Advertisements

இயற்கையை வணங்குவோம்!

யல்வெளி, திண்ணைவீடுகள், ஓலைக் குடிசைகள், கோயில்கள், குளங்கள், மரங்கள், பறவைகள்… இவையெல்லாம் கிராமத்தின் அடையாளங்கள். ஒருமுறை இத்தகைய கிராமங்களுக்குச் சென்றுவந்தவர்களை மீண்டும் அங்கே செல்லத் தூண்டும் வகையில்

அவற்றின் இயற்கைச் சூழல்கள் அருமையாக அமைந்திருக்கும். கிராமங்களின் வாழ்வியல் முறை, உணவுப் பழக்கங்கள் மற்றும் பொருள்களின் பயன்பாடு என அனைத்துமே தனித்துவமானவை. செயற்கைக்கலப்புகள், ரசாயனச் சேர்க்கை போன்றவற்றின் தாக்கம்   கிராமங்களில் குறைவு.  கிராமங்களைப்போல் நகரங்களிலும் முடிந்த அளவு இயற்கை சார்ந்த வாழ்க்கையை நாம் வாழ முயல வேண்டும். சில முயற்சிகளாலும் மெனக்கெடல்களாலும் கெமிக்கல் வாழ்வின் நாசங்களிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளமுடியும். நகரங்களிலும் ஓர் அழகிய கிராமியச் சூழலை உருவாக்குவோம்; ஆரோக்கியம் காப்போம்.

* வீட்டுக்குள் இண்டோர் செடிகளை வளர்க்கலாம். அவை காற்றைச் சுத்தப்படுத்தும்; நச்சுகளை உறிஞ்சும். ரம்மியமான சூழலை உருவாக்கும். டென்ஷன் மனநிலையோடு வீட்டுக்கு வந்தால், கூல் செய்து சாந்தமான மனநிலைக்கு நம்மை மாற்றும்.

* ஃபில்டர் தண்ணீர், கேன் வாட்டர், ஆர்.ஓ  ட்ரீட் செய்யப்பட்ட தண்ணீர் போன்றவை இல்லாமல் மண் பானை அல்லது செம்புப் பாத்திரத்தில் ஊற்றிய தண்ணீரைப் பருகலாம்.

* உணவின் மூலம் நேரடியாக கெமிக்கல்கள் உடலுக்குள் செல்லும். அதனால் காய்கறி, கீரைகள், பழங்களை அரை மணி நேரம் கல் உப்பு கலந்த நீரில் ஊறவைத்துப் பின் கழுவலாம். அல்லது புளித் தண்ணீர், மிதமான சூடுள்ள தண்ணீரில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கழுவலாம். ஆர்கானிக் உணவுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

* வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு நைலான், சிந்தெடிக் துணிகளில் திரைச்சீலைகளைத் தவிர்த்து, வெட்டிவேர்த் திரைகளைப் பயன்படுத்தலாம்.

* முகம், கூந்தல் எனத் துவங்கிக் கால் நகம் வரை நாம் பராமரிப்புக்குப் பயன்படுத்துபவற்றில் ரசாயனப் பொருள்களே நிறைந்துள்ளன. முகப் பராமரிப்புக்கு க்ரீம்களுக்குப் பதிலாகச் சந்தனம், ஆவாரம் பூ, துளசி, வேம்பு, கஸ்தூரி மஞ்சள் சேர்ந்த மூலிகைப்பொடிகளைப் பயன்படுத்தலாம். உடலுக்கு வெந்தயம், பயத்தம் மாவு, மஞ்சள், கற்றாழை, வேப்பிலை போன்றவற்றைப் பயன்படுத்தலாம். கூந்தலுக்குக் கறிவேப்பிலை, மருதாணி, நெல்லி, கற்றாழை, கீழாநெல்லி, வெந்தயம் போன்றவற்றை ஒன்றாக அரைத்துத் தலையில் தடவிச் சிறிதுநேரம் ஊறவைத்து, பிறகு குளிக்கலாம். இப்படிச் செய்வதால் கூந்தல் பட்டுப்போன்று இருக்கும்.

* பிளாஸ்டிக் பாட்டிலுக்குப் பதிலாகச் செம்பு மற்றும் ஸ்டீலால் தயாரிக்கப்பட்ட பாட்டில்களைப் பயன்படுத்தலாம்.

* கூந்தலுக்குப் பயன்படுத்தும் சீப்புகூட பிளாஸ்டிக்தான். அதுபோல காலை எழுந்ததும் பிளாஸ்டிக் பிரஷ்ஷை வைத்துத்தான் பல் துலக்குகிறோம். இந்த இரண்டுக்கும் மாற்று வந்துவிட்டது. மரச்சீப்பும் மர பிரஷ்ஷும் கடைகளில் கிடைக்கின்றன.

* ரப்பர், தோல் செருப்புகளுக்குப் பதிலாக வீட்டுக்குள் பயன்படுத்த சணல், வெட்டிவேர் செருப்பை உபயோகிக்கலாம்.

 * பேக்கிங் சோடா, எலுமிச்சைச் சாறு, கல் உப்பு, ஆர்கானிக் எசென்ஷியல் எண்ணெய் வகைகள், வேப்பிலை, வெட்டிவேர், மஞ்சள் கலந்த நீரால் வீட்டைத் துடைத்துச் சுத்தப்படுத்தலாம்.

பிளாஸ்டிக் கவருக்குப் பதிலாகத் துணிப்பையைப் பயன்படுத்துங்கள். ஃபிரிட்ஜில் வைக்கும் உணவுகளைக்கூட துணிப்பையில் வைத்துப் பாதுகாக்கலாம்.

பலரது வீடுகளில் ஷூ மற்றும் செருப்பு  அலமாரியை வீட்டினுள் வைக்கும் பழக்கம் இருக்கிறது. இதனால் நச்சுகள், பாக்டீரியா, காரீயம், எண்ணெய், கிரீஸ் போன்றவற்றை நீங்கள் வீட்டுக்குள் அழைத்துவருகிறீர்கள். ஆகவே ஷூ மற்றும் செருப்புகளை வீட்டின் வெளியே வைப்பதே பாதுகாப்பு.

* கொசுவிரட்டிகளுக்குப் பதிலாக நொச்சி, வேப்பிலை, கற்பூரவல்லி ஆகியவற்றின் சாற்றைச் சம அளவில் எடுத்துத் தண்ணீரில் கலந்து, வீட்டில் தெளிக்கலாம். லெமன்கிராஸ், துளசி, கருந்துளசி, நொச்சி, திருநீற்றுப்பச்சிலை, கற்றாழை, கற்பூரவல்லி, வேப்பிலை ஆகியவற்றை வளர்க்கலாம்.

ஷாம்பூக்குப் பதிலாகச் சீயக்காய் பயன்படுத்தலாம். சீயக்காய் பயன்படுத்த நேரம் இல்லாதவர்கள், கடைகளில் விற்கும் ஆர்கானிக் ஷாம்பூகளைப் பயன்படுத்தலாம்.

மெழுகுவத்திகளில் பாரஃபின் வாக்ஸ் (Paraffin wax) கலந்திருப்பதால், அரோமா மெழுகுவத்திகளைப் பயன்படுத்தலாம். இதனால், வீட்டில் நறுமணம் வீசுவதோடு நல்ல மனநிலையை உண்டாக்கும்.

செயற்கையான நிறங்கள்,  பல வண்ணங்களில் உள்ள ஜெல் போன்ற கலவைகள் சேர்க்காத பற்பசையைப் பயன்படுத்தலாம். டீ ட்ரீ எண்ணெய், வேப்பிலை, கிராம்பு, புதினா, எலுமிச்சை கலந்த பற்பசைகள், பற்பொடிகளைத் தேர்வு செய்யலாம்.

குளிக்க உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பக்கெட்டுக்களுக்குப் பதிலாக அலுமினிய பக்கெட்டுகளைப் பயன்படுத்தலாம். இவை, தண்ணீரின் தன்மையை மாற்றாமலிருக்கும். சூடான நீரை பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் ஊற்றிப் பயன்படுத்துவதும் ஆபத்தானதே.

துணிகளைத் துவைக்க மார்க்கெட்டில் உள்ள கெமிக்கல்கள் நிறைந்த டிடெர்ஜென்ட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். நாமே கெமிக்கல் இல்லாத  சோப்புத் தூள் தயார் செய்யலாம். பாதிப்புகளை ஏற்படுத்தாத கெமிக்கல் கலந்த  காஸ்டைல் பார் சோப் (பொடி செய்தது) – 1, வாஷிங் சோடா – ஒரு கப், பேக்கிங் சோடா – அரை கப், சிட்ரிக் ஆசிட் – அரை கப், கடல் உப்பு – அரை கப். இவற்றைக் கலந்து காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துப் பயன்படுத்தலாம்.

* பிளாஸ்டிக் கூடைகளுக்குப் பதிலாக மரக் கூடைகள், மூங்கில் கூடைகள் மற்றும் தட்டுகளைப் பயன்படுத்தலாம்.

பருவ காலங்களுக்கு ஏற்ப வீட்டின் வெப்பநிலையை மாற்றலாம். கோடையில் ஏ.சி மற்றும் ஏர் கூலருக்குப் பதிலாக, வீட்டில் நீல நிற பல்புகளைப் பயன்படுத்தலாம். ஈரத்துணியை அறைகளின் ஒருபுறம் காயப்போடலாம். குளிர்ச்சி தரக்கூடிய செடிகளை வீட்டினுள் வளர்க்கலாம். மாலைநேரங்களில் ஈரத்துணியால்  வீட்டைத் துடைக்கலாம்.

சமைப்பதற்கு நான்-ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிகத் தீயில் வைத்துச் சமைப்பதால் உணவில் நான்-ஸ்டிக் பாத்திரத்தின் கெமிக்கல் கலந்து நஞ்சாக மாறிவிடும். அதற்குப் பதிலாக மண்பாண்டங்கள், ஸ்டீல் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.

Advertisements
%d bloggers like this: