Advertisements

ஜி.எஸ்.டி… அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்!

ஜி.எஸ்.டி குறித்து பலருக்கும் பலவிதமான கேள்விகள், சந்தேகங்கள். இந்தப் புதிய வரி  குறித்து பலருக்கும் உள்ள கேள்விகளும், அதற்கான பதில்களும் இதோ…

ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தபின் சரக்குகள் கொண்டு செல்லும்போது செக்போஸ்ட் இருக்குமா?

‘‘மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் இனி இருக்காது. ஆனால், எந்த இடத்தில் வேண்டுமானாலும் சரக்குகளைக் கொண்டு செல்லும் வாகனங்களைப் பறக்கும் படையானது கண்காணிக்க வாய்ப்புண்டு. சரக்குகளைக் கொண்டு செல்லும் வாகனங்களை ஜி.பி.எஸ் மூலமாகவும் கண்காணிப்பதற்கு வாய்ப்புண்டு.’’

ஜி.எஸ்.டி-யில் கட்டாயத் தணிக்கை உண்டா?

‘‘ஆம். பதிவு செய்த வணிகர் ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் ரூ.1 கோடிக்கு மேல் மொத்த உற்பத்தி இருந்தால், முறையாக ஆடிட்டரிடம் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும்.’’

இலவசப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி வருமா?

‘‘ஆம். விற்பனையை அதிகரிக்கும் பொருட்டுத் தரப்படும் இலவசப் பொருள்களுக்கும் வரி செலுத்த வேண்டும்.’’

இன்வாய்ஸில் தகவல்கள் ஏதேனும் தவறுதலாகக் குறிப்பிட்டால் என்ன செய்ய வேண்டும்?

‘‘கிரெடிட் அல்லது டெபிட் நோட் கொடுத்து சரிசெய்ய வேண்டும்.’’

தொகுப்பு முறைத் திட்டத்தை யார் பயன்படுத்தலாம்?

‘‘ஜி.எஸ்.டி கவுன்சிலால் குறிப்பிடப்படும் பொருள்களைத் தயார் செய்யும் உற்பத்தியாளர் மட்டுமே தொகுப்பு முறைத் திட்டம் மூலம் வியாபாரம் செய்ய முடியும்.’’

ஜி.எஸ்.டி பதிவு பெற்ற அனைவரும் வரித் தாக்கல் செய்ய வேண்டுமா?

‘‘ஆம். ஜி.எஸ்.டி பதிவு செய்திருந்தால், வரி விலக்குப் பெற்ற பொருள்களை விற்பனை செய்தாலும், வரி ஏதும் கட்டத் தேவையில்லை என்கிற ‘NIL’ ரிட்டர்னைக் கட்டாயம் தாக்கல்  செய்ய வேண்டும்.’’

ஜி.எஸ்.டி-யில் எத்தனை ஆண்டுகளுக்குக் கணக்குப் புத்தகங்களைப் பராமரித்து வைத்திருக்க வேண்டும்?

‘‘ஜி.எஸ்.டி சட்டப்படி கணக்குப் புத்தகங்களையும், மற்ற ஆவணங்களையும் வருடாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்தபிறகு வரக்கூடிய 60 மாதங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.’’

விநியோக நேரம் என்பது எதைக் குறிக்கும்?

‘‘வரி விகிதத்தில் மாற்றம் ஏற்படும்போது, டைம் ஆஃப் சப்ளை (Time of Supply) என்பது இன்வாய்ஸ் (Invoice) தேதி அல்லது பணம் வந்த தேதி – இதில் எந்தச் செயல் முதலில் நடந்ததோ அதுவே விநியோக நேரமாக ஏற்றுக்கொள்ளப்படும்.’’

ஜி.எஸ்.டி பதிவை எப்படி ரத்து செய்வது?

‘‘வரிதாரர்கள் தாமாகவோ அல்லது அதிகாரிகள் பதியும்போதோ ஏதேனும் தவறு நேர்ந்தால்,  தங்கள் உரிமையின் அடிப்படையில் பதிவினை ரத்து செய்ய அதிகாரமுண்டு. அப்படி ரத்து செய்யும்போது, உள்ளீட்டு வரி போக மீதமுள்ள வரியைச் செலுத்திப் பதிவு ரத்து செய்யப்படும். பதிவுச் சான்றிதழை முதன்மை வியாபார இடத்தில் கண்ணில் தெரியும்படி வைத்திருக்க வேண்டும்.’’

உள்ளீட்டு வரி (Input Tax) வரவு எப்போது மறுக்கப்படும்?

‘‘தனது சொந்த உபயோகத்துக்கு அல்லது வாடகைக்கு விடப்படும் கட்டடங்களுக்கு உள்ளீட்டு வரி (Input Tax Credit) எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படமாட்டாது. ஹோட்டல் துறையில், ஃபர்னிச்சர், ஏ.சி, உபகரணங்கள் போன்றவற்றுக்கு உள்ளீட்டு வரி எடுக்க முடியும். ஆனால், கட்டடத்துக்கு வாங்க முடியாது.’’

வரியைத் திரும்பப் பெறுவது எப்படி?

‘‘வரியைத் திரும்பப் பெறுவதற்காக (Refund) அரசு நல்ல வழிமுறைகளை உருவாக்கியுள்ளது. வரியைத் திரும்பப் பெற தொடர்ந்து தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. நேரடியாகவும், விரைவாகவும் வங்கிக் கணக்குக்கே வந்து சேருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.’’

Advertisements
%d bloggers like this: