Advertisements

அல்லோகலப்படும் பெங்களூர் சிறை… "சின்னம்மா" ஸ்டைலே தனி!

பெங்களூர்: ஜெயலலிதாவின் தோழி சசிகலா வெளியே இருந்தாலும் கலகல வைக்கிறார், உள்ளே இருந்தாலும் அல்லோகலப்பட வைக்கிறார். அவரது ஸ்டைலே தனிதான்.

ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுக பொதுச் செயலாளர் பதவியை பிடிக்க நீலிக்கண்ணீர் வடித்து வேண்டாம் வேண்டாம் என்று கூறியே அதை பெற்றார். பின்னர் அவரது அடுத்த குறி முதல்வர் பதவியாக இருந்தது.

சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விரைவில் நடைபெறும் என்று தெரிந்தே ஒருநாளாவது முதல்வராக இருந்துவிட வேண்டும் என்று வெறியாட்டம் போட்டார்.

ஓபிஎஸ்ஸை குறிவைத்தார்

 

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நல்ல பெயர் பெற்ற ஓபிஎஸ்ஸின் பதவியை எப்படியாயினும் காலி செய்ய வேண்டும் என கருதி அவராகவே அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தார். இதனால் ரூட் கிளியர் என நினைத்து பதவியேற்பதற்கான பணிகளில் சசிகலா ஈடுபட்டார்.

சட்டசபை குழு தலைவர்

சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, கவர்னரின் வரவுக்காக காத்திருந்தார். ஆனால் அதற்குள் ஓபிஎஸ் தலைமையில் 11 எம்எல்ஏ-க்கள் தனி அணியாக செயல்பட தொடங்கினார். இதனால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.

கூவத்தூர் கூத்துகள்

தனக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய 122 எம்எல்ஏ-க்களை கூவத்தூர் ரிசார்டில் சிறை வைத்தார். அங்கு அவர்களுக்கு பணம், நகை, அமைச்சர் பதவி உள்ளிட்ட ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூவத்தூர் நாடகம் பெருமளவில் பேசப்பட்டது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு போனதால் அவரது முதல்வர் கனவு புஸ்வானம் போல் ஆகிவிட்டது.

சிறையில் அடங்க மறுத்த சசி

வெளியே அத்தனை ஆட்டங்கள் போட்ட பிறகு, சிறையிலும் பல்வேறு விதிமீறல்களில் சசிகலா ஈடுபட்டு வந்தார். சசிகலாவுக்கென்று சிறையில் தனி கிச்சன் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் அதற்காக அவர் சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் சிறைத் துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார்.

தனி அலுவலகம்

மேலும் சிறைக்குள் தனி அலுவலகம் இருந்ததாகவும், அவர் அவ்வப்போது வெளியே சென்று வந்ததாகவும், கூறப்படுகிறது. தற்போது மீண்டும் சசிகலாவின் பெயர் அடிபட தொடங்கிவிட்டது. லஞ்சம் வாங்கி சிறைக்கு செல்வது வழக்கம், ஆனால் இவரோ சிறைக்கு சென்ற பிறகும் லஞ்சம் கொடுத்து வருவது வேடிக்கையாக உள்ளது.

அல்லோகலப்படுகிறது சிறை

இவருக்கு உதவிய 20 கைதிகள் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சிறையில் உயர் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பதை போல் சசிகலா வெளியே இருந்தாலும் சரி, உள்ளே இருந்தாலும் சரி அந்த இடமே அல்லோகலப்படுகிறது. இல்லையென்றால், கூவத்தூர் இத்தனை பிரபலமாகியிருக்குமா?.

ஜெயலலிதா இருந்தபோது

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா தீர்ப்பை அடுத்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் அதே பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது கூட சிறையில் எந்த வித பிரச்சினையும் இல்லை, அவர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்தார். ஆனால் சசிகலாவோ சிறையில் இருக்கும்போதும் ஊழலின் மொத்த உருவாகவே உள்ளார். கூவத்தூர் கூத்துகள் எப்படி பேசப்பட்டதோ அதேபோல் அவரது சிறை துறை விவகாரங்கள் ஒரு திரைப்படம் எடுக்கும் அளவுக்கு பேசப்பட்டு வருகிறது.

போயஸ் தோட்டம்

நல்ல வேளையில் பெங்களூர் சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். ஒருவேளை அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் சிறை சாலையையே போயஸ் தோட்டமாக மாற்றிய அவர், போயஸ் தோட்டத்தை சிறைச்சாலையாக மாற்றியிருந்தாலும் இருப்பார். ரூபா போன்ற ஒரு அதிகாரி இருந்ததாலேயே இன்று சசிகலாவின் அட்டகாசங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஆனால் தமிழகத்தில் அவர் போன்ற அதிகாரிகள் தற்போது இல்லை. இதனால் சசிகலாவுக்கு இன்னும் வசதியாக இருந்திருக்கும். சிறையில் தண்டனை கொடுப்பதே திருந்துவதற்குதான். ஆனால் அங்கும் திருந்தாமல் ஆட்டம் போட்டால் எப்படிம்மா?. இதுதான் சின்னம்மாவின் ஸ்டைலோ?

http://tamil.oneindia.com/news/india/sasikala-bengaluru-prison-bend-the-rules-according-her-289691.html

Advertisements
%d bloggers like this: