Advertisements

‘எட்டுமுக’ எடப்பாடி!

வர் ஆபத்தான புலியா… காமெடி புலிகேசியா?’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கேரக்டரைப் புரிந்துகொள்ள முடியாமல் கிறுகிறுத்துப் போயிருக்கின்றன அ.தி.மு.க-வின் அத்தனை கோஷ்டிகளும். அமைதியாகத் தோற்றம் காட்டும் எடப்பாடி, அத்தனை பேரையும் அசால்ட்டாக டீல் பண்ணுகிறார். ‘மனதில் என்ன நினைக்கிறார்’ என்பதை உணர்ந்துகொள்ளவே முடியாதபடி

முகபாவத்தை வைத்திருக்கும் அவர், ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு மாதிரி முகத்தைக் காட்டுகிறார். ஆதரவாளர்கள் மட்டுமில்லை… எதிர்ப்பவர்களும்கூட ‘இவரை நம்பி எதைச் செய்வது’ என்று தெரியாமல் தவிக்கிறார்கள். ஆளும்கட்சியின் உயர்மட்ட வட்டாரங்களில், எடப்பாடியின் ‘எட்டுமுக’ வெளிப்பாடுகளாக பேசப்படும் சில சம்பவங்கள் இங்கே…

கடந்த புதன்கிழமை சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவந்த எடப்பாடி, ‘‘அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் இணையும்’’ என்று பேட்டி கொடுத்தார். அருகில் இருந்த சீனியர் அமைச்சர் ஒருவருக்கு மயக்கம் வராத குறை. இணைப்புப் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பை அவரிடம்தான் எடப்பாடி கொடுத்திருந்தார். ‘‘அவங்களுக்கு என்ன வேணும்னு கேளுங்கண்ணே… எதையும் குறை வைக்காம செய்துடலாம்’’ என்று வாக்குக் கொடுத்துப் பேசச் சொன்னாராம். அவரும் பல நாள்கள் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி,    ஓ.பி.எஸ் தரப்பில் இரண்டு எம்.எல்.ஏ-க்களின் மனதைக் கரைத்துவிட்டார். அதில் ஒருவர், ‘‘ஏற்கெனவே வகித்த துறைகூட வேண்டாம். ஏதாவது ஒரு அமைச்சரிடம் கூடுதல் பொறுப்பாக இருப்பதையாவது பிரித்துக் கொடுங்கள்’’ என்று கேட்டாராம். எடப்பாடியிடம் இந்த விஷயம் வந்தபோது, ‘‘சட்டசபை நம்பிக்கை தீர்மானத்துல நமக்கு ஆதரவா 122 பேர் ஓட்டு போட்டிருக்காங்க. எனக்கு அந்த எம்.எல்.ஏ-க்களுக்கு அப்புறம்தான் இவங்க எல்லாம். இணைப்பே தேவையில்லை. விட்டுடுங்க’’ என்று சொல்லிவிட்டாராம். அதே வாய் திரும்பவும் ‘‘இணையும்’’ என்று பேட்டி கொடுத்தால், மயக்கம் வராதா?
ஆரம்பத்தில் சசிகலா குடும்பத்தின் பல தரப்பிலிருந்தும் பரிந்துரைகள் வரிசைகட்டி வந்துகொண்டிருந்தன. எல்லாவற்றையும் எடப்பாடி பொறுப்பாக டி.டி.வி.தினகரனிடம் சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார். ‘‘யார் சொல்வதையும் கேட்க வேண்டாம். யார் என்ன சொன்னாலும், என்னிடம் கேட்டுக்கொள்ளச் சொல்லுங்கள்’’ என்று தினகரன் உத்தரவு போட்டார். அதன்பின் சசிகலா குடும்பத்தில் யார் என்ன கேட்டாலும், ‘‘நானா எதையும் செய்யக்கூடாதுன்னு டி.டி.வி அண்ணன் உத்தரவு இருக்குங்களே. நான் என்னங்க செய்ய முடியும்?’’ என்று எடப்பாடியிடம் இருந்து பதில் வருமாம். ஒருகட்டத்தில் எல்லோரும் அலுத்துப் போய், எதையும் கேட்பதையே நிறுத்திவிட்டனர். இரட்டை இலைச் சின்ன வழக்கில் சிறைக்குப் போய்விட்டு திரும்பி வந்த தினகரன் போன் செய்தபோது, ஒரு கட்டத்தில் எடப்பாடி எடுக்கவே இல்லை. கடுப்பான தினகரன் நேராக ஒரு தூதரை அனுப்பி இருக்கிறார். அவரிடம், ‘‘ஐயோ! நீங்க என்னைப் புரிஞ்சுக்கோங்கண்ணே. அவர் போனை டெல்லி ஆட்கள் டேப் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நான் போனை எடுத்துப் பேசினா, அவருக்குப் பிரச்னை ஆகிடும்ணே! அவர் நன்மைக்காகத்தான் நான் பேசலை. அவர் பாதுகாப்பா இருக்கணும். அதுதான் எனக்கு வேண்டும்.போய்ச் சொல்லுங்கண்ணே’’ என்றாராம் எடப்பாடி.
எடப்பாடி மனதில் நினைப்பதை அப்படியே செய்து முடிப்பவராகக் கருதப்படுகிறார், மின்துறை அமைச்சர் தங்கமணி. அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான ‘நமது எம்.ஜி.ஆர்’, தொடர்ச்சியாக மத்திய அரசை விமர்சனம் செய்து வந்த நேரத்தில், அதன் ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் மருது அழகுராஜைக் கடுமையாகப் பேசி இருக்கிறார் தங்கமணி. ஆனால், ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தபோது வாழ்த்துச் செய்தி அனுப்பிய எடப்பாடி, மருது அழகுராஜைக் கூப்பிட்டுப் பாராட்டு மழை பொழிந்தாராம்.
தினகரனின் தீவிர விசுவாசிகள் முதல்வரைப் பார்க்கப் போனால், ‘‘நான் தனியா எதையும் செய்யறது இல்லைங்க. டெல்லியில சொல்றாங்க, அதைச் செய்யறேன். கட்சியையும் ஆட்சியையும் காப்பாத்தணும் இல்லைங்களா?’’ என்பாராம். சீனியர் அமைச்சர்கள் சிலரிடமோ, ‘‘சின்னம்மா என்ன சொல்றாங்களோ, அதைத்தான் செய்யறேன். ஓ.பி.எஸ் செய்த துரோகத்துக்கும் சேர்த்து விசுவாசத்தைக் காட்ட வேண்டிய இடத்துல நான் இருக்கேன்’’ என்பாராம். குறிப்பாக தினகரனின் வலதுகரமாகக் கருதப்படும் எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வனும் எடப்பாடியும் அடிக்கடி போனில் பேசுகிறார்கள். ‘‘பழனியண்ணே… நீங்க செய்யறது சரி இல்லீங்கண்ணே’’ என இவர் உருகுவதும், ‘‘தங்கம்… நான் சொன்னாக் கேளு தங்கம்’’ என அவர் மருகுவதும் பல நாள் தொடர்கதை.
தினகரன் ஆதரவாளர்களின் ஸ்கோர் எகிறுவதாக ஒரு பக்கம் செய்திகள் வந்துகொண்டிருக்க, ‘‘இப்போது அவர் பக்கம் இருப்பது வெறும் ஏழு எம்.எல்.ஏ-க்கள்தான்’’ என அடித்துச் சொல்கிறாராம் எடப்பாடி. தினகரன் ஆதரவாளர்கள் எனச் சொல்லப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் லிஸ்ட் எடுத்து, அவர்களோடு தனித்தனியாகப் பேசி, ஆக வேண்டியதைச் செய்து கொடுத்து விட்டாராம் எடப்பாடி. அதனால் அவர்கள் தினகரனோடு தொடர்பில் இருந்தாலும், மனதுக்குள் எடப்பாடியை ஃபிரேம் போட்டு மாட்டி வைத்திருக்கிறார்களாம்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை, ஜூலை 15-ம் தேதி மன்னார்குடியில் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டார், சசிகலாவின் தம்பி திவாகரன். அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ், துரைக்கண்ணு உள்பட ஏழு பேர் இந்த விழா ஏற்பாடுகளில் தோள் கொடுத்தார்கள். ‘‘முதல்வரும் இந்த விழாவுக்கு வருகிறார்’’ என்று திவாகரன் அவர்களிடம் சொல்ல, ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்தன. மேடை ஏற்பாடுகள் தீவிரம் அடைந்த நேரத்தில் இந்த ஏழு அமைச்சர்களையும் கூப்பிட்டார் எடப்பாடி. ‘‘யாரைக் கேட்டுக்கொண்டு இந்த விழாவில் பங்கேற்க ஒப்புக்கொண்டீர்கள்? நீங்கள் யாரும் போகக்கூடாது. மீறிப் போனால் நடப்பதே வேறு’’ என்று சீறினாராம். அமைச்சர்கள் குழப்பத்தோடு ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துக்கொண்டு, ‘‘நீங்களும் வருவதாக திவாகரன் சொன்னாரே’’ என்றனராம். ‘‘அவர் சொல்வாரு… நான் சொன்னேனா?’’ என்று கேட்டிருக்கிறார் எடப்பாடி. அவர் இவ்வளவு குரல் உயர்த்திப் பேசி யாரும் பார்த்ததில்லை. ‘‘துணைப் பொதுச்செயலாளரா நியமிக்கப்பட்ட தினகரனையே நாம ஒதுக்கி வெச்சிருக்கிறதா சொல்லி இருக்கிறோம். திவாகரன் கட்சியிலயே இல்லை. அவர் நடத்தற விழாவுக்கு அமைச்சர்கள் போனா, ஆட்சிக்கே ஆபத்து. புரிஞ்சுக்கோங்க. இந்த விழா நடக்கக்கூடாது’’ என்று கறாராகச் சொன்னாராம் எடப்பாடி. விழா ரத்தானது. ‘இவரிடம் கேட்டுவிட்டுத்தானே எல்லா ஏற்பாடுகளையும் ஆரம்பித்தோம்’ எனத் திவாகரன் தரப்புக் குழம்பிக்கொண்டிருக்கிறது.
எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார், ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் மாஃபா பாண்டியராஜன். இதுபற்றி பேச்சு வந்தபோது, ‘‘அவங்க என்ன ரகசிய வாக்கெடுப்புக் கேட்கறது? நாளைக்கே என்ன பிரச்னை வந்தாலும், நானே ரகசிய வாக்கெடுப்புதான் கேட்பேன். வெளிப்படையா ஆதரிக்கச் சொன்னா 122 ஓட்டுகள் கிடைக்கும். ரகசிய வாக்கெடுப்பு வச்சா எனக்கு 150 ஓட்டுகள் கிடைக்கும். ஆட்சி கவிழ்ந்தால் திரும்ப சீட்டு கிடைக்குமா, ஜெயிப்போமாங்கற கவலை நமக்கு மட்டும்தானா இருக்கு? எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கும்தானே!’’ என்று சொல்லி அதிர வைத்தாராம்.
சசிகலா குடும்பத்தில் மிக முக்கியமான ஒரு பிரமுகர். சமீபத்திய ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் டிரான்ஸ்ஃபர்களில் சில சிபாரிசுகளை அவர் செய்திருக்கிறார். ஆனால், அவர்களில் பலருக்கு இப்போது இருப்பதைவிட மோசமான டம்மி பதவிகளே கிடைத்திருக்கின்றன. ‘உள்ளதும் போச்சே’ என்று அவர்கள் புலம்ப, எடப்பாடியை டென்ஷனோடு அணுகினாராம் அந்தப் பிரமுகர். ‘‘என் கையில எதுவுமே இல்லைண்ணே. லிஸ்ட்டே டெல்லியில இருந்துதான் வருது. நீங்க வேணும்னா டெல்லியில கேட்டுக்கோங்க. சந்தேகமா இருந்தா, தலைமைச் செயலாளர்கிட்டக் கேளுங்க’’ என்று பணிவாகப் பதில் சொன்னாராம் எடப்பாடி. ‘விவேகம்’ இல்லாமல் இவரிடம் சிபாரிசுக்கு வந்தோமோ என அந்தப் பிரமுகர் அமைதியாகிவிட்டார்.
முதல்வர் பதவி பற்றி, ‘‘இந்த நாற்காலியில் அமர்ந்தால், மண்புழுவைக்கூட கொத்திக் கொத்தி நல்ல பாம்பு ஆக்கிடு வாங்க’’ என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்திருக்கிறார் எடப்பாடி. தான் மண்புழு இல்லை என ‘யாருக்கோ’ நிரூபிக்கிறாரோ!

Advertisements
%d bloggers like this: