எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

ண்ணங்கள்… காலையில் கண் விழிப்பது முதல் அன்றைய நாள் முழுவதும் எத்தனை எத்தனை வண்ணங்களை நாம் பார்க்கிறோம். வானத்தில் எத்தனை வர்ணஜாலங்கள் என்று சொல்வதுபோல நம் கண்ணில்படும் நிறங்கள் பல. இந்த வண்ணங்களை எல்லாம் நாம் வெறும் அழகியலாக மட்டுமே பார்த்துப் பழகியி ருப்போம். ஆனால், நம்மைச் சுற்றியுள்ள வண்ணங்கள் நம் மனநிலை மற்றும் அன்றாடச் செயல்பாடுகளுடன் நெருங்கிய தொடர்புகொண்டவை என்பது தெரியுமா?

இன்றும் மனிதர்கள் தங்கள் எண்ணங்கள் மற்றும் ஆளுமைகளை வெளிப்படுத்தும் காரணிகளாக நிறங்களைப் பயன்படுத்துகிறார்கள். அதேநேரத்தில், அந்த நிறங்களுக்கென அடிப்படையான சில குணங்கள் உள்ளன.  வண்ணங்களுக்கு நல்ல, கெட்ட  என இரண்டுவிதமான குணாதிசயங்களையும் வளர்க்கும் பண்பு உள்ளது. குறிப்பாக, `நம்மைச் சுற்றியுள்ள வண்ணம் ஒவ்வொன்றும் மகிழ்ச்சி, கோபம், அமைதி, உற்சாகம் என மனித உணர்வுகளை உயிர்ப்பிக்கும் குணாதிசயங்களைக் கொண்டது’ என்கிறார்கள் மருத்துவர்கள். இதையே வண்ண உளவியல் ‘Color psychology’ என்கிறார்கள்.

சிவப்பு

பார்க்கிறவர்களைத் தன்பக்கம் கவர்ந்திழுக்கும் வலிமை வாய்ந்த நிறம் சிவப்பு. ஆதிக்கம், ஆற்றல் போன்றவற்றை உணர்த்துகிறது. இது காதல், பாலியல் உணர்வைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல் கோபம், அபாயம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. இதனால்தான் எச்சரிக்கை (Attention) உணர்வை ஏற்படுத்தும் போக்குவரத்து சிக்னலில் சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல, உடல்வனப்பை (Attraction) அதிகரித்துக்காட்ட நாம் உடுத்தும் உடைகள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் ‘லிப்ஸ்டிக்’ போன்றவற்றில் இந்த நிறம் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். சிவப்புநிற ஆடை உடுத்தினால், தன்னம்பிக்கை கிடைக்கும். அதேநேரத்தில் இயல்பாகவே, சிவப்பைக் கண்டாலே இதயத் துடிப்பும் சுவாசமும் அதிகரிக்கும். ரத்தத்தின் நிறம் சிவப்பு என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

கறுப்பு

பயத்தைப் பிரதிபலிக்கும் நிறம் கறுப்பு. தன்னம்பிக்கையையும் ஆற்றலையும் அதிகரிக்கும் தன்மை உடையது. கறுப்புநிற உடை அணிபவர்களுக்கு மிகுந்த வனப்பை அளித்து, உடலைச் சிக்கென (Slim) எடுத்துக்காட்டும். இதனால் ஃபேஷன் துறையில் அதிகமாக இது பிரபலமாகி உள்ளது. உணர்வுகளை வெளிக் கொண்டுவரும் பண்பும் இந்த நிறத்துக்கு உண்டு. இன்று வரை துக்க நிகழ்வுகளில் அணியும் ஆடையாகக் கறுப்பைப் பயன்படுத்திவருகிறோம்.

பச்சை

ஆரோக்கிய மனநிலையை அதிகரிக்கும் வல்லமை கொண்டது பச்சை நிறம். பொதுவாக, பசுமையான இடங்களைப் பார்க்கும்போது நமக்கு ஒருவித இனம் புரியாத மகிழ்ச்சி மனதில் எழுவதை அனுபவித்திருப்போம். மனஅழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. நம்பிக்கையை அதிகரிக்கக்கூடியது. இந்த நிறம் நோயாளிகளுக்கு உடல் விரைவில் தேறிவர மருத்துவமனைத் திரைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சள்

திடமான மனநிலையை அதிகரிக்கும் தன்மையைக் கொண்டது மஞ்சள் நிறம். பிறர் கவனத்தைத் தன் பக்கம் திருப்பும் வலிமை கொண்டது. ஏமாற்றம், கோபம் போன்றவற்றை ஏற்படுத்தும் வல்லமை இதற்கு உண்டு. இந்த நிறத்தை அதிக நேரம் பார்த்துக்கொண்டே இருந்தால், கண்களில் அழுத்தம் அல்லது அயர்ச்சியை (Eye Strain) ஏற்படுத்தும். இதனாலேயே, பெரும்பாலான அலுவலகச் சுவர்களில் இந்த வண்ணம் பூச்சுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்காது. இதற்குச் செரிமான சக்தியை அதிகரிக்கும் வலிமையும் உண்டு. குழந்தைகளுக்குக் கோபம், எரிச்சலை ஊட்டக்கூடியது. 

நீலம்

மனதுக்கு இதம் தரும் நிறம் நீலம். கடல், வானம் போன்ற நீலநிறம் கொண்டவற்றை ரசித்துப் பார்க்கும்போது, டென்ஷன், இதயத் துடிப்பு குறைந்து மன அமைதி கிடைக்கும். அதேநேரத்தில், தனிமை, சோகம் போன்ற உணர்வுகளையும் தூண்டக்கூடியது. இந்த நிறத்துக்குப் பசி உணர்வைக் கட்டுப்படுத்தும் வல்லமையும் உண்டு. ஏனெனில், இந்த நிற உணவுப் பொருள்களின் மீது யாருக்கும் பெரிதாக நாட்டம் இருக்காது. அதனால்தான்  உடல் எடை குறைக்க டயட் மேற்கொள்பவர்களுக்கு நீல நிறத் தட்டில் உணவு சாப்பிட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. நீல நிற உணவுப் பொருள்களை அரிதாகப் பார்த்திருப்போம்.

நம்பிக்கை, கவனிக்கும் ஆற்றலை வலுப்படுத்தும் வல்லமை நீலத்துக்கு உண்டு.  இதனால், பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிப்பதற்காகவும் அலுவலகத்தில் உற்பத்தி அதிகரிக்கவும் இந்த நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

வெள்ளை

மன அமைதியை அளிக்கக்கூடிய நிறம் வெள்ளை. இது சுத்தம், தூய்மை, நடுநிலைமை, அப்பழுக்கற்றது என்பதைக் குறிக்கும். வீடு, அலுவலகம், மருத்துவமனைச் சுவர்களில் வெண்மை நிறம்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

இளஞ்சிவப்பு (பிங்க்)

கருணை, கனிவு ஆகிய குணங்களை அதிகரிக்க உதவும். பெண்களுக்கு மட்டுமே மிகவும் பிடித்தமான நிறம்.


கவனம்:

பொதுவாக, இந்தவிதமான குணாதிசயங்களையே இந்த நிறங்கள் கொடுக்கின்றன. அதே நேரத்தில், இவையனைத்தும் 100 சதவிகிதம் ஒவ்வொரு மனிதருக்கும் பொருந்தும் என்பது கிடையாது. ஒருவர் வாழும் சூழல், அவர் வளர்ந்த விதம், அவர்களுக்கு நேர்ந்த அனுபவங்களின் அடிப்படையில் இவை மாறுபடலாம்.

%d bloggers like this: