Advertisements

அதிகரிக்கும் ஒல்லி மோகம் விழிப்புணர்வா? விபரீதமா?

மக்கள் இப்போதெல்லாம் எடை குறைப்பு பற்றி அதிகம் பேசுகிறார்கள்… படிக்கிறார்கள்… சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைப் பெருமையுடன் பகிர்கிறார்கள்… ஒல்லியாக இருப்பவர்களைப் பார்த்து பெருமூச்சு விடுகிறார்கள்…  இவர்களுக்கு ஏற்றவாறு புதிதுபுதிதாக டயட் முறைகளும் முளைத்து வருகின்றன.

புதிதுபுதிதாக சிகிச்சைகளையும் மருத்துவமனைகள் அறிமுகப்படுத்துகின்றன. ‘ஸ்லிம்மாக வேண்டுமா’ வகையறா விளம்பரங்கள் எல்லா இடங்களையும் ஆக்கிரமிக்கிறது,அதிகரித்துவரும் இந்த ஒல்லிமோகம் ஆரோக்கிய விழிப்புணர்வா? இல்லை அழிவுக்கான விபரீதமா? நிபுணர்களிடம் பேசுவோம்…
‘எடை குறைப்பு விஷயத்தில் எண்ணற்ற தவறான நம்பிக்கைகள் நம் மக்களிடையே இருந்து வருகிறது. குறிப்பாக, டயட் விஷயத்தில் நிறைய தவறுகள் நடக்கின்றன’ என்கிறார் உணவியல் நிபுணர் வர்ஷா.எப்படி?‘‘அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் எல்லாம் கார்போஹைட்ரேட் நிறைந்தவை. அவற்றை சாப்பிட்டால் உடல் எடைகூடும் என்ற தவறான எண்ணம் மக்களின் மனதில் முதலில் விதைக்கப்பட்டு விடுகிறது. ஆனால், இது பெரிய தவறு. உணவில் பாதியளவு முழுதானியங்களைச் சேர்த்துக் கொள்வதுதான் சரியான உணவு முறை.
இதேபோல, ‘எதை வேண்டுமானாலும்; எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்… ஆனால் எங்கள் மருந்தை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்’ என்ற பாணியில் வரும் விளம்பரங்கள் எல்லாமே மோசடியானவை. ஒரு மருந்தினால் எடையைக் குறைக்க முடியும் என்பது உண்மையே இல்லை.
இந்த பிரச்னைக்கு சரியான வழி, முறையான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவதுதான். காலை உணவைத் தவிர்த்தால் எடையைக் குறைக்கலாம் என்ற தவறான எண்ணம் இருக்கிறது. உண்மையில் காலை உணவை தவிர்த்துவிட்டு நேரடியாக மதிய உணவை எடுத்துக் கொள்ளும்போது, அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடலாம். காலை உணவை தவிர்ப்பவர்கள்தான் அதிக அளவு உடல்பருமன் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள் என்று ஓர் ஆய்வு சொல்கிறது.
அதேபோல பால் பொருட்கள் கொழுப்பு சத்து மிக்கவை. அவை உடல் எடையை அதிகரிக்கும் என்பதும் தவறான எண்ணம். வலிமையான தசைகள் மற்றும் உள் உறுப்புகள் இயக்கத்துக்கு பால் பொருட்களில் உள்ள புரதம் அவசியம். மேலும், பாலில் உள்ள வைட்டமின் D மற்றும் கால்சியம் சத்து எலும்புகளுக்கு வலிமை கொடுப்பவை.
சைவ உணவு சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பதும் தவறான நம்பிக்கைதான். உண்பது அசைவமா? சைவமா? என்பதெல்லாம் பிரச்னை இல்லை. அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதில்தான் பிரச்னை இருக்கிறது. உணவு சத்தானதாக இருக்க வேண்டும் என்பதைப் போலவே, அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்பதும் முக்கியம்.
மூன்று வேளைகளுக்கு பதில், ஒரு நாள் உணவை 6 சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு உண்ணலாம். சாப்பிடும் தட்டில் பாதியளவு காய்கறிகளும், பழங்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சரிவிகித உணவைப் பின்பற்றினாலே போதும். வேறு எந்த டயட்டையும் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை’’ என்கிறார்.
ஒல்லியாக வேண்டும் என்று விரும்பும் மனநிலைக்கான காரணம், அதனால் ஏற்படும் சிக்கல்கள் பற்றி மனநல மருத்துவர் சித்ரா அரவிந்த்திடம் பேசினோம்…‘‘பொதுவாக, ஆண்களைவிட பெண்கள்தான் உடல்பருமன் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள். முன்பெல்லாம் டீன்-ஏஜ் பருவத்தினரும், கல்லூரி செல்கிற பெண்களும்தான் இத்தகைய மனப்போக்கில் இருந்தார்கள்.
ஆனால், இப்போது நடுத்தர வயது பெண்களையும் இந்த கவலை ஆட்டிப் படைக்கிறது. முக்கியமாக, ஒல்லியான பெண்களைப் பார்க்கும்போது துக்கம், மகிழ்ச்சியின்மை போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய மூளையின் பாகம் அதிவேகமாக செயல்படுகிறது. இதுபோல் குண்டாக இருக்கிறோமோ என்ற கற்பனையே, பெரும்பாலான பெண்களுக்கு தங்களது உடல்வாகு குறித்த அச்சத்தை அதிகம் ஏற்படுத்திவிடுகிறது.
டயட், உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட இணையதளங்களின் பங்கும் அதிகமாகிவிட்டது. அவற்றைப்பார்த்து முறையற்ற உணவுமுறைகளை தாங்களாகவே பின்பற்றியும் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்’’ என்றவரிடம் உணவுப்பழக்கம் ஏற்படுத்தும் குழப்பம் பற்றிக் கேட்டோம்…
‘‘உணவால் எடை அதிகரிக்கிறது என்ற எண்ணம் ஒருவருக்கு மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு தீவிரமாக இருந்தால் அவர்கள் Eating disorder பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். இந்த உண்ணுதல் குறைபாட்டில் இரண்டு வகைகள் உண்டு.
அனோரெக்ஸியா நெர்வோசா (Anorexia nervosa) வகையினருக்கு பசி இயல்பாக இருக்கும். ஆனாலும், எடை கூடிவிடுமோ என்ற பயத்தால் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள்; பட்டினி கிடப்பார்கள். மற்றவர்களோடு தங்கள் எடையை ஒப்பிட்டுக்கொண்டே இருப்பதுடன், அடிக்கடி கண்ணாடியிலும் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள்.
எப்போதும் பரபரப்போடு காணப்படும் இவர்கள், அதிகமான உடற்பயிற்சிகளையும் செய்வார்கள். இதனால் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் ரத்தசோகை உள்ளிட்ட பிரச்னைகளிலும் சிக்கிக் கொள்வார்கள். புலிமியா நெர்வோசா(Bulimia nervosa) என்ற இரண்டாவது வகையினர் இதிலிருந்து சற்று வேறுபடுவார்கள்.
இவர்கள், `உடல் எடை அதிகரிக்கும்’ சாப்பிடாமலேயே இருப்பார்கள். பிறகு, திடீரென்று ஒருநாள் ‘சாப்பிடாமல் உடலைக் கெடுக்கிறோமே’ என்ற கவலை வந்து அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவார்கள். சாப்பிட்டதை வாந்தி எடுத்துவிட்டால் எடை ஏறாது’ என்ற தவறான புரிதலால் சாப்பிட்டவற்றை வலுக்கட்டாயமாக வாந்தி எடுக்க முயல்வார்கள்.  மலமிளக்கிகள் எடுத்துக்கொண்டு குடலை காலி செய்வார்கள். கடுமையான உடற்பயிற்சி செய்து, சாப்பிட்ட உணவின் சக்தியைச் செலவழிப்பார்கள்.
இவர்கள் மனதில் சாப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், செயல்படுத்த முடியாது. வாந்தி எடுக்க மாத்திரைகள் உட்கொள்வதால் பற்கள் கெட்டுப்போவது, உணவுக்குழாயில் பாதிப்பு, நரம்புத்தளர்ச்சி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இந்த இரண்டு வகையிலும் இல்லாத மற்றோர் வித்தியாசமான குணநலன்கள் கொண்டவர்களும் உண்டு. அது… அதிகப்படியான உணவு உட்கொள்ளும் பாதிப்பு(Binge Eating Disorder).பருமனாக இருக்கும் சிலர், உடல் எடையைக் குறைக்க எண்ணி ஒவ்வோர் மாதமும் குறிப்பிட்ட சில நாட்கள் வரை கடுமையான டயட்டைக் கடைப்பிடித்து, ஒரு நாளைக்குத் தேவையான கலோரி அளவைவிட குறைவாக சாப்பிடுவார்கள்.
ஆனால், ஏதேனும் மனதுக்குப் பிடித்த உணவாக இருந்தால் அளவுக்கதிகமாக சாப்பிட்டுவிடுவார்கள். இதனால் உடல் எடை குறையவில்லையே என்ற மனக்கவலையில் இருக்கும் இவர்களால் எந்த வேலையிலும் முறையாக கவனம் செலுத்த முடியாது’’ என்றவரிடம் இதற்கு என்னதான் தீர்வு என்று கேட்டோம்…
‘‘உண்ணுதல் கோளாறு உள்ள இவர்களைப் போன்றவர்களுக்கு மருந்து, மாத்திரைகளைவிட மனநல சிகிச்சையே முக்கியம். Cognitive behaviour therapy மூலமாக கவுன்சலிங் கொடுத்து இவர்களின் உணவுப்பழக்கத்தை நெறிப்படுத்துவது மட்டுமே இதற்கான சிறந்த தீர்வு. அவர்களின் தோற்றம் பற்றிய தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
இதற்கு, குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் முக்கியம். எண்ணங்களை மாற்றினால் அனைத்தும் மாறும் என்பதைப் பக்குவமாகப் பேசிப் புரிய வைக்க வேண்டும்முக்கியமாக ஒல்லியாக இருப்பதுதான் ஸ்டைல், அழகு, மாடர்ன் என்பதைப் போன்ற அசட்டு எண்ணங்களில் இருந்து வெளியேற வேண்டும். குண்டாக இருக்கிறோமா ஒல்லியாக இருக்கிறோமா என்பது பிரச்னை அல்ல, ஆரோக்கியமாக இருக்கிறோமா என்பதே முக்கியம் என்பதும் புரிய வேண்டும்” என்கிறார்.

Advertisements
%d bloggers like this: