எடப்பாடியாரை போட்டிபோட்டு புகழ்ந்த அமைச்சர்கள்! ஜெயலலிதாவுக்கு இணையான வரவேற்பு ஏன்!?

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு தொடக்க விழா, மதுரையில் நேற்று நடைபெற்றது. இதற்கான முன்னேற்பாடாக பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த பத்து நாள்களாக மதுரையில் நடைபெற்றுவந்தன. மதுரை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி, பாண்டிகோயில் அருகே அம்மா திடலில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காலை பத்து மணிக்கே மதுரை வந்துவிட்டார். விமான நிலையத்திலிருந்து விழா அரங்குவரை வழிநெடுகிலும் பல இடங்களில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா புகைப்படக் கண்காட்சியை திறந்துவைத்த பின் ஓய்வெடுக்கச் சென்றார்.

கூட்டத்தை அதிகளவில் திரட்டும்நோக்கில, நலத்திட்ட உதவிகள் தருவதாகச் சொல்லி மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து மக்களை திரட்டி, காலையிலேயே அதிகாரிகள் அழைத்து வந்துவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல், மதுரையின் முக்கியக் கல்லூரிகளில் இருந்து, மாணவ-மாணவிகளை கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருந்தனர். எனினும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச ஆரம்பித்ததும் கூட்டம் கலையத் தொடங்கியது. மதுரையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மதுரை வந்தால் எந்தளவுக்கு பாதுகாப்பு, கெடுபிடிகள் இருக்குமோ, அந்தளவுக்கு எடப்பாடி வருகைக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில், லஷ்மண் ஸ்ருதி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சி மாலையில் தொடங்கியபோதிலும், மதியத்திலேயே விழா பந்தலுக்கு அனைவரையும் அழைத்து வந்துவிட்டார்கள். மாலை ஐந்து மணிக்கு மேடைக்கு முதல்வர்  வந்தார். அதுவரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முதல்வர் வந்ததும் யோகாசன நிகழ்ச்சி, பரதநாட்டியம் நடைபெற்றன. முதல்வர் எடப்பாடிக்குப் பிடித்தமான ‘அ.தி.மு.க-வின் கொள்கைப்பாடல்’ என்று அறிவித்து, “நீங்க நல்லா இருக்கோனும் நாடுமுன்னேற…” என்ற ‘இதயக்கனி’ திரைப்படப் பாடலைப் பாடினார்கள். அப்போது மேடையில் இருந்த திரையில் எடப்பாடியை ‘ஸூம்’ செய்து காட்டினார்கள். இசை நிகழ்ச்சிக்குப்பிறகு கு. ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. அதன்பின்பு புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா வரவேற்றுப் பேசினார். 

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு தொடக்க விழா

அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு  முதல்வர் எடப்பாடியை ‘ஐஸ்’ வைத்துப் பேசினார்கள். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடர்பாக உதயகுமார் தயார்செய்த செய்திப்படத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல்வாரிசாக எடப்பாடியை புகழ்ந்து தள்ளியிருந்தார். சட்டப்பேரவை சபாநாயகர் ப.தனபாலும், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் எம்.ஜி.ஆருக்கும், அவர்களுக்குமான தொடர்பு பற்றிப்பேசினார்கள். விழாவில் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் பங்கேற்றுப் பேசினார்.

விழாவுக்கு வந்திருந்த அமைச்சர்கள் எம்.எல்.ஏ-க்களுக்கு நினைவுப்பரிசு கொடுப்பதில் செல்லூர் ராஜூவுக்கும், ஆர்.பி. உதயகுமாருக்கும் மேடையில் கதகளி ஆட்டமே நடைபெற்றது. ஆனால், ராஜன் செல்லப்பாவோ, முதல்வருக்கு மட்டும் உலோகத்தால் செய்யப்பட்ட மீனாட்சியம்மன் படத்தை வழங்கிவிட்டுச் சென்றார். டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ், கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் உ. தனியரசு ஆகியோர் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
இரவு ஏழு மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிவைத்திருந்த உரையை படிக்கத் தொடங்கினார், எம்.ஜி.ஆரின் பெருமைகள் பற்றிப்பேசியவர், அ.தி.மு.க-வினர் தேவையற்ற கருத்துகளைப் பேசாமல், கட்சிப்பணிகளை செவ்வனே ஆற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தனது பேச்சின் நிறைவாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போன்றே எடப்பாடியாரும் வழக்கம்போல் குட்டிக்கதை ஒன்றை சொன்னார்.

“அக்பர் அவையில் இருந்த பீர்பாலிடம், ‘உலகத்திலேயே எல்லோராலும் வெறுக்கத்தக்க கெட்டபொருள் எது?’ என்று கேட்டதற்கு, நாக்கு என்று கூறினார் பீர்பால். எப்படி என்று அக்பர் கேட்டார். ‘இந்த நாக்குதானே இல்லாததையும், பொல்லாததையும் பேசி தேவையற்ற சண்டையை உண்டாக்குகிறது, மற்றவர்களைப்பற்றி வீண்வம்பு வளர்க்கிறது’ என்றார். பீர்பால் சொன்னதை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்களாம். மறுநாள் ‘உலகத்திலேயே நல்ல பொருள் எது?’ என்று கேட்டிருக்கிறார் அக்பர், அப்போதும் பீர்பால், ‘நாக்கு’ என்று கூறினார். ‘நேற்று கெட்டது என்று சொல்லிவிட்டு, இன்று நாக்கை நல்லது என்கிறீர்களே’ என்று அக்பர் கேட்டுள்ளார். ‘அதே நாக்கு நல்லதுபேசினால், எல்லோரும் பாராட்டத்தானே செய்வார்கள். அப்படிப்பட்ட நாக்கு, சண்டை சச்சரவு பேசாமல், அன்போடு பண்போடு, பாசத்தோடு பேசினால் அதை உலகின் சிறந்த பொருள் என்று சொல்லலாமே’ என்று அந்தக் கதையைச் சொல்லி முடித்தார்” எடப்பாடி பழனிசாமி. மேலும், மதுரை மாவட்டத்துக்கு சிறப்புக் குடிநீர் திட்டம் உள்பட சில திட்டங்களையும் முதல்வர் அறிவித்தார். மேலும்,”மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என்றழைக்கப்படும்” என்றார் அவர்.

“கட்சியையும், ஆட்சியையும் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்றால், தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதாவைப் போலவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். அதன் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு இணையான வரவேற்பு அவருக்கும் கொடுப்பட்டது.” என்று மதுரை அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர்.
எடப்பாடி பேசியது எல்லாம் சரி, ‘அந்த நாக்கு கதை யாருக்கு சொன்னது?’ என்றுதான் தெரியவில்லை!

ஒரு மறுமொழி

  1. எல்லாம் ஊழல்வேடக்காரர்கள்..தமிழையும் தமிழ்நாட்டையும் மெரினா பீச்சில புதைக்காம விட்டிடுங்கப்பா

%d bloggers like this: