அச்சுறுத்தும் அனீமியா – அலெர்ட் ஆலோசனைகள்

ல்ல உடல்வாகும் வசதியான பொருளாதாரப் பின்னணியும் கொண்ட அவள், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். தன் தோழிகளுடன் ஒருமுறை ரத்த தான முகாமில் கலந்துகொண்டாள். அவளுடன் வந்திருந்த அனைவரும் ரத்த தானம் செய்தார்கள். ஆனால், அவளை மட்டும் ரத்த தானம் செய்ய டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. காரணம், அவளுக்கு ரத்தத்தில் போதுமான அளவு

ஹீமோகுளோபின் இல்லை. இதை அவளால் மட்டுமல்ல, அவளுடன் வந்திருந்த மற்ற பெண்களாலும்கூட நம்ப முடியவில்லை. பார்ப்பதற்குப் பூசினாற்போல் இருந்ததால், அவள் சத்தான உணவைச் சாப்பிட்டு   ஆரோக்கியமாக இருப்பாள் என்று நினைத்திருந்தார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக அவளுக்கு ரத்தச்சோகை ஏற்பட்டுள்ளது. இது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

ரத்தச்சோகை என்றதும், உடல் மெலிந்த, வறுமையான குடும்பப் பின்னணி கொண்டவர்களுக்குத்தான் வரும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், `எவ்வளவு சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டாலும், அதில் இரும்புச்சத்து இல்லை என்றால் ரத்தச்சோகை ஏற்படும்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். பெண்களுக்கு மாதவிலக்கு நாள்களில் அதிகமான ரத்தப்போக்கு இருந்தாலும் அதைக் கூச்சம் காரணமாக வெளியே சொல்வதில்லை. தொடர்ச்சியாக ரத்தச் சிவப்பணுக்களின் அளவு குறையும்போது அது கடுமையான பாதிப்புக்குள்ளாக்கும் என்று தெரியாததால், இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். இதனால், பெண்களை அதிகம் பாதிக்கிற பிரச்னைகளில் முதன்மையானதாக ‘அனீமியா’ என்கிற ரத்தச்சோகை உருவெடுத்து நிற்கிறது.

இதுபோன்று, ரத்த தானம் செய்யவோ, வேறு ஏதாவது நோய்க்கான சிகிச்சைக்காகவோ ரத்தப் பரிசோதனை செய்யும்போது, ரத்தச்சோகை பிரச்னை இருப்பதைக் கண்டறிந்தவர்களே அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். ரத்தச்சோகை பற்றிய விழிப்புஉணர்வு இன்னமும் படித்த பெண்கள் மத்தியிலும் முழுமையாக ஏற்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. ரத்தச்சோகை ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், அதைத் தவிர்க்கும் முறைகள் மற்றும் உணவுப் பழக்கங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

ரத்தச்சோகை

ரத்தச்சோகையை ஆங்கிலத்தில் ‘அனீமியா’ (Anaemia) என்பார்கள். உடலில் சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் அளவு குறையும் நிலையைத்தான் ரத்தச்சோகை என்கிறார்கள். அதாவது, ஹீமோகுளோபின் என்பது ரத்தச் சிவப்பணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதம். உடல் முழுவதும் ஆக்சிஜனைக் கடத்துவதே இதன் முக்கியப் பணி. இதன் அளவு குறையும்போதே ரத்தச்சோகை ஏற்படுகிறது. இது ஒரு நோயல்ல; மற்ற நோய்களால் வரும் ஒரு வகை பாதிப்பு.

காரணங்கள்

இரும்புச்சத்துக் குறைபாடு

   முக்கியமாக, இரும்புச்சத்துக் குறைபாடு காரணமாகவே பெரும்பாலானவர்களுக்கு ரத்தச்சோகை ஏற்படுகிறது. இதற்கு அன்றாடம் சாப்பிடும் உணவில் போதிய அளவு இரும்புச்சத்து இல்லாததும் உணவிலுள்ள இரும்புச்சத்தை உடல் கிரகிக்க முடியாமல் போவதும்தான் காரணமாகின்றன.

வைட்டமின் குறைபாடு

   வைட்டமின் சி, வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை இரும்புச்சத்து ரத்தத்தில் சேர்வதற்கு உதவிபுரிகின்றன. இவற்றின் அளவு குறைவாக இருப்பதன் காரணமாக ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தி குறைந்து, ரத்தச்சோகை ஏற்படுகிறது.

சிறுநீரகப் பாதிப்புள்ளவர்கள்

சிறுநீரகப் பாதிப்புள்ளவர்களுக்கும் ரத்தச்சோகை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், சிறுநீரகத்தில் சுரக்கும் ‘எரித்ரோபைட்டீன்’ (Erythropoietin-EPO) என்ற ஹார்மோன், எலும்பு மஜ்ஜையில் ரத்தச் சிவப்பணுக்கள் உருவாவதைத் தூண்டுகிறது. இதன் பணி பாதிக்கும்போது, ஹீமோகுளோபின் அளவு இயல்பாகவே குறைந்து ரத்தச்சோகை ஏற்படுகிறது.

கொக்கிப்புழு தொற்று

பெருங்குடலில் கொக்கிப்புழு தொற்றிருந்தால், அது குடலிலுள்ள இரும்புச்சத்தை உறிஞ்சிக்கொள்ளும்போது ரத்தச்சோகை ஏற்படும்.

குடல் புற்றுநோய், அல்சர்…

குடல் புற்றுநோய், அல்சர் போன்றவற்றால் ஏற்படும் ரத்த இழப்பாலும் ரத்தச்சோகை ஏற்படலாம். இதுதவிர, எலும்பு மஜ்ஜை பாதிப்பு, வலி நிவாரணி மாத்திரைகள் அதிகம் உட்கொள்ளுதல் மற்றும் உணவுக்குழலில் ஏற்படும் பிற நோய்களாலும்கூட ரத்தச்சோகை ஏற்படலாம்.

பெண்கள், குழந்தைகளுக்கு…

பருவம் அடைதல், மாதவிலக்கு, பிரசவம் போன்றவற்றால் பெண்கள் அதிகப்படியான ரத்த இழப்பைச் சந்திக்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்குத் தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காதபோதும் ரத்தச்சோகை ஏற்படுகிறது. தாய்க்கு ரத்தச்சோகை இருந்தால் குறைப் பிரசவத்திலும் குறைவான எடையுடனும் குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தைக்கும் ரத்தச்சோகை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அறிகுறிகள்

உடல் சோர்வு, உடல் பலவீனம், தலைவலி, உணவின் சுவை அறிய முடியாமை, லேசான மூச்சுத் திணறல், தலைமுடியின் நிறம் மாறுதல், தலைமுடி உதிர்வு மற்றும் பசியின்மை போன்றவை இதன் ஆரம்ப அறிகுறிகள். இந்த நிலையைக் கண்டுகொள்ளாதபோது வெளிறிய சருமம், தலைமுடி உதிர்தல் அதிகமாதல், நகங்களில் ஏற்படும் மாற்றங்கள் (உடையக்கூடிய நிலை அல்லது நகங்களில் குழிவிழுவது), கைகால்களில் வீக்கம் என நிலைமை தீவிரமடையும்.

பரிசோதனை

ரத்த அணுக்களின் எண்ணிக்கையைக் கண்டறியும் சி.பி.சி (Complete Blood Count – CBC) என்னும் பரிசோதனை செய்யப்படும். இது, அடிப்படையான ரத்தப் பரிசோதனைகளுள் ஒன்று. இதன்மூலம், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள், ஹீமோகுளோபின் போன்ற ரத்தப் பொருள்களின் அளவுகளைக் கண்டறிய முடியும்.

இதில், நோயாளிகள் ஆண்களா, பெண்களா அவர்களின் வயது மற்றும் பெண்கள் என்றால், மாதவிடாய்க் காலத்தில் உள்ளவரா அல்லது கர்ப்பமுற்றவரா என்பதற்கேற்ப அதன் அளவீடுகள் மாறுபடும். உதாரணமாக, ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் 11 – 15 கிராம் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். இதில் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 11 கிராமும் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு 11.5 கிராமும், 11 முதல் 15 வயது வரையிலானவர்களுக்கு 13 கிராமும் என இது வயதுக்கேற்ப வேறுபடும். கர்ப்பமுற்ற பெண்களுக்கு 11 கிராம் இருக்க வேண்டும். வயிற்று அல்சர் மற்றும் செரிமானப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்களால் ரத்தப்போக்கு உள்ளதா என்பதைக் கண்டறிய மலப் பரிசோதனை (stool tests) செய்யப்படும்.

தீர்வு என்ன?

மருத்துவரின் ஆலோசனையின்பேரில் இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிடலாம்.

பிற நோய்களால் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

ஹீமோகுளோபின் அளவு 6 கிராமுக்குக்கீழ் இருந்தால், மாற்று ரத்தம் ஏற்றவேண்டிய நிலை ஏற்படும்.

கர்ப்பிணிகள் மூன்று மாதங்கள் ஃபோலிக் ஆசிட் மற்றும் அதன் பிறகு கொடுக்கப்படும் இரும்புச்சத்து சப்ளிமென்ட்ரி மாத்திரைகளைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.

மாத்திரை சாப்பிடும்போது கவனத்தில்கொள்ள வேண்டியவை…

இரும்புச்சத்து மாத்திரைகளை உடல் உட்கிரகித்துக்கொள்ள வயிற்றில் அமிலம் இருக்க வேண்டும். எனவே, வெறும் வயிற்றில்தான் மாத்திரை சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிட்டு இரண்டு மணி நேரத்துக்குப் பிறகே உட்கொள்ள வேண்டும்.

உணவுப் பழக்கம்

இரும்புச்சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். மீன், இறால், கோழி, மாட்டிறைச்சி, ஈரல் போன்ற அசைவ உணவுகள், பழுப்பு அரிசி, கோதுமை, பாசிப்பயறு, பேரீச்சம்பழம், பனை வெல்லம், ஆப்பிள், கீரை, கொத்தமல்லி, புதினா, துளசி போன்ற இரும்புச்சத்துள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

ரத்தச்சோகை தவிர்க்க…

மாதவிடாய் மற்றும் கர்ப்பக் காலங்களில் மருத்துவரின் ஆலோசனையின்படி இரும்புச்சத்து மாத்திரையைச் சாப்பிட வேண்டும்.

சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

சாப்பிடுவதற்கு முன் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவுதல், சுகாதாரமான கழிவறையைப் பயன்படுத்துதல், காலில் செருப்பு அணிவது போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும்.

%d bloggers like this: