வளமாகும்.

<span>%d</span> bloggers like this: