அதிமுகவில் பிளவு இல்லை.. இதெல்லாம் அண்ணன், தம்பி பிரச்சினை போன்றது.. சொல்கிறார் ஜெயக்குமார்

திருச்சி: அதிமுகவினர் தனித்தனி அணியாக செயல்படுவது அண்ணன், தம்பி பிரச்சினை போன்றது என நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் அமைச்சர்களும் ஒபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

 

இதனால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி அணியிலும் ஒபிஎஸ் அணியிலும் பேச்சுவார்த்தை நடத்த சுமூகமான சூழ்நிலை உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் இருந்து சிலர் பிரிந்து சென்றால் கட்சியில் பிளவுபட்டதாக அர்த்தமில்லை எனவும் தனித்தனி அணியாக செயல்படுவது அண்ணன், தம்பி பிரச்சினை போன்றது எனவும் கூறினார். அதிமுகவின் 3 அணிகளும் மத்திய அரசுக்கு அடிமையாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கூறுவது முட்டாள்தனமானது என்று கூறிய ஜெயக்குமார், மத்திய அரசிடம் ரூ.17 ஆயிரம் கோடி நிதி வரவேண்டி உள்ளதால் மோடியை சந்தித்து வருகிறோம் என்று கூறினார். மேலும் தமிழகத்தில் தொடர்ந்து அதிமுக ஆட்சி தான் அமையும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையில் செயல்பட்டு வருகிறோம் என்றும் கூறினார்.

%d bloggers like this: