Advertisements

எடப்பாடி ‘அஸ்திரம்’ தினகரன் ‘திடுக்’

னாதிபதி வேட்பாளர்கள் ராம்நாத் கோவிந்த், மீரா குமார் இருவரும் தமிழகத்தின் தலைநகரை முற்றுகையிட்டதுதான் கடந்த வார பரபரப்பு’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்.
“பி.ஜே.பி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் அமர்க்கள வரவேற்பு கொடுத்திருக்கின்றனவே?’’ என்றோம்.

‘‘ஆமாம்! அவருடைய பயணத்திட்டம் டெல்லியில் தயாரானபோதே ‘அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளுடனும் தனித்தனியாக எப்படிப் பேசுவது… என்ன பேசுவது’ என்பதும் முடிவானது. வழக்கம் போல, ஓ.பி.எஸ் அணிக்குத்தான் முன்னுரிமை. ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ, எம்.பி-க்கள் அந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். ராம்நாத்திடம் பன்னீர் காட்டிய பவ்யத்தைக் கண்டு, அவருடன் வந்தவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். ஆனால், அரசியல் திருப்பம் எதுவும் இடம்பெறவில்லை.”

“ம்ம்ம்… அப்படியானால் எடப்பாடி அணியைச் சந்தித்ததில் திருப்பம் இருந்ததா?”
“ஆம். யாரும் எதிர்பார்க்காத அதிரடி. எடப்பாடி அணியினரைக் கலைவாணர் அரங்கில் சந்தித்தார், ராம்நாத் கோவிந்த். தினகரன் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். சமீபகாலமாக, ஓ.பி.எஸ் அணிக்கும் எடப்பாடி அணிக்கும் இடையில் நடக்கும் மோதலைவிட… தினகரன் அணிக்கும் எடப்பாடி அணிக்கும்தான் அதிகமாக மோதல் நடக்கிறது. ஆனால், ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டதும், அ.தி.மு.க-வின் மூன்று அணிகளும்  போட்டி போட்டுக்கொண்டு ஆதரவு கொடுத்தன. ஆனாலும் பி.ஜே.பி தரப்பு அதை இரண்டு பிரிவாக மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டது. தினகரனின் ஆதரவைச் சத்தமின்றி ஏற்றுக்கொண்ட பி.ஜே.பி., அவர்களைத் தனியாக சந்திக்கவில்லை. அவர்களையும் மொத்தமாக அழைத்துவரும் பொறுப்பு எடப்பாடி தலையில்தான் சுமத்தப்பட்டது. இதனால் கடைசி நேரம் வரையில் எடப்பாடி அணி டென்ஷனிலேயே இருந்தது.”
“ஏன்?”
“கடைசி நேரம்வரை தினகரன் தரப்பில் எம்.எல்.ஏ வெற்றிவேல், டென்ஷனை ஏற்றிக்கொண்டே இருந்தார். ‘பன்னீர் அணிக்குத் தரப்பட்ட முக்கியத்துவத்தைப் போல, தினகரன் தரப்புக்கு பி.ஜே.பி முக்கியத்துவம் தரவில்லை’ என்றார்.  ராம்நாத் கோவிந்த் பயணத்திட்டத்திலும் ‘தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்களோடு தனி சந்திப்பு வேண்டாம்’ என பி.ஜே.பி மேலிடம் சொன்ன தகவலும் அவர்களுக்குக் கிடைத்தது. அது, தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்களைச் சூடேற்றியது. ‘ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற இஃப்தார் விருந்தைப் புறக்கணித்ததைப் போல ராம்நாத் கோவிந்த் வருகையையும் புறக்கணிப்போம்’ என அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.”

“பிறகு எப்படி கலந்து கொண்டார்களாம்?”
“எல்லாம் தினகரனின் அறிவுறுத்தல்தான். ‘நம் ஆதரவு ராம்நாத் கோவிந்த்துக்குத்தான் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டோம். கலைவாணர் அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் நீங்களும் கலந்துகொள்ளுங்கள்’ எனத் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு,  தினகரன் அறிவுறுத்தியுள்ளார். அதன்பிறகுதான், அவர்கள் வருவது உறுதியானது.”
“தினகரன் அந்த அளவுக்கு இறங்கிவர என்ன காரணம்?”
“தினகரன் தரப்போ, சசிகலா உறவுகளோ, அதிகமாகக் குடைச்சல் கொடுக்கும் சமயங்களில், அவர்களைச் சமாளிக்க எடப்பாடி ஒரு புதிய அஸ்திரத்தைப் பயன்படுத்துகிறார். ‘என்னை விட்டுவிடுங்கள். நான் ராஜினாமா செய்துவிடுகிறேன். நீங்கள் விரும்பும் ஒருவரை முதல்வராகப் போட்டுக் கொள்ளுங்கள்’ என்கிறார். இது தினகரன் தரப்புக்கும், சசிகலா குடும்பத்துக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. இன்றைக்குக் கட்சியும் ஆட்சியும் இருக்கும் நிலையில், எடப்பாடியும் ராஜினாமா செய்தால், அடுத்து ஒருவரைப் பிடித்து, முதல்வராக்கி, ஆட்சியையும் கட்சியையும் ஸ்திரமாக வைத்துக்கொள்வது கடினம் என்பதால்தான், அவர்களும் பொறுமையாக இருக்கின்றனர். ஆனாலும், சில விவகாரங்களில் எடப்பாடி தரப்பு தன்னிச்சையாகச் செயல்படுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ‘கைமீறிப்போகிறார் எடப்பாடி’ என்ற புகைச்சல் லேசாக அந்தக் குடும்பத்தில் எழ ஆரம்பித்துள்ளது. ‘நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் முடியும் நேரத்தில், மிகப்பெரிய புயல் ஒன்று ஆட்சியை மையம் கொள்ள உள்ளது. அது, ஆட்சியையே அசைத்துப் பார்க்கலாம்’ என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.’’
‘‘பி.ஜே.பி-யுடன் எடப்பாடி நல்ல உறவில் இருக்கும்போது, ஆட்சி கவிழ வாய்ப்புள்ளதா?”
“ஜி.எஸ்.டி, உதய் திட்டம், ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு ஆகியவற்றில் பி.ஜே.பி சாதித்துவிட்டது. இனிமேல் அ.தி.மு.க-வின் தயவு பி.ஜே.பி-க்குப் பெரிதாகத் தேவைப்படாது. ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமருக்கு அழைப்பு கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இதுவரை பிரதமர் மோடி எந்த முடிவும் எடுக்கவில்லை. அதுவரை தமிழகத்தில் ஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகமே அதற்குக் காரணம் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்!’’
‘‘அப்படியா?”
‘‘இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல், பிஸியாகிவிட்டார் திவாகரன். தினகரனுக்கு ஆதரவாக மன்னார்குடியில் கடந்த மாதம் 18-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்து திவாகரன் தலையிட்டதால், போலீஸ் தடை போட்டது. இந்தச் சண்டையைப் பயன்படுத்திக்கொண்டு, தஞ்சையில் பொதுக்கூட்டம் நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் வந்து தங்களுடன் இணைவார்கள் என்று ஓ.பி.எஸ் தரப்பில் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி கூட்டம் திரளவில்லையாம். ஓ.பன்னீர்செல்வம் தஞ்சைக்கு வந்த ஜூன் 28-ம் தேதியன்று, திருவாரூரில் முன்னாள் எம்.எல்.ஏ பாப்பா சுப்பிரமணியன் மகன் திருமணத்துக்குச் சென்றார் திவாகரன். அங்கு திவாகரனை வரவேற்று, ‘தம்பி வா! தலைமை ஏற்க வா!’ என்று ஃபிளக்ஸ் வைத்திருந்தார்கள்’’

‘‘ஓஹோ’’
‘‘நேரடி அரசியலில் இறங்க திவாகரன் ஆர்வம் காட்டுவதாக, அவரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஜூலை 15-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைத் திவாகரனின் வலது கரமாக இருக்கும் எஸ்.காமராஜ் ஏற்பாட்டில் மன்னார்குடியில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு டெல்டா பகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள்,எம்.பி-க்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களைப் போகச் சொல்லி முதல்வர் எடப்பாடி தரப்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டு விட்டதாம்.’’
“அ.தி.மு.க-வுடன் இருந்த உதிரிக் கூட்டணிக் கட்சிகள் பிரிந்து போய்விட்டன போலத் தெரிகிறதே?”
“கொங்கு நாடு இளைஞர் பேரவை கட்சியின் தனியரசு, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகிய மூவரும் இரட்டை இலையில் வென்று எம்.எல்.ஏ ஆனவர்கள். இவர்கள், ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலைக்கு வந்துவிட்டனர். சில நாள்களுக்கு முன்பு ஸ்டாலினைக் கருணாஸ், தனியரசு இருவரும் சந்தித்து, பல விஷயங்களை மனம் விட்டுப் பேசியுள்ளனர். தமிமுன் அன்சாரியைத் தொடர்பு கொண்ட ஸ்டாலின், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கேட்டுள்ளார். அவரும் அதற்கு ஓகே சொல்லி விட்டார்.”
“தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
“காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் வருகையின்போது, தி.மு.க தனது முழு பலத்தையும் காட்டியது. ‘கருணாநிதியைச் சந்திக்க வேண்டும்’ என்று ஸ்டாலினிடம் மீரா குமார் சொல்லியுள்ளார். கோபாலபுரம் வந்த மீரா குமாரை ஸ்டாலின் அறிமுகம் செய்தபோது, கருணாநிதி தலையை நிமிர்ந்து பார்த்துள்ளார். உடனே கருணாநிதியின் கையில், தான் கொண்டுவந்த சால்வையைக் கொடுத்துள்ளார் மீரா குமார். தலையைக் குனிந்து வணக்கம் தெரிவித்தபோது, மீரா குமாரின் தலையில் கையை வைத்து கருணாநிதி வாழ்த்தியுள்ளார்.”

“மீரா குமார் – எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பின்போது என்ன நடந்ததாம்?”
“தி.மு.க சார்பில் ஸ்டாலினும், காங்கிரஸ் சார்பில் சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் பேசியுள்ளனர். அதன்பிறகு, தனக்குப் பேச வாய்ப்பு வழங்குவார்கள் என்று திருநாவுக்கரசர் பெரிதும் எதிர்பார்த்தாராம். ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லையாம். அதில் திருநாவுக்கரசருக்குக் கொஞ்சம் வருத்தம் என்கிறார்கள். ‘ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் எப்படிப் பேச முடியும்’ என்கிறார்கள் தி.மு.க-வினர்.”
“திருநாவுக்கரசருக்கு விழா எடுக்கப் போகிறார்களாமே?”
“ஆமாம்! திருநாவுக்கரசர் அரசியல் களத்துக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. 1977-ம் ஆண்டு அறந்தாங்கி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்று, துணை சபாநாயகராக ஆனார். காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசரை அ.தி.மு.க-வுக்குக் கொண்டு வந்தது எம்.ஜி.ஆர்தான். துணை சபாநாயகராக இருந்தவரை அமைச்சராக்கினார். எம்.ஜி.ஆர் இறந்தபிறகு, ஜெயலலிதாவின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தார். பிறகு தனிக் கட்சியைத் தொடங்கி, அந்தக் கட்சியை பி.ஜே.பி-யுடன் இணைத்து மத்திய அமைச்சர் ஆனார். பிறகு காங்கிரஸில் இணைந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக உள்ளார். அவர் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை, வரும் 13-ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.”
‘‘ஓஹோ!’’
‘‘இந்த வெட்டி பந்தா எல்லாம் எதற்கு என்று திருநாவுக்கரசரின் எதிர்கோஷ்டி கொளுத்திப் போடுகிறது. திருநாவுக்கரசரின் மகளுக்கும் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் மகனுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கான நிச்சயதார்த்தம் கடந்த வாரம் நடந்தது. ஸ்டாலினை அழைத்து இருந்தார் திருநாவுக்கரசர். அவரும் வந்திருந்தாராம். தினகரன் அணியில் இருக்கிறார் இசக்கி சுப்பையா. அவர் தினகரனை அழைத்து வந்திருந்தார். சசிகலா குடும்பத்தினர் அனைவரும் அதில் ஆஜரானது ஆச்சர்யம். திருநாவுக்கரசரின் பழைய அ.தி.மு.க பாசத்தை, தி.மு.க உன்னிப்பாகக் கவனித்து வருகிறது’’ என்றபடியே கழுகார் பறந்தார்.

Advertisements

One response

  1. 1977-ல வந்திருந்த இப்போ 40 வருஷம்தான் ஆகுது.

%d bloggers like this: