தலைவர் எடப்பாடி பழனிசாமி; பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்! – திருத்தப்படும் அ.தி.மு.கவின் சட்டவிதிகள்?

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவது குறித்து மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாக நேற்று பேட்டியளித்தார் நிதி அமைச்சர் ஜெயக்குமார். இந்த அறிவிப்பு தினகரன் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ‘அணிகள் இணையாமல் இருப்பதைக் காரணம் காட்டித்தான், முதலமைச்சருக்குக் கெடு விதித்தார் தினகரன். பன்னீர்செல்வம் வந்தாலும், நிபந்தனையற்ற இணைப்பைத்தான் முதல்வர் விரும்புகிறார்’ என்கின்றனர் அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகிகள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி என மூன்று துண்டுகளாகப் பிளவுபட்டிருக்கிறது அ.தி.மு.க. ‘இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு அணிகள் இணைப்பு அவசியம்’ என்பதைப் புரிந்துகொண்டு, ‘கட்சிப் பணியில் இருந்து விலகிக் கொள்கிறேன்’ என அறிவித்தார் தினகரன். அதே நாள்களில் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 42 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தவர், ‘இரண்டு அணிகளும் இணையும் என எதிர்பார்த்தேன். அதற்கான சூழல்கள் உருவாகவில்லை. மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபட இருக்கிறேன்’ என அறிவித்தார் தினகரன். அதற்கேற்ப, நாள்தோறும் எம்எல்ஏ-க்கள், எம்பி-க்களைச் சந்தித்து வந்தாலும், ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்குள் அவரால் நுழைய முடியவில்லை. தன்னுடைய லெட்டர் பேடில் இருந்து அறிக்கைகளை மட்டுமே வெளியிட முடிந்தது. ‘தன்னைத் தேடி எடப்பாடி பழனிசாமி வர வேண்டும்’ என்பதற்காகப் பலவித யுக்திகளைப் பயன்படுத்தினாலும், சசிகலா குடும்பத்தினர் பெயரைத் தப்பித் தவறிக்கூட எடப்பாடி பழனிசாமி உச்சரிக்கவில்லை. இதனால் கொதித்துப் போன தினகரன், ‘நான் விதித்த கெடு ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் முடிவடைகிறது. அதன்பிறகு என்னுடைய நடவடிக்கைகளைப் பாருங்கள்’ என அதிர வைத்தார். 

பன்னீர்செல்வம் அணியுடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருப்பதை, தினகரன் எதிர்பார்க்கவில்லை. ‘எடப்பாடி பழனிசாமியோடு பன்னீர்செல்வம் கை குலுக்கினால், மக்கள் மத்தியில் கூடுதல் செல்வாக்கு ஏற்படும்’ என கொங்கு மண்டல அமைச்சர்கள் நினைக்கிறார்கள். அதேநேரம், நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையைத்தான் முதல்வர் விரும்புகிறார்” என விவரித்த அ.தி.மு.க அம்மா அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர், “கட்சி அதிகாரம் பன்னீர்செல்வத்திடமும் ஆட்சி அதிகாரம் எடப்பாடி பழனிசாமியிடமும் இருக்கட்டும் என்றுதான் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.

சில வாரங்களுக்கு முன்பு இணைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கியபோது, ‘முதல்வர் பதவி; முக்கிய இலாக்காக்கள்’ எனப் பன்னீர்செல்வம் தரப்பினர் அதிக பேராசைப்பட்டனர். இதில், தங்களுடைய முக்கிய இலாக்காக்களை விட்டுத் தர அமைச்சர்கள் விரும்பாததால், இணைப்புப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. ‘தற்போது தினகரன் எதிர்ப்புக்காக இரண்டு அணிகளும் இணைவது கட்டாயம்’ எனப் பழனிசாமி தரப்பில் இருந்தே தூது அனுப்பப்பட்டுள்ளது. நீண்ட நாள்களாக, இந்தப் பிரச்னை இழுபறி ஆவதை பன்னீர்செல்வம் தரப்பினரும் ரசிக்கவில்லை. எனவே, தினகரன் விதித்த கெடு முடிவதற்குள் இரண்டு அணிகளும் கை குலுக்கத் தொடங்கிவிடும்” என்றார் விரிவாக. 

“அதேநேரம், கொங்கு மண்டல நிர்வாகிகளின் கணக்கு வேறாக இருக்கிறது. ‘பன்னீர்செல்வம் அணியுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்வதில் தவறில்லை. சில விஷயங்களில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்’ எனவும் அவர்கள் நினைக்கின்றனர். இணைப்பு முடிவுக்கு வந்தாலும், முதல்வர் பதவியில் பழனிசாமியே தொடர்வார். இதனால், பன்னீர்செல்வத்துக்கு எந்த லாபமும் கிடைக்கப் போவதில்லை. கட்சிப் பதவிக்குப் பன்னீர்செல்வம் வந்துவிட்டால், சட்டப் பேரவைத் தேர்தலில், ‘பழனிசாமியை முதல்வர் பதவிக்கு அவர் முன்மொழிவாரா?’ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தக் குழப்பத்தைத் தினகரன் ஆதரவாளர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம், தற்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எந்தவித இடையூறும் இல்லை. ‘பன்னீர்செல்வம் பக்கம் இருக்கும் 11 பேரும் தினகரன் பக்கம் சென்ற 34 பேரும் ஆட்சி பறிபோவதை விரும்பவில்லை. மத்திய அரசு நமக்கு எதிராக சில விஷயங்களை முன்னெடுத்தால், காங்கிரஸ் கட்சியின் எட்டு எம்எல்ஏ-க்களும் நம்மை ஆதரிப்பார்கள். பெரும்பான்மை எம்எல்ஏ-க்களின் ஆதரவு நமக்கு இருக்கிறது. எனவே, ஆட்சி முடிந்து தேர்தல் வரும்போது, எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளராகக் களத்தில் நிற்பார்’ என உறுதியாகப் பேசி வருகின்றனர் கொங்கு மண்டல அமைச்சர்கள்.

 

மேலும், அ.தி.மு.கவின் சட்டவிதிகளில் திருத்தம் செய்து, தி.மு.கவில் உள்ளது போல தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர். தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் பொதுச் செயலாளர் பதவிக்குப் பன்னீர்செல்வத்தையும் முன்னிறுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர். சசிகலா குடும்பத்தின் தயவு இல்லாமல், ஆட்சி மற்றும் கட்சியை வழிநடத்திச் செல்லும் முடிவுக்கு இருவரும் வந்திருக்கிறார்கள். இதற்கு எதிராக என்ன மாதிரியான நடவடிக்கைகளை தினகரன் முன்னெடுக்கப் போகிறார் எனவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்” என்கிறார் அ.தி.மு.கவின் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

%d bloggers like this: