Advertisements

கர்ஜனை’ கமல்! – தூண்டுகிறதா தி.மு.க?

மிழக சட்டசபை வளாகத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தல் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்த கழுகார், அங்கிருந்து நேரடியாக அலுவலகம் வந்தார். ‘‘வாக்குப்பதிவு காட்சிகளில் அரசியலுக்குப் பஞ்சமில்லை. கருணாநிதி  வாக்களிக்கவில்லை. ஜெயலலிதா இடம் காலியாக உள்ளது. மற்ற 232 பேர் வாக்களித்துவிட்டார்கள்” என்று தொடங்கினார்.
‘‘கருணாநிதி வருகை கடைசி வரையில் சஸ்பென்ஸாகவே இருந்ததே..?’’

‘‘ஆமாம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட அனைவரும் இரண்டு மணி நேரத்துக்குள் வாக்களித்து விட்டனர். மாலை ஐந்து மணி வரையில் வாக்குப்பதிவு நேரம் இருந்தும் கருணாநிதி வரவில்லை. ‘எம்.பி-க்களும் முன்கூட்டியே அனுமதி பெற்று சட்டமன்றத்தில் வாக்களிக்கலாம்’ என்று விதி இருந்தாலும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி போய்விட்டனர். பா.ம.க-வின் அன்புமணி தேர்தலைப் புறக்கணிக்க, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும் இங்கே வாக்களித்தார்.”
‘‘அதற்குச் சிறப்புக் காரணம் ஏதாவது உண்டா?”
‘‘ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பி. வேட்பாளரின் ஏஜென்ட்டாக பொன்னார் நியமிக்கப்பட்டார். அதனால்தான் அவர் இங்கு வந்தாராம். காங்கிரஸ் கட்சியின் சார்பில் விஜயதரணியும், தி.மு.க சார்பில் சக்கரபாணியும் மீராகுமாருக்கு முகவராகச் செயல்பட்டனர். ‘அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் வேட்பாளருக்குத்தான் வாக்களிப்பார்கள்’ என்று திருநாவுக்கரசர் பேட்டி தந்திருந்தார். விஜயதரணியும் பொன்.ராதாகிருஷ்ணனும் தற்செயலாகச் சந்தித்தபோது இதைப் பற்றி சிரித்துப் பேசிக் கொண்டார்கள். உடனே திருநாவுக்கரசருக்கு போன் போட்டார் விஜயதரணி. போனை வாங்கி பொன்னார் பேசினார். ‘நீங்கள் சொன்னதற்கு வாழ்த்துகள்’ என்று பொன்னார் சொல்ல… எதிர்முனையில் திருநாவுக்கரசர் சிரித்தாராம்!”
‘‘அ.தி.மு.க-வின் மூன்று அணிகளின் வாக்குகளும் சிதறாமல் பி.ஜே.பி-க்கு விழுந்ததா?”
‘‘ஆமாம். ஆனால், கூட்டணிக் கட்சிகள்தான் முரண்டு பிடித்தன. தமிமுன் அன்சாரி வெளிப்படையாகவே, ‘நான் மீரா குமாருக்கு வாக்களிக்கப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டார். தனியரசுவிடம் திருநாவுக்கரசர் பேசி, காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுகோள் வைத்துள்ளார். அ.தி.மு.க சார்பிலும் தனியரசுவிடம் தேர்தலுக்கு முன்தினம் வரை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஒருகட்டத்தில் தேர்தலையே புறக்கணிக்கும் முடிவுக்கு வந்தாராம் தனியரசு. பி.ஜே.பி வேட்பாளரை ஆதரிக்கும் மனநிலையில் அவர் இல்லை. ஆனால், தேர்தல் அன்று காலையில்  அமைச்சர்கள் தங்கமணியும், சி.வி.சண்முகமும் தனியரசுவைச் சந்தித்து சமாதானம் செய்துள்ளனா். பேரறிவாளன் விடுதலை குறித்தும், ஆயுள் தண்டனைக் கைதியாக நீண்டநாள் சிறையில் இருப்பவர்களுக்கு பரோல் வழங்குவது குறித்தும் அவர் கோரிக்கை வைத்ததாகச் சொல்கிறார்கள். ‘நாங்கள் அதற்கு ஏற்பாடு செய்கிறோம்’ என்று அமைச்சர்கள் வாக்குறுதி கொடுத்தார்களாம். அதன்பிறகே தனியரசு வாக்களிக்க வந்தார். ‘சசிகலா தரப்பைப் பகைத்துக்கொள்ள மாட்டேன்’ என்பது கருணாஸின் விளக்கம்.’’

‘‘கமல் விவகாரம் பெரிதாகி வருகிறதே?’’
‘‘ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது  ‘விஸ்வரூபம்’ படப் பிரச்னையில்  ஏற்பட்ட வடு இன்னும் கமலுக்கு ஆறாமல்தான் உள்ளது. ஜெயலலிதா இருந்தவரை கொஞ்சம் அடக்கி வாசித்த கமல்,  மனதில் இருந்த ஆதங்கத்தை இப்போது வெளிப்படுத்துகிறார் என்கிறார்கள். ஆனால், இவை அனைத்தும் தி.மு.க  தூண்டுதலில் நடப்பதாக அ.தி.மு.க நினைக்கிறதாம். அப்படித்தான் உளவுத்துறையும் அறிக்கை கொடுத்துள்ளதாம்!”
‘‘தி.மு.க-வா?”
‘‘ஆமாம்! பி.ஜே.பி-க்கு ஆதரவாக ரஜினி களம் இறங்குவதை தி.மு.க கசப்போடு பார்க்கிறது. ரஜினியை எதிர்கொள்ள சரியான ஆளைத் தேடிக்கொண்டு இருந்தது. வலிய வந்து மாட்டினார் கமல். ‘பீகாரை விட ஊழலில் தமிழகம் முந்தி விட்டது’ என்ற தொனியில் கமல் சொன்ன கருத்துக்கு எதிராக, வழக்கத்துக்கு மாறாக தமிழக அமைச்சர்கள் அனைவரும் கொந்தளித்துக் கண்டித்தது தி.மு.க-வுக்குச் சாதகமாகிவிட்டது. கமலுக்கு ஆதரவாக ஸ்டாலின் கருத்துச் சொன்னார். ‘ஊழல் அரசு என்று  பொதுமக்கள் சொல்லி வருவதையே, கமலும் வெளிப்படுத்தியுள்ளார். அவரை அமைச்சர்கள் மிரட்டுவது ஜனநாயகத்தை மீறிய செயல்’ என்ற ரீதியில் ஸ்டாலின் கருத்துக் கூறினார். இதனைக் கமல் எதிர்பார்க்கவில்லை.  உடனே ட்விட்டரில் நன்றி தெரிவித்தார். ‘அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது’ என்பது கமல் சொன்னது. மேலோட்டமாகப் பார்த்தால், ஒருவருக்கொருவர் பரஸ்பர ஆதரவு என்று தெரியலாம். ஆனால், இவை அனைத்தும் ஒருவிதமான ரகசிய பேச்சுக்களின் அடிப்படையில் நடப்பதாகத்தான் அ.தி.மு.க தரப்பு சொல்கிறது!”
‘‘என்னவாம் அது?”
‘‘தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ 75 ஆண்டுகளைத் தொடுகிறது. அதன் பவள விழாவைப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின். ஆகஸ்ட் மாதம் 11, 12, 13 தேதிகளில், சென்னையில் தொடர் விழாவாக நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். முதல் நாள் கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் கமல் கலந்து கொள்வதற்கு ஒப்புதல் தந்துள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை பத்து நாட்களுக்கு முன்பே நடந்துவிட்டது. ‘தி.மு.க-வுடன் கமல் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கிறார். கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஜூன் 3-ம் தேதி அவராகவே ஒரு வீடியோ பேசி வெளியிட்டார். இப்போது முரசொலி விழாவுக்கும் போகிறார். தொடர்ச்சியாக        அ.தி.மு.க அரசை விமர்சிக்கிறார். இவை அனைத்தும் தி.மு.க-வே இவரின் பின்னணியில் இருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள்’ என்று ஆளும் தரப்பு அடுக்குகிறது!”
‘‘ஓஹோ! அப்படிப் போகிறதா?’
‘‘இந்த விழாவுக்கு ரஜினிக்கும் அழைப்பு விடப்பட்டதாம். அவர், ‘நான் பார்வையாளராக வருகிறேன். பேசவில்லை’ என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். ‘வந்தால் போதும்’ என்று நினைக்கிறதாம் தி.மு.க.”
‘‘சினிமாக்காரர்களும் தமிழக அரசியலுக்கும் எப்போதும் சிக்கல் தான்!”

‘‘கேளிக்கை வரிப் பிரச்னையில் திரைத்துறையினர் தமிழக அரசு மீது ஏகக்கடுப்பில் இருக்கிறார்கள். திரைத்துறையினரோடு அரசுத்தரப்பில் அதிகாரிகள் நடத்திய இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளிலும் முடிவு எட்டப்படவில்லை. ‘பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே போவதற்கு  பவர்ஃபுல்லாக இருக்கும் தமிழக அமைச்சர் ஒருவர்தான் காரணம்’ என்று திரைத்துறையினர் புலம்புகின்றனர். அந்த அமைச்சர், ‘கேளிக்கை வரியை நீக்குவதால் உங்களுக்கு பிசினஸ் நன்றாகப் போகும். எங்களுக்கு என்ன பயன்? கட்சியையும் எங்களையும் கவனிக்கவேண்டிய விதத்தில் கவனித்தால், எல்லாம் முடிவுக்கு வந்துவிடும்’ என்று சொல்லிவிட்டாராம். அந்த அமைச்சர் இரட்டை இலக்க எண்ணைச் சொன்னதும், பேச்சுவார்த்தைக்குப் போன திரைப்படத் துறை குழுவினர் வாயடைத்துப் போய்விட்டனர். இந்த டீலிங் முடிவுக்கு வராமல், பேச்சுவார்த்தை முடியாது என்பதை உணர்ந்து, அதை ஒற்றை இலக்கமாக்கப் போராடிவருகிறார்கள்’’ என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,
‘‘ கடந்த சில நாட்களாகவே ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் முதல்வரின் படமோ, பெயரோ வரவில்லை. அரசு செய்திக் குறிப்பு கூட சில நாள்களாக இடம்பெறவில்லை. எப்போது வேண்டுமானாலும் தினகரன் இந்த அரசாங்கத்துக்கு முட்டுக்கட்டையைப் போடலாம் என்பதற்கான அறிகுறி இது” என்றபடி பறந்தார் கழுகார்!

Advertisements
%d bloggers like this: