Advertisements

சசிகலாவை ஏன் சந்தித்தார் டி.டி.வி.தினகரன்? – லைவ் ரிப்போர்ட்

பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்துப்பேசினார். அப்போது, கட்சியில் சில முக்கிய முடிவுகளை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு பிளவுப்பட்ட அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணையவில்லை. இந்தச் சூழ்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார்,

இரண்டு அணிகளும் மீண்டும் இணைய பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிவித்தார். இதை ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மறுத்தார். இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களுக்கிடையே உள்ள கருத்துவேறுபாடு காரணமாக இணைவதில் சிக்கல் தொடர்ந்துவருகிறது. இந்தநிலையில், இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் கைதான டி.டி.வி.தினகரன் ஜாமீனில் வெளியில் வந்தார். அவருக்கு நேற்று காலை ஒரு போன் அழைப்பு வந்தது. உடனடியாக அவர், விமானத்தில் மும்பை சென்றார். அங்கு முக்கிய வி.ஐ.பி. ஒருவரைச் சந்தித்தார். இதன்பிறகு மும்பையிலிருந்து இன்று பெங்களூரு சென்றார் டி.டி.வி.தினகரன். பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்து அரை மணி நேரம் பேசினார். அப்போது, அ.தி.மு.க.வின் நிலை குறித்தும் தமிழக அரசியல் சூழ்நிலையைக் குறித்தும் பேசியுள்ளார். அதை கேட்ட சசிகலா, சில முக்கிய முடிவுகளை கட்சியில் எடுக்குமாறு டி.டி.வி.தினகரனிடம் தெரிவித்துள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள், “அ.தி.மு.க.வில் கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சசிகலாவுக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் எதிராக செயல்பட்டுவருகின்றனர். அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைய பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தெரிவித்துள்ளார். ஆனால், அதை ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மறுத்துள்ளார். இதையெல்லாம் டி.டி.வி.தினகரன் உன்னிப்பாக கவனித்துவருகிறார். அ.தி.மு.க. உள்விவகாரம், தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவந்தார் டி.டி.வி.தினகரன். அப்போது, தனக்கும், தன்னுடைய ஆதரவாளர்களுக்கும் கொடுக்கப்படும் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்று சசிகலாவிடம் கடந்த முறை சந்தித்தபோது ஆலோசனை நடத்தினார். இந்தசமயத்தில்தான் மும்பையிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அதன்பேரில் அங்குச் சென்ற அவர், மும்பையில் அரசியல் வி.வி.ஐ.பி.யைச் சந்தித்துப் பேசினார். அவர் தெரிவித்த தகவலை உடனடியாக சசிகலாவிடம் தெரிவிக்கவே இன்று சிறைக்குச் சென்றார். மும்பை வி.வி.ஐ.பி. தெரிவித்த தகவலைக் கேட்ட சசிகலா, ‘இனி நாம் அமைதியாக இருக்கவேண்டாம். நமக்கும் கட்சியில் ஆதரவு இருப்பதை நம்மை எதிர்ப்பவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குச் சரியான பதிலடி கொடுக்கும்நேரம் இதுதான். எனவே, சில அதிரடி முடிவுகளை கட்சியில் எடு’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். இது, எங்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதுவரை அமைதியாக இருந்துவந்த சசிகலா, இந்தமுறை ஆக்ரோஷமாகவே பேசியதோடு, எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க உத்தரவிட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்”என்றார். 

சசிகலாவைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களுடன் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். அப்போது, சசிகலா தெரிவித்த தகவல்களை ஆதரவாளர்களுடன் பகிர்ந்துகொண்டார் டி.டி.வி. தினகரன். அதைக்கேட்டதும் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த தகவல் சசிகலா அணியினருக்கு வாட்ஸ்அப் மூலம் வேகமாக பரவிவருகிறது. சசிகலாவின் அதிரடி முடிவுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு தெரியவந்ததும் அவர்கள், சசிகலாவின் அதிரடிகளை எப்படி எதிர்கொள்வது என்ற ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் களேபரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக உள்விவரம் தெரிந்தவர்கள் சொல்லத் தொடங்கியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், மன்னார்குடியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடம் பேசியுள்ளனர். அப்போது, ‘ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்தால் விபரீதங்களைச் சந்திப்பது நீங்கள்தான்” என்ற தோனியில் பேசியதாகச் சொல்கிறார்கள்.

Advertisements
%d bloggers like this: