இஞ்சி சாறு வைக்குமே ஜோரு

இஞ்சிக்கு அஞ்சாது எதுவும் இல்லை’ என்பது, சித்த மருத்துவ தத்துவம். மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை, தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்வதால், உணவும் மருந்தாகி விடும். சக்தி நிறைந்த இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு தான் பயன்படுத்த வேண்டும்.

பசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரண பிரச்னைகளுக்கு, இஞ்சி ஒரு நிவாரணி. இது, “ஆன்டி ஆக்சிடென்ட்’ போன்று செயல்பட்டு, ஆயுளை அதிகரிக்க செய்கிறது. சித்த மருத்துவத்தில், எந்த மாதிரியான மருந்தாக இருந்தாலும், அம்மருந்தில் பெரும்பாலும் இஞ்சி இடம் பிடித்திருக்கும். இஞ்சி, காய்ந்து சுக்கு ஆன பிறகு, அதன் பயன்பாடு அதிகம்.
உஷ்ணப்படுத்தும் குணம் இருந்தாலும், கபம், வாத பிரச்னையை போக்குகிறது. இஞ்சிக்கு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு. குடலில் சேரும் கிருமிகளை அழிக்கும்; கல்லீரலை சுத்தப்படுத்தும். மலச்சிக்கல், வயிற்று வலி ஏற்பட்டால், இஞ்சி சாறில் சிறிது உப்பு கலந்து குடிக்க வேண்டும்.
பசிக்கு உறுதி: பசி எடுக்காதவர்கள், இஞ்சியுடன், கொத்தமல்லி சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஜலதோஷம் குணமாக, இஞ்சி கஷாயம் குடிக்க வேண்டும். தொண்டை வலிக்கும், இஞ்சி ஒரு மருந்து தான். பித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்பட்டால், சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட வேண்டும்.
இஞ்சியை, அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக் கூடாது. தினமும், 5 மி.லி., அளவு இஞ்சி சாறை, தேனுடன் கலந்து பருக வேண்டும் அல்லது தோல் நீக்கிய இஞ்சியை சிறு துண்டுகளாக்கி, தேனுடன் கலந்து தேன் ஊறலாக சாப்பிட வேண்டும். காலையில் இவ்வாறு சாப்பிட்டால், நாள் முழுக்க ஜீரண சக்தி இருக்கும்.
இஞ்சி சாறை, பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும்; உடம்பு இளைக்கும். சாறில், வெல்லம் கலந்து சாப்பிட்டால், வாதக் கோளாறு நீங்கும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட்டால், பித்தம், அஜீரணம், வாய் துர்நாற்றம் தீரும்; சுறுசுறுப்பு ஏற்படும். இஞ்சியை துவையலாக்கி சாப்பிட்டால், வயிற்று உப்புசம், வயிறு இரைச்சல் தீரும். காலையில், இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால், பித்தத்தால் ஏற்படும் தலை சுற்று நீங்கும்.
பித்தம் நீங்கும்: இஞ்சி, திரிகடுகு, ஏலம், அதிமதுரம், சீரகம் சந்தனத்தூள் ஆகியவை சிறிதளவு எடுத்து சிதைத்து, தண்ணீரில் போட்டு காய்ச்சி, நீர் சற்று வற்றியதும் எடுத்து, தினமும், ஐந்து வேளை உட்கொண்டு வந்தால், அதிகமான பித்தம் சரியாகும்.
இஞ்சியை வாயில் மென்று உமிழ்நீருடன் விழுங்கினால், தொண்டைப் புண், குரல் கம்மல் நீங்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள், இஞ்சிசாறும், கற்கண்டும் சேர்த்து குடித்து வந்தால் கட்டுப்படும்.
இஞ்சியை தோல் நீக்கி தேனில் ஊறவைத்து நாள்தோறும் உட்கொண்டு வந்தால், நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழலாம்.
இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து, ஒரு நாளைக்கு, 4 முறை சாப்பிட்டு வர இருமல் குறையும். தலை வலியுள்ளவர்கள், இஞ்சியை தண்ணீர் விட்டு உரசி தலையில் பற்றுபோட தலை வலி நீங்கும். இஞ்சிச்சாறு, மாதுளம்பூச்சாறு தேன் ஆகியவற்றை ஒரே அளவாக எடுத்து, வேளைக்கு 35 மி.லி., வீதம் குடித்து வந்தால், தொடர் இருமல் சரியாகும். ஆக, இஞ்சிக்கு அஞ்சாது எதுவும் இல்லை என்பது உண்மை தானே.

%d bloggers like this: