Advertisements

அ.தி.மு.க-வை கைப்பற்றும் திவாகரன்! – ‘திடுக்’ தினகரன்

அ.தி.மு.க-வைக் கைப்பற்றுகிறார் திவாகரன். அவரது படத்தை எடுத்து வையும்” என்று வாட்ஸ்அப் தகவல் அனுப்பிய வேகத்தில், கழுகார் நம் முன் ஆஜரானார்.
‘‘இது என்ன விவகாரம்? அவர்கள் குடும்பத்துக்குள் ஏதோ சமாதானப் படலம் நடந்ததாகவும் தகவல் பரவியதே?” என்ற கேள்வியைப் போட்டு தொடங்கி வைத்தோம்!
‘‘அப்படி ஒரு பேச்சுவார்த்தையே நடக்கவில்லை என்று தினகரன் ஒரு பேட்டியில் அதிரடியாக மறுத்திருக்கிறாரே! ‘என்னிடம் இப்படி கேள்வி கேட்டிருந்தால், ‘நீர் அடித்து நீர் விலகுமா?’ என்று மட்டுமே பதில் சொல்லியிருப்பேன். முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறார் தினகரன். யார் என்ன செய்தாலும், இந்த ஆட்சி இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சவால் விட்டாராம் நடராசன். இந்தச் சூழலில், இப்போது சசிகலா குடும்பத்துக்குள் யார் பெரியண்ணன் என்ற கோதா தொடங்கிவிட்டது.”

‘‘திவாகரனுக்கும் தினகரனுக்கும் மோதல் என்பதைச் சில வாரங்களுக்கு முன்பே நீர் சொல்லி, அட்டைப்படமாக போட்டிருந்தோமே?”

‘‘ஆமாம்! அப்போது தினகரனை எதிர்த்தார் திவாகரன். இப்போது மொத்தமாகக் கட்சியைக் கைப்பற்றும் நிலைமையை நோக்கி நகர்கிறார் திவாகரன் என்று சொல்கிறார்கள். கடந்த ஜூன் 11-ம் தேதி, தினகரன் ஆதரவாளர்கள் மன்னார்குடியில் நடத்த இருந்த கூட்டத்தை, திவாகரன் ஆதரவாளர்கள் தடுத்தனர். இந்நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை மன்னார்குடியில் வரும் 15-ம் தேதி நடத்த திவாகரன் ஆதரவாளர்கள் திட்டமிட்டு, தீவிரமாகப் பணியாற்றி வந்தார்கள். அதே 15-ம் தேதி ஓ.பி.எஸ் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைத் திருவாரூரில் நடத்தத் திட்டமிட்டு ஏற்பாடுகள் நடந்து வருவதால், டெல்டா அ.தி.மு.க-வே உல்டா ஆகிக் கிடந்தது.”
‘‘திவாகரன் ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்களாம்?”
‘‘அவர்கள் ஒரு முடிவோடு இருப்பதாகத் தெரிகிறது. இதுவரை தன்னுடைய ஆதரவாளர்களுக்காக அரசியலில் காய்களை மட்டுமே நகர்த்திவந்த திவாகரன், அன்று மேடையேறி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டு இருந்தார். இதனால் மன்னார்குடி தேரடி வீதி பரபரப்பானது. ‘ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு, எவ்வளவு ஆட்களை அழைத்து வரவேண்டும் என்று இலக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்றார்கள். திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் என டெல்டா மாவட்டங்களில் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்தார்கள். ஜெயலலிதா, சசிகலா, எடப்பாடி பழனிசாமி படங்கள் மட்டுமே அழைப்பிதழில் அச்சிடப்பட்டன. நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழ் அச்சடிப்பதற்குத் தீவிர ஆலோசனை நடத்திய நேரத்தில்தான், ஜனாதிபதி தேர்தலைக் காரணம் காட்டி இந்தக் கூட்டத்தை தள்ளி வைத்திருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதுபற்றி திவாகரனுக்கு நெருக்கமான எஸ்.காமராஜிடம் எடப்பாடி பேசியதாக சொல்கிறார்கள். ‘ஜனாதிபதி தேர்தல் முடியட்டும். அதன்பின் நானும் மன்னார்குடி வருகிறேன். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்தலாம்’ என்று உறுதி கொடுத்தாராம் எடப்பாடி. இதனால்தான் விழாவைத் தள்ளி வைத்ததாகச் சொல்கிறார்கள்.’’
‘‘இதுபற்றி தினகரன் தரப்பு என்ன சொல்கிறதாம்?’’
‘‘அவர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். ‘மன்னார்குடியில் நாங்கள் நடத்த இருந்த பொதுக்கூட்டத்தை திவாகரன் தடுத்தார். இப்போது அவர் நடத்த இருந்த விழாவை நாங்கள் தடுத்துவிட்டோம். எடப்பாடியிடம் தினகரன்தான் பிரஷர் கொடுத்து, நிகழ்ச்சியைத் தள்ளிப் போட வைத்தார்’ என்கிறார்கள் அவர்கள். நேரடி அரசியலில் இறங்க நினைக்கும் திவாகரனின் திட்டம், தினகரனை திடுக்கிட வைத்திருக்கிறது. அதனால்தான், எடப்பாடியிடம் தினகரன் பேசினார் என்று சொல்லப்படுகிறது.’’
‘‘ஓஹோ!’’
‘‘இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் சசிகலா படம் மிஸ்ஸிங். மன்னார்குடியில்தான் சசிகலா படம் போடப்பட்டிருந்தது. மன்னார்குடி விழாவுக்காக அ.தி.மு.க தலைமைக் கழகம் வடிவில் மேடை அமைக்க நினைத்தார்கள். ‘நமது பலத்தைக் காட்டக்கூடிய கூட்டம் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்’ என்று சொன்னாராம் திவாகரன். அமைச்சர்கள் பலரையும்கூட அழைத்திருந்தார். ‘இது திவாகரனுக்கான பட்டாபிஷேகம்’ என்றார்கள் அவருடைய ஆதரவாளர்கள். ‘சிலர் அண்ணனை வேறுவழியில்லாமல் அரசியலுக்குள் வரவைத்துவிட்டார்கள். மற்றவர்களை அரசியலுக்குக் கொண்டுவந்து அழகு பார்த்தார். இப்போது அவரை வைத்து நாங்கள் அழகு பார்க்கப் போகிறோம். அ.தி.மு.க-வுக்கு இப்போது ஒரு நிரந்தரமான தலைமை தேவை. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யத்தான் இந்த விழா. இனிமேலும் பொறுமையாக இருக்க முடியாது’ என்கிறார்கள் புன்சிரிப்போடு”
‘‘ம்!”
‘‘இதை முன்மொழியும்விதமாக, ஜூன் 28-ம் தேதி திருவாரூரில் முன்னாள் எம்.எல்.ஏ பாப்பா சுப்பிரமணியன் மகன் திருமணத்துக்குச் சென்ற திவாகரனை வரவேற்று, ‘தம்பி வா… தலைமை ஏற்க வா’ என வரவேற்று அசத்தினார்கள். அப்போது திவாகரன், ‘அ.தி.மு.க-வில் சிலர், மகாபாரதத்தில் அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கியதைப் போல சிக்கித் தவிக்கிறார்கள். தொண்டர்கள் இருக்கும்வரை யாரும் அ.தி.மு.க-வை அழிக்க முடியாது’ என்றார். அதே 28-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற தங்கள் அணியின் விழாவில் பேசிய ஓ.பி.எஸ், ‘சசிகலா குடும்பத்தின் கையில் அ.தி.மு.க சிக்கவிடக் கூடாது’ என்று பேசினார்.”

‘‘தி.மு.க தரப்பில் முரசொலி பவள விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறதாமே?’
‘‘ஆமாம். அதையும் அரசியல் முக்கியத்துவம் கொண்டதாக மாற்றத் திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின். கருணாநிதியின் பிறந்த நாள் விழாவின்போது ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, டி.ராஜா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், காஷ்மீரில் இருந்து ஒமர் அப்துல்லா என்று அகில இந்தியத் தலைவர்களை அழைத்து வந்தார் ஸ்டாலின். அந்த விழாவில் தமிழகத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற புகார் எழுந்தது. அதைக் போக்கும் வகையில் ஆகஸ்ட் 11-ம் தேதி முரசொலி பவள விழா நடக்கிறது. அந்த விழா தமிழக அரசியல் தலைவர்கள் பங்கெடுப்பதாக அமையுமாம். அறிவாலயம் கலைஞர் அரங்கில் விழா நடக்கிறது. ஏற்கெனவே தி.மு.க கூட்டணியில் இருப்போருடன் சீமான், வேல்முருகன், தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் என்று அந்த விழா களைகட்ட இருக்கிறது என்கிறார்கள்.’’
‘‘வைகோ மனது கரைந்து விடுமா?’’
‘‘சட்டமன்றத் தேர்தலின்போது ஸ்டாலினுக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர் வைகோ. கருணாநிதியை, காவேரி மருத்துவமனையில் பார்க்க வந்தபோது செருப்பு வீசியதால் இந்த மோதல் இன்னும் அதிகம் ஆனது. ஆனால், மலேசியா சென்ற வைகோவை அங்கே விமான நிலையத்தில் பல மணி நேரம் தடுத்து வைத்து இருந்ததைக் கண்டித்து உடனே ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கண்டிப்புடன் சொன்னார். அந்த அறிக்கையில் இரண்டு மூன்று இடங்களில் ‘அண்ணன் வைகோ’ என்றும் குறிப்பிட்டார். இந்த நிலையில் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதற்கு அழைப்பு இல்லை. ஆனால், ‘விழா வெற்றி பெற வாழ்த்துகள்’ என்றார் வைகோ. இது ஸ்டாலின் மனதை மாற்றி உள்ளது. எனவே, முரசொலி விழாவுக்கு வைகோவுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டதாம். ‘கலந்துகொள்ள இயலவில்லை’ என்று வைகோ சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள். அவரிடம் வாழ்த்து கட்டுரை வாங்க முயற்சி எடுத்து வருகிறார்களாம்!”
‘‘கனிமொழியை ஓரங்கட்டி வைத்திருப்பதாகச் சொல்கிறார்களே?’’
‘‘தி.மு.க-வுக்கு டெல்லியில் லாபி செய்ய சரியான ஆள் இல்லாத நிலையில், சமீபகாலமாக கனிமொழியைத்தான் டெல்லி விவகாரங்களைக் கவனிக்கச் சொல்லியிருந்தார் ஸ்டாலின். ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்து காங்கிரஸ் கட்சி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க சார்பில் கனிமொழியே கலந்து கொண்டார். ‘டெல்லியிலாவது நமக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்’ என்ற திருப்தியில் கனிமொழி இருந்தார். ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக் கூட்டத்துக்குத் தன்னை அனுப்பியது போல, துணை ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான கூட்டத்துக்கும் அனுப்புவார்கள் என்ற நம்பிக்கையில் கனிமொழி இருந்த நிலையில், அவருக்குப் பதிலாக டி.கே.எஸ்.இளங்கோவனை அனுப்பியுள்ளார் ஸ்டாலின். 2ஜி வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் மாதம் வர உள்ளது. தீர்ப்பு எப்படி வரும் என்ற குழப்பம் ஸ்டாலினிடம் இருக்கிறதாம். கனிமொழிக்கு டெல்லியில் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்போய், ஒருவேளை தீர்ப்பு அவருக்கு எதிராக வந்துவிட்டால் கட்சிக்குச் சிக்கலாகிவிடக்கூடாது என ஸ்டாலின் கணக்குப் போடுகிறாராம்…”
‘‘ஓஹோ!’’
‘‘ஆனால், இதைப் பற்றி கனிமொழி கவலைப்படவில்லையாம். ‘நான் நிரபராதி என்று நீதிமன்றம் சொல்லும். அதன்பிறகு பாருங்கள்… கட்சியில் ஒரு ரவுண்டு வருவேன். அதுவரை அமைதியாக இருங்கள்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியுள்ளார் கனிமொழி’’ என்ற கழுகார், பறக்கும்முன்பாக ஒரு டெல்லி தகவலைச் சொன்னார்…
‘‘ஜெயலலிதாவுக்கு அறிக்கை தருவது முதல் கட்சி வேலைகளை கார்டனில் பார்ப்பது வரை அ.தி.மு.க-வில் எல்லாமுமாக இருந்தவர் அந்த ‘பூ’ பிரமுகர். ‘குன்று’ போல போயஸ் தோட்டத்தின் அடையாளமாக இருந்த அவரை, வருவாய் புலனாய்வுத் துறை டெல்லிக்கு அழைத்து விசாரிக்கிறது. 350 கோடி ரூபாய் சொத்து விவகாரம் என்கிறார்கள்!’’

Advertisements
%d bloggers like this: