Advertisements

மது… மீள என்னதான் வழி?

னிதகுல வளர்ச்சிக்கும் மனித சமுதாயத்துக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் எதிராக உலகளவில் எழுந்திருக்கும் மிக முக்கியப் பிரச்னை, போதைக்கு அடிமையாவதே. இது சம்பந்தப்பட்ட தனிநபரைப் பாதிப்பதோடு, சமூகத்துக்கும் பெரும் கேடாக அமைந்துவிடுகிறது. அதோடு, ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே புரட்டிப்போடும் வலிமை போதைப்பழக்கத்துக்கு உண்டு. இதைத்தான், `ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பது தீவிரவாதம் மட்டுமல்ல, அந்நாட்டு மக்களின் போதைப்பழக்கமும்தான்’ என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

`இன்றைக்கு எல்லோருக்கும் எளிமையாகவும் பரவலாகவும் கிடைக்கும் போதைப் பொருள் ஆல்கஹால் கலந்த மதுபான வகைகள். இதன் காரணமாகவே, மற்ற போதைப் பொருள்களைவிட இதன் பயன்பாடு அதிகரித்துவருகிறது. எனவே, போதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு விழிப்பு உணர்வைத் தந்து, மறுவாழ்வு அளிக்க வேண்டும்’ என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். ஆகவே, குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு, `குடிப்பழக்கம் ஒரு கெட்டபழக்கம் மட்டுமல்ல, அது ஒரு வகை நோய் என்பதை உணரவைக்க வேண்டும்’ என்கிறார் மனோநல ஆலோசகர் ரேஷ்மா மாலிக். அத்துடன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், அதிலிருந்து மீள்வது எப்படி என்பது குறித்தும் விளக்குகிறார்.

குடிநோய்

அறியாமை, விரக்தி, பொழுதுபோக்கு, தற்காலிக உற்சாகம் போன்ற ஏதாவது ஒரு காரணத்துக்காகவே குடிப்பழக்கத்தை ஆரம்பிக்கிறார்கள். அதுவே நாளடைவில் `குடி நோய்’ எனப்படும் போதைக்கு அடிமையாகும் நிலை வரைக்கும் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. இதிலிருந்து மீள முதல் படி, போதைப் பழக்கம் குறித்த தவறான நம்பிக்கைகளைக் களைவதே!

மது அறிவோம்!

மதுபானங்கள் எல்லாவற்றிலும் ஒரே வகையான போதைப் பொருள்தான் உள்ளது. அளவுகள் (சதவிகிதம்) மட்டுமே வேறுபடுகின்றன.

மதுபானத்தில் எந்தவிதமான சத்துப் பொருளும் இல்லை; உடல் வலிமையை அது உயர்த்துவதும் இல்லை.

குடிப்பதால் மனக்கவலை, ஏமாற்றம், வருத்தம் போன்ற உணர்ச்சிகள் ஒருபோதும் மறைவதில்லை. குடிப்பது எந்தப் பிரச்னைக்கும் தீர்வாக அமையாது. மாறாக, உடல், மனநலப் பிரச்னைகள் உருவாகவே வழிவகுக்கும்.

குடிப்பதால் உடல் அசதி குறையாது; தீராது. அது, ஆழ்ந்த தூக்கத்தைத் தருவதும் இல்லை. மது நம்முடைய அழகையோ, மூளைத்திறனையோ, பேச்சுத் திறமையையோ அதிகரிக்காது. சுருக் கமாக, குடிப்பதால் போதை ஏற்படுமே தவிர நன்மை என்று ஒன்றுகூடக் கிடைக்காது.

பாதிப்புகள்

மூளை: குடித்தவுடன் மது மூளைக்குச் சென்று, அது செயல்படும் திறனை உடனடியாகக் குறைத்துவிடும். மேலும் மனச்சோர்வு, பயம், படபடப்பு, மனக்குழப்பம், பிரமை போன்ற மனநிலை பாதிப்புகளையும், சிந்தனை மற்றும் செயல்படும் திறனில் பாதிப்பையும், மூளையில் நிரந்தரப் பாதிப்பையும் ஏற்படுத்திவிடும்.

இதயம்: இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக்குழாய்களில் பாதிப்பு, இதயத் தசைகள் பழுதடைதல் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

வயிற்றுப் பிரச்னைகள்
: வயிற்றுப்புண் மற்றும் அல்சர், செரிமானப் பிரச்னை, கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை, புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

பிற பிரச்னைகள்: நியூரிட்டிஸ் (Neuritis) – (உடல் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி, உணர்ச் சியின்மை), பான்கிரியாடிட்டிஸ் (Pancreatities) – (கணையத்தில் ஏற்படும் வீக்கம் அல்லது கணையம் பழுதடைவது) போன்ற நோய்கள் ஏற்படும். இது தவிர, தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், உடலுறவுப் பிரச்னைகள், ஊட்டச்சத்து குறைவதால் ஏற்படும் பாதிப்புகள், தசைகள் வலுவிழத்தல் போன்ற பலவகையான பிரச்னைகள் ஏற்படும்.

குடிக்கு அடிமையாதல் ஒரு நோய்…

குடிப்பவர்களில் 10 முதல் 20 சதவிகிதம் பேர் மதுவுக்கு அடிமையாகிறார்கள். இதனால், குடிநோய் என்கிற இறுதிக்கட்டம் குடிப்பவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

குடிநோயாளி உடலளவிலும் மனதளவிலும் மதுவுக்கு அடிமையாகிவிடுவார். அதனால், வாழ்க்கையில் பலவிதமான பிரச்னைகள் ஏற்பட்டும் குடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து குடித்துக்கொண்டே இருப்பார். ஏனெனில், குடியை நிறுத்தும்போது கைநடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு ஏற்படும்.

நோயின் நிலையை அறிவது எப்படி?

குடிப்பழக்கத்துக்கு ஒருவர் அடிமையா, இல்லையா என்பதை நிர்ணயிக்கச் சில வரையறைகள் உள்ளன. இதைத் தனிப்பட்ட நபரின் எண்ணம் மற்றும் அவரது நடவடிக்கையைப் பொறுத்து மூன்று நிலைகளாக வகைப்படுத்தலாம்.

முதல் நிலை

மதுவின் தேவை அதிகரித்தல் – முன்பைவிட அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை.

மறதி நிலை – குடித்த பிறகு நடந்த சம்பவங்களை நினைவுகூர முடியாமல் போகும்.

மதுவைப் பற்றிய சிந்தனை – எங்கே எப்படிக் குடிக்கலாம் என்பதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது.

இடைப்பட்ட நிலை

குடிப்பதைக் கட்டுப்படுத்த முடியாமை – குடிக்கும் அளவைக் குறைக்க முடியாத நிலை, குடிக்கும் நேரத்தையும் சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இயலாமை.

குடிப்பதற்கான காரணங்கள் கூறுவது – குடும்பத்தினரையும் வேலையையும் வாழ்க்கைச் சூழலையும் காரணம் காட்டிக் குடிப்பது.

தற்காலிகமாகக் குடியை நிறுத்துவது – பிரச்னைகள் அல்லது வற்புறுத்தலின்பேரில் குடியைச் சிறிது காலம் நிறுத்திவிட்டு, மறுபடியும் அதிகமாகக் குடிப்பது.

குண மாற்றங்கள் – கோபம், சண்டை, பேச்சுக் குழறல் ஏற்படுவது.

தீவிரமான இறுதி நிலை

விட்டு விட்டுக் குடித்தல் – தொடர்ந்து அதிகமாகக் குடிப்பது, சில நாள்கள் நிறுத்திவிட்டு, பின்னர் மீண்டும் அதிகமாகக் குடிப்பது.

ஒழுக்கம் தவறுதல் – குடிப்பதற்காகக் கடன் வாங்குதல், பொய் பேசுதல், திருடுதல்.

வீண் சந்தேகம், மனப் பிரமைகள் – காரணமின்றி மனைவியின் நடத்தையையோ நெருங்கியவர்களின் செயல்பாட்டையோ சந்தேகிப்பது.

உடல் பிரச்னைகள் அதிகரித்தல் – குடித்தால்தான் கொஞ்சமாவது செயல்பட முடியும் என்ற நிலை.

இவற்றில் எந்தக் கட்டத்திலும் ஒருவரால் குடிநோயைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கு, குடிப்பதை முழுமையாக நிறுத்துவதுதான் ஒரேவழி.

என்ன செய்ய வேண்டும்?

ஒரு குடிநோயாளியால் குடிக்கும் அளவைக் குறைக்கவோ, இடைவெளியை அதிகரிக்கவோ முடியாது. முழுவதும் குடிக்காமலிருப்பதுதான் இந்த நோயிலிருந்து விடுபட ஒரே வழி.

ஒருவர் குடிக்கக் காரணம் அவர்தான். மனைவியோ, பெற்றோரோ, நண்பர்களோ அல்ல என்பதை அவராகவே உணர வேண்டும்.

வாழ்க்கையில் எந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டுமானாலும், முதலில் குடிப்பதை நிறுத்த வேண்டும்.

அன்பு, அரவணைப்பு, மிரட்டல் அல்லது கண்டிப்பின் மூலம் குடியை நிறுத்த முடியாது. குறிப்பாக, குடிநோயாளியை வெறுத்து ஒதுக்க வேண்டாம். குடியை நிறுத்த ஆதரவும் உதவியும் தரப்பட வேண்டும்.

குடிநோயிலிருந்து மீண்டு வர மருத்துவம் மற்றும் மனோதத்துவரீதியான சிகிச்சை அவசியம். எனவே, தகுந்த மருத்துவ ஆலோசனையின்படி, குடிநோயாளியை முழுமையாகக் குடியிலிருந்து மீட்க வேண்டும்.
இதன் மூலம் அவருக்கு நிறைவான, மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.


குடிநோய்க்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள ஒருவரைச் சம்மதிக்க வைப்பது எப்படி?

*
குடிநோயாளி குடித்திருக்கும்போது (போதையில் இருக்கும்போது) அவரிடம்  பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

குடிநோயாளி அண்மைக் காலமாக அதிகமாகக் குடிப்பதையும், அதனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும், குடும்பத்தினர் மனநிலை யையும் தெளிவாகக் கூறி, பிரச்னையிலிருந்து மீண்டுவர அவரை ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். அவரை அவமதிப்பதோ குற்றவாளிபோல் நடத்துவதோ கூடாது.

Advertisements
%d bloggers like this: