நலம் வாழ எந்நாளும் இனிய வழிகள் ஒன்பது

சரியான ஆரோக்கியத்துக்குச் சரிவிகித உணவு

தினசரி உணவில் புரதம், தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்பு, மாவுச்சத்து என அனைத்துமே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தசைகளை உறுதியாக்க புரதச்சத்து, கண் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் ஏ, நினைவுத்திறனுக்கு வைட்டமின் பி, எலும்புகளின் உறுதிக்கு வைட்டமின் டி, சருமப் பாதுகாப்புக்கு வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட் என உடல் உறுப்புகள் அனைத்தும் சரியாகச் செயல்பட இந்தச் சத்துகள் அவசியம்.

இதயத்தை இதமாக்கும் உணவுகள்

இதயம் நலம் பெற ஒமேகா 3 கொழுப்புச்சத்து நிறைந்த மீன்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். கெட்ட கொழுப்பு உடலில் தங்குவது தடுக்கப்படும். மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதோடு ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையும் குறையும். மீன் சாப்பிட முடியாதவர்கள், ஆளி விதைகளைச் சாப்பிடலாம்.

தீயப் பழக்கங்களிலிருந்து தள்ளி இருங்கள்
 
போதை, புகை போன்ற தீயப் பழக்கங்கள், ஆரோக்கியத்தின் எதிரிகள். தொடர்ந்து புகை பிடிப்பவர்களின் வாழ்நாள்கள், மற்றவர்களைவிட 15 ஆண்டுகள் குறைந்துவிடுகின்றன. நமக்குப் பிடித்தவர்களுடன் வாழும் ஆரோக்கியமான வாழ்க்கையை இழப்பதைவிட இந்தப் பழக்கங்களை விடுவது எளிதுதானே.

நடை பழகுங்கள்…

உடலுழைப்பு, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட முடியாதவர்களுக்கு, நடைப்பயிற்சி ஓர் அருமையான வாய்ப்பு.

உங்கள் வயது இருபதோ அறுபதோ… தினமும் காலையும் மாலையும் அரை மணி நேரம் சுறுசுறுப்பாக நடந்து பழகுங்கள். ஆரோக்கியமும் ஆயுளும் இன்னும் 10 ஆண்டுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எடை தூக்கலாம்… எலும்புகளை உறுதியாக்கலாம்

வாரம் இருமுறை முறையான எடை தூக்குதல் பயிற்சிகளை மேற்கொள்வதால் மாதவிடாய் நின்ற பின்பும், 50 முதல் 60 வயதான பெண்களும் எலும்புகளை உறுதியாக வைத்துக்கொள்ள முடியும் என ஆய்வுகள் சொல்கின்றன.  ஆரோக்கியம் மேம்படும்.

மன அமைதி தரும் செல்லப்பிராணிகள்

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே ஏற்படக்கூடிய உணர்வுபூர்வமான பந்தமானது மனதின் அனைத்து வலிகளுக்கும் ஏற்ற மருந்து. நாய், பூனை, பறவைகள் மட்டுமின்றி, ஆடு, மாடு, கோழி என அனைத்துமே இதில் அடங்கும். மனிதர்களைத் தாண்டிய மற்ற உயிர்களுடன் செலவிடக்கூடிய நேரம் அதிகமானால் மனஅழுத்தமும் குறையும்.

மகிழ்ச்சியை அதிகரிக்க மற்றவர்களுக்கு உதவலாம்

மற்றவர்களுக்குக் கொடுப்பதில்தான் ஆனந்தம் உள்ளது. உதவி என்பது பணமாகவோ பொருளாகவோ இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. அது மற்றவர்களுக்காக நீங்கள் செலவிடும் ஐந்து நிமிடமாகக்கூட இருக்கலாம். வலியில் இருப்பவர்களிடம் நீங்கள் நம்பிக்கையாகப் பேசும் வார்த்தைகள்கூட அவர்களுக்கான உதவியே. அடுத்தவர்களுக்காகத் தேவையில்லை; உங்கள் மகிழ்ச்சிக்காக உதவப் பழகுங்கள்.

நல்வாழ்வுக்கு நம்பிக்கையான எண்ணம் அவசியம்

எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொண்டு என்னால் வாழ முடியும் என்ற நம்பிக்கைதான், உங்கள் வாழ்நாளை அதிகரிக்க நீங்கள் போடும் பெரிய மூலதனம். அதிக நம்பிக்கையோடு இருப்பவர்களுக்கு, வாழ்நாள் மற்றவர்களைவிடவும் ஏழரை ஆண்டுகள் அதிகமாகின்றனவாம். அதீத சோகம், நம்பிக்கையின்மை, மனஅழுத்தம்  ஆகிய மூன்றும்தான் நம் உடலில் ஃப்ரீரேடிக்கல் என்கிற மூலக்கூறுகளைத் தோற்றுவிக்கும். இவை நோயின் தன்மையை அதிகரித்து ஆரோக்கியத்தையும் பாதித்துவிடுகின்றன. ஆகவே, ‘நூறு ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் நான் நலமாக வாழ்வேன்’ என அடிக்கடி சொல்லிக்கொள்ளுங்கள். வார்த்தையில் இருக்கும் நம்பிக்கையே வாழ்க்கையைப் பிரகாசமாக்கும்.

மனம் விட்டுப் பேசுங்கள்

அலுவலக இடைவெளியில் நண்பர்களுடன் உரையாடுவது, விடுமுறை நாள்களில் வீட்டில் இருப்பவர்களுடன் வெளியே செல்வது, புதிய இடங்களுக்குச் செல்வது, குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது என ஒவ்வொரு செயலுமே வாழ்க்கையை அழகாக்கும்; புத்துயிரூட்டும். இப்படி மகிழ்ச்சியான தருணங்களில்தான் நம் உடலின் வளர்சிதை மாற்றமும் மேம்பட்டு ஆரோக்கியமும் அதிகமாகும்.

%d bloggers like this: