Advertisements

வடக்கு உனக்கு…தெற்கு எனக்கு..!’ – கூறுபோடும் சசிகலா குடும்பத்தினர்

தமிழகத்தில் உள்ள மாவட்டவாரியான கட்சிப் பொறுப்புகளை சசிகலா குடும்பத்தினரில் இரண்டு அதிகார மையங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக இறுதி முடிவெடுக்க, சசிகலாவைச் சந்திக்க டி.டி.வி.தினகரன் பெங்களூரு சென்றதாகச் சொல்லப்படுகிறது.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் தினமும் ஒரு பரபரப்புச் சம்பவங்கள் நடந்தவண்ணம் உள்ளது. சசிகலாவுக்கு, சிறையில் விதிமுறைகளை மீறி சலுகைகளை வழங்கப்பட்டதாக ஐபிஎஸ் அதிகாரி, ரூபா பகிரங்கமாகத் தெரிவித்தார். இதன்பிறகு சிறைத்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சசிகலா உள்ளிட்ட விவிஐபி-களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் பறிக்கப்பட்டதாக, சிறைத்துறை உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சூழ்நிலையில், சசிகலாவைச் சந்திக்க சென்னையிலிருந்து டி.டி.வி.தினகரன் நேற்று பெங்களூருக்குச் சென்றார். அங்கு, சசிகலாவைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் டி.டி.வி.தினகரன், ஏமாற்றத்துடன் திரும்பினார்.

டி.டி.வி.தினகரன் எதற்காக சசிகலாவைச் சந்திக்கச் சென்றார் என்று விசாரித்தோம். இதுகுறித்து நம்மிடம் பேசிய டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் ஒருவர், “இரட்டை இலைச் சின்னம் வழக்கில், டெல்லி போலீஸார்  டி.டி.வி.தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், அவர் பழைய டி.டி.வி.தினகரனாக மாறியிருக்கிறார். கட்சிப் பணிகளில் விரைவில் ஈடுபட உள்ளார். இதற்கான ஆரம்பகட்ட பணிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் டி.டி.வி.தினகரன் தெரிவித்தப்படி எங்கள் ஆதரவு எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர். பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்றுள்ளார். அடுத்து, அ.தி.மு.க-வின் கோஷ்டி பூசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கருதுகிறோம். அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அப்போது, உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்னையை முடித்துவிட்டு வாருங்கள் என்று பா.ஜ.க. தரப்பிலிருந்து எங்களுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டது. உடனே, அதுதொடர்பாக கடந்த முறை சசிகலாவைச் சந்தித்தபோது கலந்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, அவரும் சமூகத் தீர்வை எடுக்க சம்மதித்தார். இதையடுத்து, மன்னார்குடி குடும்ப உறவுகள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி குடும்பத்தில் அதிகார மையமாக கட்சியினரால் கருதப்படும் திவாகரன், டி.டி.வி.தினகரன் இருவரிடமும் மன்னார்குடி குடும்ப உறவுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உறவு ஏற்பட்டது. அதில் 12 மாவட்டங்களின் கட்சிப் பொறுப்புகள் திவாகரனுக்கும், மீதமுள்ள 20 மாவட்டங்களின் பொறுப்புகள் டி.டி.வி.தினகரனுக்கும் கொடுக்கலாம் என்று முடிவுசெய்யப்பட்டது. இதையடுத்து, தெற்கு மாவட்டங்களின் கட்டுப்பாட்டை திவாகரனின் கையிலும் மற்ற மாவட்டங்களின் கட்டுப்பாட்டை தினகரனிடமும் கொடுக்கலாம் என்ற முடிவுக்கு மன்னார்குடி குடும்ப உறவுகள் கிரீன் சிக்னல் காட்டியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையில், திவாகரனின் மகன் ஜெயானந்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதற்குத் தினகரனும் சம்மதித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகுறித்து இறுதி முடிவு எடுக்கவே, சசிகலாவை சந்திக்க டி.டி.வி.தினகரன் பெங்களூருக்குச் சென்றார். ஆனால், சிறைக் கைதிகளை மாலை 4 மணிக்குள் சந்திக்க வேண்டும் என்பது விதி. ஆனால், முன்பெல்லாம் நாங்கள் தாமதமாகச் சென்றாலும் சந்திக்க அனுமதி கிடைத்துவிடும். தற்போதுள்ள கெடுபிடிகளால் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அங்கிருந்து திரும்பி விட்டோம். சசிகலாவைச் சந்தித்த பிறகு மன்னார்குடி குடும்ப உறவில் ஏற்பட்டசமரசம் குறித்த தகவல் வெளியாகும். இதன் பிறகு பிரிந்துகிடக்கும் அ.தி.மு.க. அணிகள் ஒன்று சேரும்” என்றார்.

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாம். இதுகுறித்து விசாரித்தபோது, எம்எல்ஏ-க்களின் கோரிக்கைகளை டி.டி.வி.தினகரனால் நிறைவேற்ற முடியவில்லையாம். இதனால் எம்எல்ஏ-க்கள் டி.டி.வி.தினகரனைச் சந்திப்பதைத் தவிர்த்து வருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால்தான், சசிகலா சிறைச்சலுகை விவகாரம், குடியரசுத் தலைவர் தேர்தல் சம்பந்தமாக நடந்த ஆலோசனையின்போது சொற்ப எண்ணிக்கையிலேயே டி.டி.வி.தினகரனை அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் சந்தித்தனர். தற்போதுள்ள சூழ்நிலையில், அ.தி.மு.க-வில் எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் யாரிடமும் இல்லை. இதனால், கட்சியில் ஒவ்வொருவரும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துவருகின்றனர். இதனால், கட்சி விதிமுறைகளை மீறும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் கட்சி உள்ளது என்று சொல்லத் தொடங்கியுள்ளனர் எம்.ஜி.ஆரின் உண்மை விசுவாசிகள்.

Advertisements
%d bloggers like this: