Advertisements

30 எம்.எல்.ஏக்கள்; 6 அமைச்சர்கள்!’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திவாகரன் அணி’

மன்னார்குடியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை வரும் 15 ஆம் தேதி நடத்த இருக்கிறார் சசிகலாவின் தம்பி திவாகரன். ‘ தினகரனுக்கு எதிராக திவாகரனை முன்னிறுத்துகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதற்காக தனி அணியை உருவாக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன. திவாகரன் நடத்தும் விழாவில், முதல்வர் தரப்பில் இருந்து எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்’ என அதிர வைக்கின்றனர் மன்னார்குடி அ.தி.மு.கவினர்.

சென்னை, அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரனை இன்று காலை சந்தித்துப் பேசியிருக்கிறார் மொடக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சிவசுப்ரமணி. இதன்மூலம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துவிட்டது. இந்த எம்.எல்.ஏக்களை வைத்துத்தான், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆயுதத்தைக் கூர்சீவிக் கொண்டிருக்கிறார் தினகரன். சமீபத்தில், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தபோதும், ‘கட்சியிலும் ஆட்சியிலும் நமக்கான முக்கியத்துவத்தை எப்படியெல்லாம் உயர்த்தப் போகிறேன்’ என்பது குறித்தும் விவரித்திருக்கிறார். ஒவ்வொரு முறை நடக்கும் சிறை சந்திப்பை உற்று கவனித்து வருகிறார் முதல்வர் பழனிசாமி. ” இந்த விவகாரத்தில் திவாகரனைவிட, தினகரனை பெரிதும் நம்புகிறார் சசிகலா. ‘ அரசியல்ரீதியாக சில முடிவுகளை அவர் எடுத்திருக்க வேண்டியதில்லை’ என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார். ‘மீண்டும் பன்னீர்செல்வத்தைக் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்றால், தினகரனால் முடியும்’ என்பதுதான் சசிகலாவின் திடமான எண்ணம். அரசியல்ரீதியாக முடிவெடுப்பதிலும், தினகரனின் பார்வையே சரியாக இருக்கும் என நினைக்கிறார். அதனால்தான் தொடர்ச்சியான சந்திப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன” என விவரித்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், 

” தினகரனை சந்திக்கும் எம்.எல்.ஏக்களுக்கு என்னவிதமான உத்தரவாதங்கள் அளிக்கப்படுகின்றன என்பதை கொங்கு கேபினட் டீம் கவனித்துக் கொண்டிருக்கிறது. அந்த எம்.எல்.ஏக்களைத் தனித்தனியாக சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளனர். திகார் சிறையில் இருந்து வந்த நாள்முதலாக, ‘எடப்பாடி பழனிசாமி தன்னை சந்திக்க வருவார்’ என்ற நம்பிக்கையில் தினகரன் இருந்தார். ஆனால், ‘பா.ஜ.க ஆதரவு பிரமுகர்களின் ஆலோசனையின்படிதான் அவர் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்’ என்று தெரிந்தவுடன், கொங்கு அணியை வழிக்குக் கொண்டு வரும் வேலைகளில் இறங்கிவிட்டார். குடியரசுத் தலைவர் தேர்தலில், ‘அ.தி.மு.கவின் ஆதரவைக் கேட்டு பா.ஜ.க பிரமுகர்கள் தன்னை நோக்கி வருவார்கள்’ என்று எதிர்பார்த்தார். ஆனால், அவர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் தம்பிதுரையோடு விவகாரத்தை முடித்துக் கொண்டனர். இதன்பிறகு, பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தபோதும், ‘ எங்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் உங்களைச் சந்திக்கத் தயாராக இருக்கிறார்’ என தினகரன் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். ‘ நிகழ்ச்சி நிரல்படியே அனைத்தும் நடக்கின்றன’ என தினகரனை ஓரம்கட்டியது பா.ஜ.க. இந்த கோபம் அனைத்தும் சேர்ந்துதான், எம்.எல்.ஏக்களை வளைக்கும் வேலைகளைத் துரிதப்படுத்தியிருக்கிறார்” என்றார் விரிவாக. 

” சசிகலா குடும்பத்துக்குள் நடக்கும் உள்மோதலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்கேற்ப, திவாகரனோடு மறைமுகமாக நட்பு பாராட்டி வருகிறார். கடந்த மாதம் சசிகலாவை சிறையில் சந்தித்த திவாகரன் தரப்பினர், ‘ மத்திய அரசோடு இணக்கமாகச் சென்று கொண்டிருக்கிறோம். நாம் சொல்வதை எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். சொத்துக் குவிப்பு வழக்கின் சீராய்வு மனுவிலும் நல்ல பதில் கிடைக்கும். தினகரனை ஒதுக்கி வையுங்கள்’ எனக் கூறியுள்ளனர். ஆனால், ‘இப்படி நம் குடும்பத்துக்குள்ளேயே பிரித்தாளும் சூழ்ச்சியை நடத்துகிறது கொங்கு லாபி. நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்’ என்பதை பொறுமையாக சசிகலாவிடம் விவரித்திருக்கிறார் தினகரன். இதன்பின்னரே, ‘ அம்மா கட்டிக் காத்த கழகத்தைக் காப்பதற்காக, எந்த சூழ்ச்சி வலையிலும் நாம் சிக்கவிடக் கூடாது. நமக்குள் எந்தப் பிளவும் இருக்கக் கூடாது. அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்’ எனத் தகவல் சொல்லி அனுப்பினார் சசிகலா.

இதையடுத்து, தினகரனும் திவாகரனும் நேரடியாக அமர்ந்து பேசினர். ஆனாலும், நடராசன் ஆதரவில் தனக்கு எதிராக எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதை உணர்ந்துதான், ‘ திவாகரனோடு எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை’ என சிரித்த முகத்தோடு பேசினார் தினகரன். இந்நிலையில், வரும் 15 ஆம் தேதி மன்னார்குடியில் திவாகரன் நடத்தும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கூட்டத்தில், ‘ 30 எம்.எல்.ஏக்களும் ஆறு அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். எடப்பாடி பழனிசாமியின் மறைமுக ஆதரவில்தான் கூட்டம் நடக்கிறது. இதற்கு அரசின் ஒத்துழைப்பும் உண்டு. தினகரனுக்கு எதிராக திவாகரனை கொம்பு சீவி விட்டுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்கிறார் மன்னார்குடி அ.தி.மு.க சீனியர் ஒருவர். 

டி.டி.வி. விதித்துள்ள கெடு(ஆகஸ்ட் 5) முடிவதற்குள், ‘ ஆட்சி மற்றும் கட்சியில் பலம் பெற்றுவிட வேண்டும்’ எனக் கணக்கு போடுகிறார் எடப்பாடி பழனிசாமி. ‘ ஜெயலலிதாவிடம் நேரடியாக அரசியல் கற்றுக் கொண்டவன் நான். எதையும் எதிர்கொள்வேன்’ என கறுவிக் கொண்டிருக்கிறார் தினகரன். 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: