Advertisements

சென்னைக்கு விரையும் வினய்குமார் விசாரணை வளையத்தில் சசிகலா உறவினர்கள்

பெங்களூரூ : சசிகலா சிறையில் சொகுசாக இருப்பதாக வெளியான விவகாரத்தில் அவரது உறவினர்கள் மற்றும் கூட்டணியைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவிடமும் விசாரணைக்குழு விசாரிக்க திட்டமிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும்  பெங்களூருவிலுள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைத் துறையில் புதிய 

டிஐஜியாக பதவியேற்ற ரூபா சிறைக்குள் திடீர் சோதனை செய்தார். சிறையில் விவிஐபி கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கி வருவதாக உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினார். மேலும் அந்த அறிக்கையில் கைதிகளுக்கு  சிறப்புச் சலுகைகளைப் பெறுவதற்காக, டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ‌ சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் கூறியிருந்தார்.
இந்தநிலையில் தண்டனை கைதியான சசிகலா வண்ண உடைகளில் சிறை வளாகத்தில் சுற்றி வருவதும்,  முத்திரைத்தாள் மோசடி வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் அப்துல் கரீம் தெல்கி சிறையில் சொகுசு அறையில் தூங்குவது போலவும் வீடியோ காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறை முறைகேடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழுவை கர்நாடக முதல்வர் சித்தராமையா அமைத்தார். வினய்குமார் தலைமையிலான உயர் மட்ட விசாரணை குழு, முதல் கட்ட விசாரணையை ஆரம்பித்தது. ரூபா அரசுக்கு எழுதிய கடிதங்கள், டிஜிபி சத்திய நாராயணராவ் எழுதிய கடிதம் தவிர செய்திகளில் வெளியான பல்வேறு தகவல்களை வாங்கிக் கொண்டு நேற்று காலையில் வினய் குமார் மற்றும் அவரது குழுவில் இடம் பெற்ற 3 அதிகாரிகள் கொண்ட குழு பரப்பன அக்ரஹார சிறைக்குள் சென்று விசாரணை நடத்தினர். 3 மணி நேரத்திற்கும் அதிகமாக நடந்த விசாரணையில் சசிகலா, தெல்கி  குறித்து வெளியான வீடியோக்கள், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் சிறையிலுள்ள பதிவேட்டில் முறைகேடுகளில் ஈடுபட்ட நபர்களின் பெயர்களையும் ஆய்வு செய்தனர்.
அடுத்ததாக சிறைக் குறிப்புகளில் உள்ள பல்வேறு ஆவணங்களையும் ஆய்வு செய்தவர்கள், சிறையிலுள்ள பல்வேறு கைதிகளிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று முதல் உயர் மட்ட குழுவின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த உயர் மட்ட குழுவில் 25 நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் குற்றவியல் துறையை சேர்ந்த அதிகாரிகள், சிறை அதிகாரிகள் சிலர், நார்கோடிக் பிரிவை சேர்ந்த அதிகாரிகள், மனோதத்துவ நிபுணர் குழு, என பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக வேலை செய்த 4 பெண்கள் உள்பட 25 நபர்களை தேர்வு செய்துள்ளனர். இந்த நிலையில் விசாரணை குழுவினை சேர்ந்த அதிகாரிகள் மிக விரைவில் சென்னைக்கு வருகை தர இருக்கிறார்கள். சென்னையில் பல்வேறு நபர்களிடம் இது குறித்து விசாரிக்க தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் விசாரணை குழு சசிகலாவிற்கு ரூ. 2 கோடி பணம் எங்கிருந்து சென்றது, யார் பணத்தை கொண்டு சென்றது, பணம் எந்த வங்கியில் எடுக்கப்பட்டது, யாரின் கணக்கில் வங்கிப் பணத்தை செலுத்தினார்கள், எவ்வளவு பணம் , எங்கு வைத்து கொடுக்கப்பட்டது , மேலும் இந்த பண டீலிங்கில் யார் யாரிடமிருந்து பணம் சென்றது என்பது குறித்து விசாரிக்க வினய் குமார் தலைமையிலான 5 அதிகாரிகள் மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த டீமில் குற்றவியல் சிறப்பு நிபுணர், ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவர்  என நான்கு அதிகாரிகள் மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதுவரை நடத்திய விசாரணையில் பணம் சென்னையிலுள்ள தனியார் வங்கி ஒன்றிலிருந்து ஒரு தொகையை எடுத்துக் கொண்ட நபர் ஒருவர் அதை பெங்களூரில் சிரிப்பு நடிகரின் பெயர் கொண்டவரிடம் பணத்தை கொடுத்துள்ளார். அவர் அந்தப் பணத்தை பெங்களூருவில் வைத்து பல்வேறு அதிகாரிகளுக்கு கொடுத்துள்ள விபரங்களை திரட்டியுள்ளனர். இதற்கான  ஆதாரங்களை கைப்பற்றவும் மேலும் சென்னையில் பல்வேறு விசாரணைகளை மேற்கொள்ள மிக விரைவில் சென்னைக்கு விரைந்து வர வினய்குமார் தயாராகி வருகிறார். மேலும்சிறையில் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க மஞ்சள், மற்றும் பிங்க் கலர் நிறத்திலான துண்டு சீட்டில்  சசிகலா  ரகசிய குறியீடுகளை குறித்து கொடுத்து அதை வெளியில் கொடுத்தால் சிரிப்பு நடிகர் மூலம் பணம் கொடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. ஒரு மாதம் கழித்து இந்த முறை மாறினாலும் ஆரம்ப கால கட்டத்தில் யாரையும் நம்பாமல் துண்டு சீட்டுகளை மட்டுமே நம்பி பணம் பரிமாற்றம் நடத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதன் பிறகு வழக்கமாக லஞ்சம் வாங்கிய அதிகாரிகளே சசிகலா, இளவரசிக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்து வந்துள்ளனர். மேலும் புதிய நபர் எவராவது இவர்களுக்கு உதவ முன் வந்தால் அவர்களைப் பற்றியமுழு விபரங்களையும் சிறை அதிகாரிகள் மூலம் தெரிந்து கொண்டே பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. மேலும் எங்கு வைத்து பணம் கொடுக்கப்பட்டது,யார் மூலம் பணம் கொடுக்கப்பட்டது. எவ்வளவு தொகை கொடுக்கப் பட்டது, ஆகிய விபரங்களையும் திரட்டி வருகின்றனர். மேலும் சிறைக்குள் இருந்த சசிகலா செல்போனில் யார் யாரிடம் பேசினார் என்கிற முழு விபரத்தையும் சிடிஆர் நகல் எடுத்து வைத்துள்ளனர். இந்தப் பட்டியலில் அதிகம் பேசிய பல்வேறு முக்கியமான நபர்களிடம் விசாரணை செய்ய வினய் குமார் திட்டமிட்டுள்ளார். இதனால் மிக விரைவில் சிரிப்பு நடிகரின் பெயர் கொண்டவர் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படுவார் எனத்தெரிகிறது. மேலும் சசிகலாவை அடிக்கடி சந்தித்த தினகரன், திவாகரன், வெங்கடேஷ் உள்ளிட்ட சசிகலாவின் குடும்ப உறுப்பினர்களையும் விசாரிக்க வினய் குமாரின் குழு தயாராகி வருகிறது.
மேலும் இரண்டு முறை பெங்களூர் ஹோட்டலில் நடிகைகளை வைத்து மது பார்ட்டி கொடுத்ததாக தமிழக கூட்டணிக் கட்சி எம்எல்ஏவை விசாரணை வளையத்தில் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று பன்னீர் செல்வத்தின் ஆதரவு அணியில் இருக்கும் பெங்களூர் அதிமுக பொறுப்பாளர் அன்புக் குமார் சசிகலாவிற்கு சிறையிக்குள் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு பணம் வழங்கியது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்தது பெங்களூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர்தான் என்றும், அவரை விசாரணை செய்தால் அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என வெளிப்படையாக பேட்டி கொடுத்தது சிக்கலை உண்டாக்கி இருக்கிறது.

Advertisements
%d bloggers like this: