அதிமுகவால்தான் சசிகலா குடும்பத்தினரின் நிலை உயர்ந்தது… அரக்கோணம் எம்பி ஹரி பொளேர்

சென்னை: அதிமுகவால்தான் சசிகலா குடும்பத்தினர் வளர்ந்தனரே தவிர அவர்களால் கட்சி வளரவில்லை என்று அரக்கோணம் எம்பி ஹரி சாடியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். அப்போது தம்பிதுரையிடம் செய்தியாளர்கள், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று கேட்டனர்.

அதற்கு தம்பிதுரையோ, கட்சியின் பொதுச் செயலாளர்தான் அதை முடிவு செய்வார் என்றார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் ஆதரவு பாஜக வேட்பாளருக்கு முதல்வர் என்றார் எடப்பாடி பழனிச்சாமி .

தம்பிதுரை மீண்டும் கருத்து

இதைத் தொடர்ந்து கட்சித் தலைமை தான் முடிவெடுக்கும் என்று சொன்னீர்களே, இந்த முடிவை சசிகலாதான் எடுத்தாரா என்று தம்பிதுரையிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்கு சசிகலாவிடம் நடத்திய ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவை பழனிச்சாமி எடுத்தார் என்றார்.

எடப்பாடி அணி மறுப்பு

ஆனால் தங்கள் கட்சியின் தலைமை நிலைய செயலாளரான எடப்பாடியின் ஆலோசனையின்பேரில்தான் அனைத்து எம்எல்ஏ-க்களும், எம்.பி.க்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தோம் என்று உண்மையை உடைத்தனர் எடப்பாடி கோஷ்டி. இது தம்பிதுரையின் கருத்துக்கு முரண்பட்ட கருத்தாகும். பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை யார் எடுத்தது என்பது தொடர்பாக கடந்த 2 நாள்களாக சசிகலா ஆதரவாளர்களும், எடப்பாடி ஆதரவாளர்களும் அடிக்காத குறையாக சண்டையிட்டு வருகின்றனர்.

சசிகலாவுக்கு நோ ரைட்ஸ்

இந்நிலையில் இதுகுறித்து அரக்கோணம் எம்பி ஹரி, குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, எப்படி கட்சி பணியாற்ற முடியும். அவர் எப்படி ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க முடியும். அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. தலைமை நிலைய செயலாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி சொல்வதுதான் தொண்டர்களின் முடிவு. ஆனால், தம்பிதுரையோ, சசிகலா தான் கட்சியை காப்பாற்றுவது போல ஒரு மாயையை உருவாக்கி ஒரு வரலாற்று பிழையை செய்துவிட்டார்.

உங்கள் பிரச்சினையை பாருங்கள்

தினகரன் அவர்களே முதலில் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க கவனம் செலுத்துங்கள். கட்சியை எப்படி காப்பாற்றுவது என்று எங்களுக்கு தெரியும். திகார் சிறைக்கு செல்வதற்கு முன்னர் அறிவித்த அறிவிப்பில் இருந்து பின்வாங்காதீர்கள். சசிகலாவே பொதுசெயலாளராக இக்கட்டான சூழ்நிலையில் தான் தேர்ந்தேடுக்கப்பட்டார். அவருடையை பதவியே செல்லுமா? செல்லாதா? என்ற கேள்விக்குறியாகத்தான் உள்ளது. தினகரன் மட்டுமல்ல சசிகலாவின் குடும்பமே கட்சியை விட்டு நிரந்தரமாக விலகி செல்ல வேண்டும்.

கட்சியால் வளர்ந்தனர்

சசிகலா குடும்பத்தினர் தான் கட்சியால் வளர்ந்தனர். ஆனால் அவர்களால் அதிமுக ஒருபோதும் வளரவில்லை. அவர்கள் தான் அதிமுகவை காப்பாற்றுவதாக ஒரு பிரம்மையை உருவாக்குகின்றனர். அதிமுகவுக்கு அவர்களால் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இதனால் அவர்களாகவே கட்சியில் இருந்து நிரந்தரமாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்றார் ஹரி.

சசிகலா என்றே அழைத்தார்

‘சின்னம்மா’ என்ற பட்டத்தை தவிர்த்த அரக்கோணம் எம்பி ஹரி ஒவ்வொரு முறையும் அண்ணன் டிடிவி தினகரன் என்றே குறிப்பிட்டார். ஆனால், சசிகலாவை மட்டும் சின்னம்மா என்று அழைப்பதை தவிர்த்து சசிகலா என்றே பெயர் சொல்லி குறிப்பிட்டார்.

%d bloggers like this: